🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வறுமையிலும் கைவிடாத காதலும், அன்பும் கொண்ட பேரழகி ஜென்னி!

"அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது.”

"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்குக் கிடைத்த வரம்" 

இப்படி உருகி உருகி காதல் பேசியது வேறுயாருமல்ல மானுட சமூகத்தையே புரட்டிப்போட்ட பொதுவுடமை சித்தாந்தம் தந்த கார்ல் மார்க்ஸ் தான். கார்ல் மார்க்ஸ் எனும் சாமானியன் மீது அள்ள அள்ளக் குறையாத அன்பையும், எத்தகைய நெருக்கடியிலும் விலகாத நேசமும் தந்து, மார்க்சின் சிந்தையிலும் உணர்விலும் இரண்டறக் கலந்து, தனிப்பட்ட வாழ்க்கையை முழுமையாக்கி, சமூகம் குறித்த சிந்தனையை கூர் தீட்டிக் கொள்ள உறுதுணையாக இருந்து, மானித குலத்தின் மகத்தான மாமனிதன் கார்ல் மார்க்ஸ் என மானிட உலகம் கொண்டாடுமளவிற்கு காரணமாக அமைந்தவர் "ஜென்னி" என்று அழைக்கப்படும் வான் வெசுட்பலீன் என்ற பெண்ணின் மீது கொண்ட காதலைத்தவிர வேறொன்றுமில்லை.

கார்ல் மார்க்ஸ் தான் வாழ்நாள் எல்லாம் கசிந்துருகும் அளவுக்கு பேரழகி தான் ஜென்னி. அவளே அன்பின் வடிவாகவும் இருந்தால் ஒரு ஆண் எத்தனை முறை வேண்டுமானாலும் சகலாம் அல்லவா?. கார்ல் மார்க்ஸின் காணச்சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி கேசம், தோலின் நிறம் என எல்லாமே கறுப்பு. அதுமட்டுமா?, ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர் வேறு. ஜென்னியோ ரைன்லாந்தின் மிகச் சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானியப் பெண். பால்ய வயதில் அடாவடியாகச் சுற்றித்திரிந்த மார்க்ஸோ வறுமையில் சிக்கித் தவித்தவர். எதிர்காலத்தில் மிகச்சிறந்த அறிஞனாவதற்கான எந்தவொரு அறிகுறியும் அப்போது அவரிடம் இல்லை. ஆனால், அவரின் காதலி ஜென்னியின் குடும்பம் பணக்காரக் குடும்பம். இத்தனை தடைகள் போதாதென்று ஜென்னி மார்க்ஸை விட நான்கு வயது மூத்தவள் வேறு. 

கல்வியறிவும், நற்குணங்களும் நிரம்பிய பேரழகியாக திகழ்ந்த ஜென்னியை மணக்க அன்றைய பிரஷ்யாவின் பிரபுக்களும், பெரும் செல்வந்தர்களும் போட்டியிட்டதாக ஜென்னியின் சுயசரிதையை எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடும்போது, சமூக, பொருளாதார அந்தஸ்து, இனம், கல்வி, தோற்றம் என அனைத்திலுமே இரு துருவங்களாக திகழ்ந்த கார்ல் மார்க்சுக்கும் ஜென்னிக்கும் இடையே காதல் நெருப்பு பற்றியதும், அந்த காதல் திருமணத்தில் கைகூடியதும் எப்படி?

காரல் மார்க்ஸ் - ஜென்னியின் காதல் வாழ்க்கை நம்மையெல்லாம் உருக வைத்த உலக சினிமாக்களை எல்லாம் விஞ்சியது. இப்படியும் கூட ஒரு காதல் இருக்குமா? காதலர்கள் இருப்பார்களா? என்று நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் கடந்த நூற்றாண்டில் காதல் பெறுவாழ்வு வாழ்ந்த காதல் தம்பதிகள்.

ஜென்னியின் தந்தை லுட்விக் வான் வெசுட்பலீனும், மார்க்ஸின் தந்தையும் பக்கத்து வீட்டுக்காரர்கள் மட்டுமல்ல நல்ல நண்பர்களும் கூட. யூதரான மார்க்ஸின் தந்தை அன்று யூதர்கள் மீதான ஜெர்மானியர்களின் வெறுப்பின் காரணமாக பிழைத்திருக்க வேண்டி கிருஸ்தவத்தை தழுவியவர். லுட்விக் குடும்பமே ஷேக்ஸ்பியரின் கவிதைகள் மீது காதல் கொண்டது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் ஷேக்ஸ்பியரே மையப்பொருள். சிறுவயது முதலே லுட்விக் இல்லம் செல்லும் மார்ஸுக்கு லுட்விக் இல்லத்தில் நடக்கும் விவாதங்களில் பெறும் ஈர்ப்பு. இதன் தாக்கம் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கச் சொல்லும் அளவுக்கு அவரின் கவிதை மீது தீராக் காதல் கொண்டவர் மார்க்ஸ். மார்க்ஸும், ஜென்னியின் தந்தை லுட்விக்கும் இணைந்து ஷேக்ஸ்பியரின் கவிதைகளைப் பாடிப் போற்றுவார்கள். அப்போது ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பித் ததும்பும். தன்னையும் மீறி மார்க்ஸின் கவிதாவேசம் பீறிட்டுப் பொங்கும். இதுவும் மார்க்ஸின் மீதான ஜென்னியின் காதலுக்கு அடிநாதமாக விளங்கியது.

ஜென்னியின் தந்தைக்கு மிகவும் பிடித்தமானவராக மார்க்ஸ் இருந்ததால் காதலுக்கு எதிர்ப்பில்லை. ஆனால், எதிர்ப்பு மார்க்ஸின் வீட்டில் இருந்து கிளம்பியது. அதற்கு காரணம், மார்க்ஸ் குடும்பத்தினர் கிறிஸ்தவர்களாக மதம் மாறியிருந்தாலும் அடிப்படையில் அவர்கள் யூதர்களே. ஒரு யூதன், ஜெர்மானிய பெண்ணை மணந்துகொள்வதா என மார்க்ஸின் தாய் எதிர்க்கிறார்.

 கார்ல் மார்க்ஸ் - ஜென்னி இள வயது காதல்

சுயமாக சம்பாதிக்கும் வரை விவாகம் செய்வதில்லை என்று தீர்மானித்த கார்ல் மார்க்ஸ், அதற்காக பெர்லின் பல்கலைக் கழகத்திற்கு உயர்கல்வி பயிலச் சென்றுவிட்டார். கல்லூரிக்குச் சென்றவுடன், மதுகுடித்துவிட்டு ஜென்னிக்காக பாட்டு, கவிதை, கடிதம் என அனைத்தையும் எழுதிவிட்டு ஜென்னியின் பதில் கடிதத்துக்காக காத்திருப்பார். இந்த கால கட்டத்தில் இருவரும் பரிமாறிக் கொண்ட கடிதங்கள் அவர்களது ஆழமான அன்பை வெளிப்படுத்தின. கார்ல் மார்க்ஸ் எழுதிய கவிதைகள் ஜென்னி மீது அவருக்கிருந்த அளவிலா அன்பை வெளிப்படுத்துபவையாக இருந்தன. ஜென்னியைத் திருமணம் செய்ய வேண்டும் எனில் முதலில் ஒரு வேலை. அதன்மூலம் சிறு வருவாய் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார் மார்க்ஸ். "எனக்காக நீ காத்திரு. வேலை கிடைத்தவுடன் உன்னை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்'' என்று ஜென்னியிடம் தெரிவிக்கிறார். ஜென்னியும் காத்திருக்கிறார். எவ்வளவு நாள்கள் தெரியுமா? ஒரு மாதமோ, ஓராண்டோ அல்ல,  7 ஆண்டுகள்.

மார்க்ஸ்-ஜென்னியின் தேன் நிலவுக் கதைகள் சுவராஸ்யம் மிக்கவை. திருமணம் முடிந்து தேனிலவுக்குச் சென்ற மார்க்ஸ் தன்னுடன் 10 பெட்டிகள் நிறைய புத்தகங்களை எடுத்துச் சென்றுள்ளார். அந்தப் புத்தகங்களை ஜென்னியும் மார்க்ஸோடு அமர்ந்து வாசித்திருக்கிறார். அந்த அளவுக்கு மார்க்ஸின் மீது ஜென்னிக்குக் காதல்! 

காதலுக்காக பெரும் விலை கொடுத்த ஜென்னி:

வளமான பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்து, பெரும் செல்வந்தர்களை எல்லாம் புறக்கணித்து, கார்ல் மார்க்ஸ் மீது பேரன்பு கொண்ட ஜென்னி தன் காதலுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டி வந்தது. ஜென்னி குடும்பத்தினர் கொண்டிருந்த கனவுகளுக்கு மாறாக ஜென்னி - கார்ல் மார்க்ஸ் திருமணம் எளிமையாகவே நடந்தேறியது. குடும்ப வாழ்க்கையும் அப்படியே. இன்னும் சொல்லப் போனால் கார்ல் மார்க்ஸ் - ஜென்னி குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது.

பொருளாதார கொள்கைகளிலே நிபுணத்துவம் பெற்று, தொழிலாளர் மேன்மைக்காக பொதுவுடைமை சித்தாந்தத்தை வகுத்தளித்த கார்ல் மார்க்ஸ் தனது சொந்த குடும்பத்தின் நிதி மேலாண்மையில் அவ்வளவு சிறப்பானவராக இருக்கவில்லை. இதனால், குடும்பத்தில் வறுமை நிலையைத் தவிர்க்க முடியவில்லை.

போதாக்குறைக்கு, அன்றைய ஐரோப்பாவில் நிலவிய மன்னராட்சிக்கு எதிரான கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் அவரை ஓரிடத்தில் நிலையாக இருக்க விடாமல் அலைக்கழித்தன. பிரஷ்யா, பெல்ஜியம், பிரான்ஸ், பிரிட்டன் என ஒவ்வொரு நாடாக குடும்பத்துடன் அவர் அவ்வப்போது இடம்பெயர நேரிட்டது. ஒரு கட்டத்தில் அவர் பிறந்த பிரஷ்யாவே அவரது குடியுரிமையை ரத்து செய்ய, நாடற்ற ஏதிலி என்னும் நிலைக்கும் கார்ல் மார்க்ஸ் ஆளானார்.

வறுமை, நோய்க்கு 4 குழந்தைகளைப் பறிகொடுத்த ஜென்னி:

வறுமை, தொடர்ச்சியான நாடு விட்டு நாடு இடப்பெயர்வு, சுகாதாரமற்ற சிறிய வீட்டில் வாசம், வீட்டைச் சுற்றிலும் கடன் சுமை என வாழ்க்கை நெடுக புயல் அடித்தாலும் கூட கார்ல் மார்க்ஸ் - ஜென்னி இருவருக்கும் இடையிலான காதல் மட்டும் கொஞ்சமும் குறையவில்லை. "காதல் மற்றும் மூலதனம்: கார்ல் மற்றும் ஜென்னி மார்க்ஸ் மற்றும் புரட்சியின் தோற்றம்" என்ற தனது நூலில் எழுத்தாளர் மேரி கேபிரியேல், கர்ப்பிணியாக இருந்த போதிலும் மார்க்சின் பணிகளுக்காக ஜென்னி எவ்வாறு கஷ்டப்பட்டு பயணங்கள் மேற்கொண்டு நிதி திரட்டினார் என்பதை உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

கார்ல் மார்க்ஸ் - ஜென்னி தம்பதியருக்கு 7 குழந்தைகள் பிறந்த போதிலும் அதில் 4 குழந்தைகளை வறுமையும், நோயும் எடுத்துக் கொண்டுவிட்டன. குழந்தை குடிப்பதற்குக் கொடுக்க பால் கூட இல்லாத சூழலில் மருத்துவ சிகிச்சைக்கு எங்கே போவது? 3 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 4 குழந்தைகளை பறிகொடுத்துவிட்ட மார்க்ஸ் - ஜென்னி தம்பதியர் 3 பெண் குழந்தைகளை மட்டுமே வளர்த்து பெரியவர்களாக்க முடிந்தது.

1850-ம் ஆண்டு மே 20-ம் தேதி வடக்கு லண்டனில் குடியிருந்த போது குடும்ப நண்பர் யோஸிப் வெய்டெமையரிடம் உதவி கேட்டு ஜென்னி எழுதிய கடிதத்தில், "நான்காவதாக பிறந்த குழந்தை இந்த உலகத்திற்கு வந்த நாள் முதல் ஒரு நாள் கூட 2, 3 மணி நேரத்திற்கு மேல் நிம்மதியாக உறங்கியதில்லை. அண்மையில் அவனுக்கு கடுமையான வலிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே அவன் எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இருந்த வேதனையில் அவன் பலமாக உறிஞ்சியதன் விளைவாக எனது மார்பின் தோல் வெடித்து, நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் இரத்தம் கொட்டியது" என்ற ஜென்னி மார்க்ஸின் வரிகளே போதும் அவர்களது குடும்ப நிலையை உரைக்க.

மற்றொரு கடிதத்தில், "பிறக்கும் போது அந்தக் குழந்தைக்கு தொட்டில் இல்லை. இறக்கும் போது சவப்பெட்டி வாங்குவது கூட மிகவும் கஷ்டமாகிப் போனது" என்று தனது இரண்டாவது குழந்தை இறந்ததைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் ஜென்னி.

ஜென்னி அரசியல் சிந்தனையாளர், எழுத்தாளரும் கூட:

கண் முன்னே குழந்தைகள் உயிருக்குப் போராடும் கொடுமையை ஒரு தாயாக அனுபவித்த போதிலும் கூட கார்ல் மார்க்ஸ் மீதான ஜென்னியின் அன்பு துளியளவில் குறைந்ததில்லை. கார்ல் மார்க்ஸ் எதற்கும் கலங்காமல் தடையின்றி தொடர்ந்து இயங்க ஜென்னி உறுதுணையாக இருந்தார்.

குறிப்பாக, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது போல் யாராலும் செய்ய முடியாத ஒன்றை ஜென்னி மட்டுமே செய்தார். அது அவரது கணவர் மார்க்ஸின் கையெழுத்தை புரிந்து கொள்வது.மார்க்ஸின் கையெழுத்தை புரிந்து கொள்ள முடியாமல் பல பதிப்பகங்களும், பத்திரிகை செய்தி ஆசிரியர்களும் தவித்தது உண்டு. ஆகவே, மார்க்ஸின் எழுத்துகளை முதலில் ஜென்னி படித்து பின்னர் தன் கைப்பட எழுதி பதிப்பகங்களுக்கு அனுப்பி வந்துள்ளார்.

ஆனால், மார்க்ஸின் மொழிபெயர்ப்பாளர் என்கிற அளவில் ஜென்னியை சுருக்கிப் பார்ப்பது, வரலாற்றில் அவரது முக்கியத்துவதை குறைத்து மதிப்பிடுவதாகவே அமையும். அது அவருக்குச் செய்யும் அநீதியாகவே இருக்கும்.

ஏனெனில், ஜென்னி ஓர் அரசியல் சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளரும் கூட. கணவர் மார்க்சுடன் அரசியல்வாதிகள், தத்துவ அறிஞர்களுடன் ஜென்னியும் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டுள்ளார்.

கார்ல் மார்க்சும், அவரது ஆருயிர் நண்பர் பிரடெரிக் ஏங்கல்சும் இணைந்து 1847-ம் ஆண்டு நிறுவிய புரட்சிகர இயக்கமான கம்யூனிஸ்ட் லீக்கில் முதல் உறுப்பினர் ஜென்னி மார்க்ஸ்தான். அதுவே பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியது.

கார்ல் மார்க்சுக்கு பெரும்புகழ் சேர்த்த மூலதனம்:

கணவர் மார்க்ஸின் கரங்களை வலுப்படுத்த, தனிப்பட்ட முறையில் ஜென்னி செய்த தியாகங்களை பல வரலாற்றறிஞர்கள் எடுத்துக் காட்டுகிற்ர்கள். அன்றைய பிரஷ்ய சாம்ராஜ்யத்தில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த அவரால், ஆடம்பரமும் செல்வமும் கொண்ட வாழ்க்கையை எளிதில் பெற்றிருக்க முடியும். ஆனால், அதற்குப் பதிலாக உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக போராட தனது வாழ்க்கையையே ஜென்னி அர்ப்பணித்துக் கொண்டார்.

கார்ல் மார்க்சுக்கு பெரும் புகழ் சேர்த்த, மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர் என்று இருபதாம் நூற்றாண்டில் அவர் கொண்டாடப்படக் காரணமான "கேபிட்டல்" நூலின் முதல் தொகுதி 1867-ம் ஆண்டு வெளியான போது பெரியளவில் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டை வடிவமைத்ததில் மார்க்ஸின் கொள்கைகளுக்கு பெரும் பங்கு உண்டு. லெனின், ஸ்டாலின், மாவோ என பல தலைவர்களைத் தந்தது அவரது சிந்தாந்தம்தான். இன்னும் உலகம் முழுவதும் பல தலைவர்கள், சிந்தனையாளர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரையும் கார்ல் மார்க்ஸ் வசீகரித்துக் கொண்டே இருக்கிறார்.

ஒருவேளை ஜென்னியை கார்ல் மார்க்ஸ் சந்திக்காமல் போயிருந்தால் இவையெல்லாம் நடக்காமலே கூட போயிருக்கலாம். அந்த அளவுக்கு கார்ல் மார்க்ஸின சிந்தனையிலும், உணர்விலும் இரண்டறக் கலந்துவிட்டவராகவே ஜென்னி இருந்துள்ளார்.

"ஜென்னி இல்லையெனில் சாமானியனாகவே இருந்திருப்பேன்"

கார்ல் மார்க்ஸ் - ஜென்னி காதல் மண வாழ்க்கை 38 ஆண்டுகள் நீடித்தது. மார்க்சுக்காக பல துன்பங்களையும் துயரங்களையும் ஏற்றுக் கொண்ட ஜென்னி, இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு நோயுற்று படுத்த படுக்கையாக கிடந்தார். ஜென்னி ஓர் அறையிலும், மார்க்ஸ் மற்றொரு அறையிலும் பிரிந்து இருந்தனர். 1881-ம் ஆண்டு ஜென்னி இறந்து, கல்லறையில் அடக்கம் செய்யப்படும் வரையிலும் கூட அவரது உடலைப் பார்க்க மார்க்ஸ் அனுமதிக்கப்படவில்லை. காரணம், மார்க்ஸை நோய்த்தொற்று பீடித்துவிடக் கூடும் என்ற அச்சமே.

அந்த நேரத்தில்தான், உயிருக்கு உயிராக நேசித்த மனைவி ஜென்னிக்கு மார்க்ஸ் இறுதியஞ்சலி கடிதத்தை எழுதுகிறார். அந்த கடிதத்தில்தான் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் இடம்பெற்ற புகழ் பெற்ற வரிகளை அவர் எழுதியுள்ளார்.

"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்குக் கிடைத்த வரம்"

- கார்ல் மார்க்ஸின் இந்த வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை என்பது அவரது வாழ்க்கையைப் படிக்கும் யாருக்கும் புரியும்.

அது காதலின் சின்னமும்தான்!

ஜென்னி இறந்த 2 ஆண்டுகளில் கார்ல் மார்க்ஸூம் மறைந்தார். இருவரது உடலும் வடக்கு லண்டனில் ஹைகேட் சிமெட்டரியில் அருகருகே புதைக்கப்பட்டுள்ளன.

அந்த கல்லறையில் கார்ல் மார்க்ஸின் தலைச் சிற்பம் வடிக்கப்பட்டு, அதில் அவரது பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் புனிதப் பயணம் மேற்கொள்வது போன்றே அந்த கல்லறைக்கு வருகை தருகின்றனர். அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும், கார்ல் மார்க்சுக்கு அருகே மீளாத் துயில் கொண்டுள்ள ஜென்னியும் சிறப்பிக்கப்பட வேண்டியவர், கொண்டாடப்பட வேண்டியவர் என்று.

கார்ல் மார்க்ஸ் - ஜென்னி ஆகிய இருவரும் பொதுவுடைமை சிந்தாந்தத்தின் சின்னம் மட்டுமல்ல, காதலின் அழியா சின்னமாகவும் வாழ்ந்து மறைந்தவர்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.

1881 ஆம் ஆண்டு டிசம்பர் 2 அன்று தனது 67 வது வயதில் லண்டனில் மரணமடைந்தார். ஜென்னியின் கல்லறையில் பூ வைத்து கண்ணீர் சிந்திவிட்டு சமுதாய பணிக்காக வந்த மார்க்ஸ் பற்றி குறிப்பிடும் அவரது நண்பர் ஏங்கெல்ஸ், "ஜென்னியின் மரணத்துக்குப் பின் மார்க்ஸ் ஓர் ஆவியாக மட்டும்தான் இருக்கிறார். அவர் ஒருவேளை தன் பால்ய வயதில் ஜென்னியிடம் உரையாடிய ஷேக்ஸ்பியரின் கதைகளை கேட்டுக் கொண்டிருப்பாரோ?’’.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved