🔴 LIVE | முப்பெரும் விழா 2023


யுகப்புரட்சி நாயகன் தோழர் விளாமிதிர் லெனின் நூற்றாண்டு நினைவுநாள்!

ஜனவரி 21, தோழர் லெனின் நூறாவது ஆண்டு நினைவு தினம். 1924ஆம் ஆண்டு இதே நாள் லெனின் எனும் மாபெரும் ஆசான் தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டார். காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ஆகியோரின் கோட்பாடுகளை செழுமைப்படுத்தியது மட்டுமல்ல; சோவியத் புரட்சி மூலம் அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர் லெனின். ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு விழா உலகம் முழுதும் கொண்டாடிய பொழுது அதில் லெனின் அவர்களின் மகத்தான பங்கும் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்தது.

எனவேதான், அவர் அன்றும், இன்றும் உலக உழைப்பாளி மக்களின் தன்னிகரற்ற தலைவராகவும் வழிகாட்டியாகவும் திகழ்கிறார். மார்க்ஸ் காலத்திலேயே தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு உருவானது என்றாலும் லெனின்தான் உலகின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு தலைசிறந்த தொழிலாளி வர்க்கத்தின் கட்சியை உருவாக்க லெனின் எடுத்த முயற்சிகள் அசாதாரணமானவை.

கட்சி உறுப்பினர்களின் தரம்

1902-03ஆம் ஆண்டுகளில் கட்சி உருவாக்கும் முயற்சிகளின் பொழுது லெனின் மூன்று முக்கியக் கோட்பாடுகளில் சமரசமின்றி போராடினார். 1) தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம். 2) தொழிலாளி - விவசாயிகள் வர்க்க ஒற்றுமை. 3) கட்சி உறுப்பினரின் தகுதி. 

அன்று ஆர்எஸ்டிஎல்பி (RSDLP) எனும் பெயரில் இயங்கிய போல்ஷ்விக் கட்சியின் கொள்கைகள் மற்றும் அமைப்பு விதிகளை உருவாக்கும் விவாதங்களில் இந்த மூன்று கோட்பாடுகளுக்காகவும் லெனின் சமரசமற்றுப் போராடினார். பிளக்கனவ் முன்வைத்த கட்சித் திட்டத்தின் நகலில், கட்சியின் வர்க்கக் குணாம்சம் குறித்து மேலோட்டமாக இருந்ததை லெனின் கடுமையாக ஆட்சேபித்தார். அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளி வர்க்கக் கட்சி என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட வேண்டும் என வாதாடினார். அதே போல, ரஷ்ய சமூகம் முதலாளித்துவ சமூகமாக உள்ளது எனும் பிளக்கனவின் மதிப்பீடையும் லெனின் விமர்சித்தார். அன்றைய ரஷ்ய சமூகம் முதலாளித்துவம் மட்டுமல்ல; நிலப்பிரபுத்துவம் மற்றும் சிறு தொழில் உற்பத்தி முறையையும் கொண்டிருந்தது என்பதை நிலைநாட்டினார்.

தான் செயல்படும் சமூகத்தை பற்றிய துல்லியமான சித்தாந்த மதிப்பீடை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருக்க வேண்டும் என்பதில் லெனின் அவர்களுக்கு இருந்த முனைப்பை இது வெளிப்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாகவே நவீன சமூக புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தையும் தொழிலாளி விவசாய வர்க்கங்களின் ஒற்றுமைக்கான தேவை குறித்தும் லெனின் தொடர்ந்து வலியுறுத்தினார்.

கட்சி உறுப்பினரின் தகுதி குறித்து ஒரு மிகப்பெரிய கோட்பாட்டுப் போராட்டத்தை லெனின் நடத்தினார் எனில் மிகை அல்ல. கட்சி உறுப்பினராக இருக்க என்ன தகுதிகளை லெனின் முன் வைத்தார்? கட்சி உறுப்பினர் கட்சியின் திட்டத்தை ஏற்றுகொள்ள வேண்டும்; கட்சியின் ஏதாவது ஒரு அமைப்பில் நேரடியாக இணைந்து செயலாற்ற வேண்டும்; கட்சிக்கு பொருளாதார உதவிகளை செய்ய வேண்டும். (பக் 474/Collected works 6). இதற்கு மாறாக வேலை நிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு தொழிலாளியும் கட்சி உறுப்பினர்தான் என வாதிட்டார் மார்ட்டோவ். இதனை மறுத்தார் லெனின். ஒவ்வொரு வேலை நிறுத்தத்தையும் கட்சி ஆதரிக்க வேண்டும். ஆனால் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது மட்டுமே கட்சி உறுப்பினர் ஆவதற்கு தகுதி அல்ல. கட்சி உறுப்பினருக்கு சில கடமைகள் உள்ளன என்பதை லெனின் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் கட்சிக்கு கடமைப்பட்டவர்கள்; அதே போல ஒவ்வொரு உறுப்பினருக்கும் கட்சி கடமைப்பட்டது என்றார் லெனின்.

கட்சியின் தரம் அதன் உறுப்பினர்களின் தரத்தை பொறுத்தே அமைகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உறுப்பினர்களின் தரத்தை உயர்த்துவதன் முக்கியத்துவத்தை பிளீனம் அழுத்தமாக முன்வைத்துள்ளது. கட்சியின் கிளைகளையும் உறுப்பினர்களையும் தொடர்ச்சியாக செயல்பட வைக்கும் மிகப்பெரிய கடமையை பிளீனம் சுட்டிக்காட்டியது. அந்தத் திசை வழியில் பயணிக்கும் நமக்கு லெனின் அவர்களின் கட்சி ஸ்தாபனம் பற்றிய கோட்பாடுகள் மிகப்பெரிய வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நிதி மூலதனம்-லெனினின் ஆய்வு

லெனின் அவர்களின் படைப்பாக்கத் திறமை ஈடுஇணையற்றது. மார்க்ஸ் காலத்தில் இருந்த முதலாளித்துவம் அதன் அடுத்த கட்டமான ஏகபோக முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய நிலைக்கு மாறியதை தனது ஆய்வுகள் மூலம் துல்லியமாகக் கண்டறிந்தார். இது குறித்து அவர் பல தரவுகளை ஆய்வு செய்தார். “ஏகாதிபத்தியம் பற்றிய குறிப்பு நூல்கள்” (Note books on imperialism) எனப்படும் பன்முகத் தன்மை கொண்ட இந்த தரவுகளின் அளவு நம்மை மலைக்க வைப்பவை. இவற்றை அடிப்படையாகக் கொண்டே தனது புகழ்மிக்க “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” எனும் நூலை எழுதினார். ஏகாதிபத்தியத்தின் சில முக்கியக் கூறுகளில் ஒன்று தொழில் மூலதனமும் வங்கி மூலதனமும் ஒன்றிணைந்து “நிதி மூலதனம்” உருவாவது ஆகும்.

“ஏகாதிபத்தியத்தின் முக்கிய அம்சம் தொழில் மூலதனம் அல்ல; மாறாக நிதி மூலதனம்” என்கிறார் லெனின். (பக் 268/Collected works 22). நிதி மூலதனம் மேலும் மேலும் அசமத்துவத்தை வளர்ப்பதாலும் மக்களை துன்பங்கள் நிறைந்த வாழ்வில் தள்ளிவிடுவதாலும் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டம் எனவும் சோசலிச புரட்சியின் தொடக்க காலம் எனவும் லெனின் கணித்தார். இதுவும் இது போன்ற பல ஆய்வுகளின் அடிப்படையில்தான் சோசலிசம் ஒரு தனிப்பட்ட தேசத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக லெனின் மதிப்பிட்டார். முதலாளித்துவத்தின் பலவீனமான கண்ணியாக விளங்கும் ரஷ்யா போன்ற ஒரு பின்தங்கிய தேசத்தில் கூட அகநிலை காரணியான கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் மக்களும் தயாராக இருந்தால் புரட்சி சாத்தியமே எனும் கருத்தை முன்வைத்தார். அதனை நடைமுறையில் வெற்றியும் கண்டார்.

உலக அளவில் கடந்த 60 ஆண்டுகளாகவும் இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாகவும் நிதி மூலதனம் மேலும் அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. லெனின் காலத்தில் இருந்த வங்கி மற்றும் சில நிதி பத்திர வடிவங்கள் மட்டுமல்ல; பங்குச் சந்தை, காப்பீடு, பரஸ்பர நிதிகள், பங்கேற்பு பத்திரங்கள் (Participatory Notes), நாணய பங்குச் சந்தை (Currency Exchanges), Derivatives எனப்படும் ஊக வணிகங்கள் என பல வடிவங்கள் மூலமாக நிதி மூலதனம் செயல்படுகிறது. நிதிமூலதனம் தனது இமாலயக் கொள்ளைக்கு உகந்த வகையில் நவீன தாராளமயக் கொள்கைகளை உருவாக்குகிறது. நிலம், நீர், கடல் வளங்கள், காற்றில் செயல்படும் அலைக்கற்றை என இது வரை மனித சமூகத்திற்கு பொதுவாக இருந்த அனைத்து இயற்கை வளங்களையும் கொள்ளை அடிக்கிறது. இதில் நிதி மூலதனமும் தொழில் மூலதனம் உட்பட அனைத்து மூலதனங்களும் சேர்ந்து செயல்படுகின்றன. எனினும் நிதி மூலதனம்தான் கூடுதல் ஆளுமை செலுத்துகிறது. நிதி மூலதனம் குறித்த லெனின் அவர்களின் ஆய்வு நிகழ்கால முதலாளித்துவத்தை புரிந்து கொள்ள நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

இந்தியா குறித்து லெனின்

புரட்சியைப் பாதுகாக்கும் தனது கடுமையான பணிச் சுமைக்கு இடையேயும் இந்திய விடுதலைப் போராட்டம் குறித்து அக்கறை செலுத்தினார் லெனின். இந்தியாவில் பிரிட்டிஷாரின் நிர்வாகம் என்றாலே அது வன்முறையும் இந்திய வளங்களை கொள்ளை அடிப்பதும்தான் என சாடுகிறார் லெனின். தம்மை நவீன நாகரிகத்தின் பிரதிநிதிகள் என அழைத்துக் கொள்ளும் பிரிட்டிஷார் இந்திய மக்களின் மீது வன்முறையை ஏவும் செங்கிஸ்கான்களாக செயல்படுகின்றனர் எனவும் தம்மை எதிர்ப்பவர்களை சாட்டையடியால் தண்டிக்கிற கொடுமைகளையும் கூட அவர்கள் செய்கின்றனர் எனவும் விமர்சிக்கிறார். இத்தகைய செயல்கள் மேலும் மேலும் இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தை வலுவாக்கும் எனவும் கூறுகிறார். (Collected Work, Vol. 12)

1908ஆம் ஆண்டு பால கங்காதர திலகரின் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய தொழிலாளர்களின் அரசியல் உணர்வைப் பாராட்டிய லெனின் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“இந்திய விடுதலைப் போராட்ட வீரர் திலகருக்கு எதிராக பிரிட்டிஷ் குள்ளநரிகளால் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்து பம்பாயில் வேலை நிறுத்தங்களும் வீதி போராட்டங்களும் நடந்துள்ளன. இந்தியாவிலும் தொழிலாளி வர்க்கம் அரசியல் உணர்வுள்ள போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக இந்தியாவில் பிரிட்டிஷ் அடக்குமுறை ஆட்சி விரை வில் நொறுங்கிவிடும் என்பதில் ஐயமில்லை” என்கிறார்.

1920ஆம் ஆண்டு தனக்கு வாழ்த்து அனுப்பிய “இந்திய புரட்சி சங்கத்திற்கு” நன்றி தெரிவித்து அனுப்பிய பதிலில், இந்திய மக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் “முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதாரிடையே (இந்துக்களிடையே) உருவாகியுள்ள நெருக்கமான ஒற்றுமையை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம்” எனவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். இந்த ஒற்றுமை கிழக்கு திசையின் அனைத்து தேசங்களுக்கும் பரவ வேண்டும் எனவும் தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். (Collected Works Volume 31)

லெனின் எழுதிய எங்கிருந்து தொடங்குவது?, என்ன செய்ய வெண்டும்?, ஓரடி முன்னால் ஈரடி பின்னால், மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று கூறுகளும், பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும், தத்துவார்த்தக் குறிப்புகள், இடதுசாரி சீர்குலைவுவாதம் ஒரு இளம்பிள்ளைக் கோளாறு, ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் முழக்கம் குறித்து, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம், அரசும் புரட்சியும், சமூக புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள், பெண்கள் விடுதலை என பல நூல்கள் சாகா வரம் பெற்றவை எனில் மிகை அல்ல. மார்க்சிய- லெனினியத்தை புரிந்து கொள்ள மட்டுமல்ல; தற்கால இந்தியாவில் உழைக்கும் மக்களின் இயக்கங்களை உருவாக்கிடவும் இந்த நூல்கள் நமக்கு வழிகாட்டியாக அமையும்.

நன்றி
அ.அன்வர் உசேன்,
தீக்கதிர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved