🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சட்டமன்ற தேர்தல் கம்பளத்தாரின் சாதனையும் - சறுக்களும்-1

நீண்ட கால திட்டமிடல், தொலைநோக்குப் பார்வையில்லாமல் திடீரென கம்பளத்தார்கள் இந்த தேர்தலில் களமிறங்கியது சறுக்கல் என்றாலும் ஒரு நல்ல துவக்கம் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள  முடியும்.

குறிப்பாக பெருந்துறை, அந்தியூர், திருச்சுழி, ஆகிய தொகுதிகள் ஓரளவு நம்பிக்கை அளித்துள்ளன. வேடசந்தூர் தொகுதியில் நல்லமுறையில் சமுதாயத்தின் ஆகப்பெரும் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் குறைந்த அளவு வாக்கு வாங்கியது ஏமாற்றமே. இத்தொகுதியிலுள்ள கம்பளத்தார் கிராமம் முழுவதும் ஊர்மந்தைகள் கட்டுப்பாட்டில் இருந்தும், கம்பளத்து வேட்பாளர் மிகக்குறைந்த வாக்குபெற்றது கம்பளத்தார்களின் அரசியல் பார்வை குறித்து சமுதாய அமைப்புகள் தீர ஆராயவேண்டும்.

பெருந்துறை, அந்தியூர், திருச்சுழி தொகுதிகளில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மற்ற தொகுதிகளில் எந்தத் தாக்கமும் சுத்தமாக இல்லை. இதுதவிர, திருச்செங்கோடு, நாமக்கல் தொகுதியில் கள நிலவரம் கூட சரியாக கணிக்கப்படாமல் வேட்பாளர்களை நிறுத்தியது சமுதாயத்திற்கு மிகப்பெரிய பின்னடைவே. அரசியல் கட்சிகள் தவிர்த்து ஏன் சமுதாய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டியதின் அவசியம் என்ன என்பதை விளக்கத்தவறிவிட்டோம். சமூக வளைதளங்களில்கூட நமது பிரச்சாரம் போதுமானதாக இல்லை.

இருந்தாலும் அமைப்புகள் தங்களுக்குள்ள நிர்வாக அமைப்பு, பொருளாதர நிலைக்கேற்ப செயல்பட்டுள்ளன. தொடக்கமுயற்சியாக இருப்பதால் இவற்றையெல்லாம் குறையாக எடுத்துக்கொள்ளாமல், அடுத்தகட்ட அரசியலுக்கான படிக்கல்லாக அமைப்புகள் கருதவேண்டும். பெரிய பெரிய இயக்கங்கள்,  அபரிதமான பொருளாதார பின்புலம், நீண்ட கால அரசியல் அனுபவம், ஏற்கனவே ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்கள் கூட இதே வாக்குகளை சில தொகுதிகளில் வாங்கியுள்ளதை பார்க்கமுடிகிறது. அரசியலில் இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

அரசியலில் கம்பளத்தார்களுக்கு உரிய அங்கீகாரமில்லை என்பது மக்களுக்கு மிகப்பெரிய குறையாக உள்ளது. இதைப்போக்க வேண்டியது அமைப்புகளின் கடமை. சமுதாயத்திலுள்ள அமைப்புகள் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, இந்தக்குறையைப் போக்க பாடுபட வேண்டும். நீண்ட கால செயல்திட்டங்களை வகுத்துக் கொண்டு, மக்களிடம் தொடர் பிரச்சார இயக்கமாக கொண்டுசெல்ல வேண்டும்.

நம் மக்களை நம்பி நின்ற நமது வேட்பாளர்கள் அனைவரும், காலம் கடந்தும் வரலாற்றிலும், மக்கள் மனதிலும் நீங்க இடம் உங்களுக்கு உண்டு...

என்றும் உங்கள் நிழலாய் தொடரும்...

இவண்,

திரு.அன்பரசு துரைசாமி

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved