🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக வெற்றிக்கு கைகொடுத்த தொட்டிய நாயக்கர் சமுதாய வாக்குகள்!-பகுதி-2

தொடர்ச்சி-2

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, நீலகிரியை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை அதிமுக கூட்டணி பெற்ற வெற்றியே இன்று வலிமையான எதிர்க்கட்சியாக அதிமுக அமர உதவியுள்ளது. இந்த வெற்றியின் பின்னனியில் ஏதோ ஒட்டுமொத்த கவுண்டர் சமுதாயமும் அதிமுக-விற்கு வாக்களித்துள்ளது என்ற பிம்பம் தவறானது. தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்வர் வேட்பாளர் என்ற காரணத்தால் கூடுதலாக 15% முதல் 20% வரை வாக்களிக்க வாய்ப்புள்ளதே தவிர, எதிர் தரப்பிலும் தங்கள் சமூக வேட்பாளரே களமிறங்கியுள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக ஒருபக்கமாக வாக்களித்திருக்க வாய்ப்பில்லை என்பதை வாக்குச்சாவடி வாரியாக வாக்குகளை கணக்கிட்டால் தெரியும்.

சேலம், தர்மபுரி தவிர மற்ற மாவட்டங்களில் போட்டி சமஅளவிலேயே இருந்துள்ளது. அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடனயே கொங்கு மண்டலத்தில் ஏற்படப்போகும் மாற்றத்தை திமுக தலைமை கணித்திருக்க வேண்டும். திமுக தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் சொதப்பியதுபோலவே இந்தமுறையும் சொதப்பியது. கொங்கு மண்டலத்தில் எதோ ஒருசில சாதிகள் மட்டுமே பெருங்கொண்ட சாதியாக இருப்பதுபோல் நம்பிக்கொண்டுள்ளது. அதனால் தான் மாவட்டக் கழக செயலாளர், ஒன்றிய கழகச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் அமைப்பு முதற்கொண்டு, தனித்தொகுதி, நகர்ப்புறத்தில் ஓரிரு தொகுதிகள் தவிர 90% வேட்பாளர்கள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கே வழங்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல்களிலும் இதே அணுகுமுறையே நிலவுகிறது. இதன் மூலம் கொங்கு மண்டலத்திலும், மாநில அளவிலும் குறிப்பிடத்தக்க அளவில் பரவலாக வசிக்கும் தொட்டிய நாயக்கர், நாயுடு, செட்டியார், போயர், கோனார், வேட்டுவக்கவுண்டர், முதலியார் போன்ற சமூகங்களிலிருந்து குறிப்பிடும்படியான தலைவர்களை உருவாக்க முடியாத காரணத்தால், அச்சமூக வாக்குகளை திமுகவால் ஒருங்கிணைக்க முடியவில்லை.

இதற்கு எதிர்மாறான அணுகுமுறை அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அதிமுக-வின் பொதுச்செயலாளராக இருக்கும்வரை இருந்தது. இராஜேந்திர பாலாஜி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை இராதாகிருஷ்ணன் போன்றோர் பெரும்பான்மை சமூகங்களாக இல்லாதபொழுதும் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கினார். அதே அணுகுமுறையை பின்பற்றிய எடப்பாடியார் கொங்கு மண்டலத்தில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு பொள்ளாச்சி, உடுமலை, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் தொகுதிகளை வழங்கி அனைத்து சமுதாய வாக்குகளையும் கவர்ந்தார். கொங்கு மண்டலத்தில் எடப்பாடியாரின் வியூகம் எடுபடாமல், திமுக-வின் மானத்தை கொஞ்சமாவது காப்பாற்றியது நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்கள் மட்டுமே.

(இதன் தொடர்ச்சி நாளை வெளிவரும்…)

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved