🔴 LIVE | முப்பெரும் விழா 2023


போலீசாருடன் கடும் வாக்குவாதம்! கோட்டைக்குள் நுழைந்த கம்பளத்தார்!

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 8/2021 சிறப்பு சட்டத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், நீதிமன்றங்களில் நிராகரிக்கப்பட்டாலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களையும் மீறி தமிழக அரசுக்கு அழுத்தம்கொடுத்து, மீண்டும் ஒரு அவசர சட்டத்தை தற்காலிகமாகக்கொண்டு வந்து, TNPSC-யில் உள்ள காலியிடங்களை கைப்பற்ற மிகப்பெரிய சதி நடைபெற்று வந்தது. இந்த முயற்சிகளை முறியடிக்க களமிறங்கிய தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகநீதிக் கூட்டமைப்பிலுள்ள 261 சமூகத்தினர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முறையான இடஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல்'10 ஆம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் மாபெரும் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டனர்.


அதனையடுத்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் பட்ஜெட் மீதான மானியக்கோரிக்கை இன்று (22.04.2022) நடைபெறுவதால், அதில் ஏதேனும் வன்னியர் இடஒதிக்கீட்டிற்கு ஆதரவான சட்டத்தை அரசு கொண்டு வரலாம் என்ற ஐயத்தில் கோட்டையை முற்றுகையிடப்போவதாக சமூகநீதி கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர். அதனையொட்டி கடந்த இரண்டு மூன்று தினங்களாக சென்னையில் முகாமிட்டிருந்த சமூகநீதிக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.


மற்றொருபுறம் சமூகநீதிக்கூட்டமைப்பின் இன்றைய போராட்டத்தை நசுக்க தமிழக காவல்துறையினர் தீவிர முயற்களை மேற்கொண்டனர். கடந்த இருதினங்களாக உளவுத்துறை அதிகாரிகள் சமூகநீதி கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களிடம் பேசி அழுத்தத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டனர். ஆனால் போலீசாரின் அச்சுறுத்தலுக்கு கிஞ்சித்தும் கவலைப்படாத சமூகநீதி கூட்டமைப்பினர் கோட்டையை முற்றுகையிடுவது என்பதில் உறுதியாக இருந்தனர்.


இதனையடுத்து உஷாரான காவல்துறை வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை மாநகருக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தும் வகையில் நுழைவு சாலைகளில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதேபோல் கோட்டையை சுற்றிலும் அனைத்து சாலைகளிலும் சோதனை சாவடிகளை அமைத்து தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த தீவிர வேட்டையில் காலை 9 மணிக்கே விடுதலைக்களம் கட்சி நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் அணிவகுத்து வந்த பேருந்து மற்றும் கார்களை சோழிங்கநல்லூர் பகுதியில் தடுத்து நிறுத்தினர். போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வலியுறுத்தி கோஷமெழுப்பியபடி சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதனைத் தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்டோர்களை கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றி நீலாங்கரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.


முற்றுகைப்போராட்டத்தில் முதல் கைதே கம்பளத்தாரின் கைதாக இருந்தது. இதனையடுத்து கோட்டையை நோக்கி செல்ல முயன்ற பிற சமுதாயத்தினர்களையும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீசார், போராட்டக்காரர்களை கைது செய்து அருகிலுள்ள சமுதாயக்கூடங்களில் தங்க வைத்தனர். இதில் திருப்பூரில் இருந்து வந்த ராமசாமி-யும், தூத்துக்குடியில் இருந்து வந்த த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தின் மாநில துணைத்தலைவர் மல்ராஜ் அவர்களும் அடங்குவர்.

போலீசாரின் கண்ணில் மண்ணைத்தூவி கோட்டையை அடைந்த தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, மேன்மக்கள் அறக்கட்டளை தலைவர் பெ.இராமராஜ், பாலகிருஷ்ணன், சுருளிராஜ் மற்றும் போடி சௌந்திரபாண்டியன், சுந்தரராஜன், ஆறுமுகச்சாமி ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்தனர்.கைது செய்வதாக போலீசார் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் அமைச்சரிடம் மனு அளிக்காமல் செல்லமாட்டோம் என உறுதியாக இருந்தனர். அரை மணிநேரம் நீடித்த இந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து பெ.இராமராஜ் அவர்களை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அழைத்துச்சென்ற போலீசார், அங்கு மனுவினை பெற்றுக்கொண்டு ரசீது அளித்தனர். அதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்து கடற்கரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


ஆங்காங்கே அணி அணியாக கைது செய்யப்பட்டபடியே இருந்ததால் கோட்டை அமைந்துள்ள பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. சமூகநீதி கூட்டமைப்பின் எதிர்பாராத பலமுனைத் தாக்குதலால் மதியம் வெயில் அதிகமாக அதிகாம போலீசார்  களைத்து காணப்பட்டனர். நகரின் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த போராளிகளான அய்யாக்கண்ணு, அன்பழகன், ராமமூர்த்தி, தவமணி அம்மாள் உள்ளிட்டோரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலசங்கத்தின் தலைவர் இராதாகிருஷ்ணன். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


சமூகநீதி கூட்டமைப்பின் தொடர் போராட்டம் காரணமாக இன்று நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை மானியக்கோரிக்கையில் வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக அரசின் சாதகமான பதிலைப்பெற முயன்ற  பாமக வின் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.


இப்போராட்டத்தின் சிறப்பம்சமாக முற்றுகைப்போராட்டத்தின் முதல் கைதாக நாமக்கல்லை சேர்ந்த கம்பளத்தார்கள் கைதாகினர். அதேபோல் நூற்றுக்கணக்கான சமூகங்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் கம்பளத்தாரகள் மட்டுமே கோட்டைக்குள் நுழைந்து முதல்வரின் தனிப்பிரிவில் வெற்றிகரமாக சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved