🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் கட்சிகளின் மிகுந்த ஆதரவுடன் மாவீரனின் 221-வது வீரவணக்கநாள் வெற்றிகரமாக நடைபெற்றது...

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது வீரவணக்கநாள் தமிழகமெங்கும் மிகுந்த எழுச்சியுடன் இன்று நடைபெற்றது. இன்று காலையில் கயத்தாறில் உள்ள மாவீரன் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மாண்புமிகு அமைச்சர்.கடம்பூர்.ராஜு அவர்கள் கலந்துகொண்டு மாவீரன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்களும், மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி அவர்களும் கலந்துகொண்டனர். 


தமிழக முதல்வர் மாண்புமிகு.எடப்பாடி.பழனிச்சாமி தனது டிவிட்டர் பதிவில் ஆங்கிலேய அடக்குமுறையை துணிவுடன் எதிர்த்து நின்ற மாவீரனின் வீரத்தை புகழ்ந்திருந்தார்.


அதேபோல் துணைமுதல்வர்.மாண்புமிகு. ஓ.பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பதிவில் மாவீரன் கட்டபொம்மனின் உயிர்தியாகத்தை போற்றி பதிவிட்டிருந்தார்.


தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ரவீந்திரநாத் டிவிட்டர் பதிவில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர்நீத்த மாவீரனின் தியாகத்தை வெகுவாக புகழ்ந்து பதிவிட்டிருந்தார்.

கரூர்,தாந்தோன்றிமலையில் திரு.ஏகாம்பரம் (இவரைப்பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வீரவணக்கநாள் நிகழ்ச்சியில்,  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார் .


தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் திரு.S.P.M.சையதுகான் Ex.MP கலந்துகொண்டு மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.வரதராஜன் அவர்கள் கயத்தாறில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். இதில் த.வீ.க.பண்பாட்டுக்கழக தூத்துக்குடி மாவட்ட தலைவரும் தொழிலதிபருமான திரு.வலசை கண்ணன் (இவரைப்பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்), திரு.மாரிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


திமுக சார்பில் கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித்தலைவருமான மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். இதில் தலைமைக்கழக மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

இதேபோல் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.கீதா ஜீவன் தலைமையில் மாவீரனின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் புதூர் கிழக்கு ஒன்றியக்கழக செயலாளர்   திரு.செல்வராஜ்  (இவரைப்பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், கழக மகளிரணி செயலாளருமான திருமதி.கனிமொழி அவர்களும், கழக செய்தித்தொடர்பாளரும், மூத்த வழக்கறிஞருமான திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் முகநூல் பக்கத்தில் மாவீரனின் புகழை நினைவு கூர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று காலை, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் கலாச்சாரப்பிரிவு சார்பில் நடைபெற்ற புகழஞ்சலிக்கூட்டத்தில் மாநில தலைவர் திரு.L.முருகன் அவர்கள் கலந்து கொண்டு மாவீரனின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்டபொம்மனின் நேரடி வாரிசுதாரர். திரு.வீமராஜா கலந்து கொண்டார். அவருக்கு மாநிலத்தலைவர் உள்ளிட்ட பலரும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாஞ்சை போர்முழக்கம் ஆசிரியர் திரு.செந்தில்குமார் அவர்கள், மாவீரனுக்கு சென்னையில் சிலைவைக்கும் கோரிக்கை மனுவை மாநிலத்தலைவர் திரு.முருகன் அவர்களிடம் வழங்கினார்.


நிகழ்ச்சியில் அகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் நிறுவன தலைவர்.பேராசிரியர். திரு.சிஎம்கே. ரெட்டி, பொதுச்செயலாளர்.நாயக்கர்.திரு.நந்தகோபால், எழும்பூர் பகுதி செயலாளர் திரு. பிச்சைகனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் சார்பில் சென்னை மாநகர் முழுவதும் வீரவணக்கநாள் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதேபோல் கோவை ஈச்சனாரியிலுள்ள மாவீரன் சிலைக்கு கோவை தெற்கு மாவட்ட பிஜேபி தலைவர் திரு.வசந்தராஜ் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


முன்னதாக, கயத்தாறில் உள்ள கட்டபொம்மனின் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களின் சார்பில் தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.எஸ். இரமேஷ், புதுக்கோட்டை திரு.செல்வம், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் திரு.கே.எம்.ஏ.நிஜாம், புறநகர் மாவட்ட செயலாளர் திரு.உவரி ரைமண்ட் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவீரன் கட்டபொம்மன் நினைவு நாளில் கடந்த 40 ஆண்டுகளாக வருடம்தோறும் நேரடியாக கயத்தாறு வருகைதந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திவரும் மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள், கோரானோ பெருந்தொற்றால் இந்தாண்டு கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று காலை மதுரையிலுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விடுதலைக்களத்தின் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன், மதியம் முன்னாள் தலைமைச்செயாலளர் திரு.ராம் மோகன்ராவ் அவர்களை கயத்தாறு அழைத்துச்சென்று மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தச்செய்தார். இதில் RMR பாசறையின் முன்னனி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


தமிழக கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு மாவீரன் கட்டபொம்மனின் வீரவணக்கநாளில் செயல்பட்டு வருகையில்,  தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் தீவிர ஆதரவாளர்களாகவும், அக்கட்சியின் குறுப்பிடத்தக்க வாக்குவங்கியாகவும் தென்மாவட்ட கம்பளத்து சமுதாய மக்கள் இருந்துவரும் நிலையில், தேமுதிக தரப்பிலிருந்து புகழஞ்சலி செய்திகூட வராதது அக்கட்சித்தொண்டர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. ஆனால் இதற்கு நேர்மாறாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் திரு.சரத்குமார் அவர்கள் கட்டபொம்மனுக்கு புகழஞ்சலி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மாவீரனுக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக தெலுகு சகோதர அமைப்பான தேசிய செட்டியார்கள் பேரவை சார்பாக அதன் நிறுவன தலைவர் திரு.P.L.A.ஜெகனாத் மிஸ்ரா அவர்கள் புகழஞ்சலி போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.


வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு அரசியல் கட்சியினர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில் மரியாதை செலுத்தியது கம்பளத்து சமுதாயத்தினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக வசித்து வரும் கம்பளத்தார்கள் தங்கள் அரசியல் வலிமையை உணராது இருந்துவந்த நிலையில், அரசியல் கட்சிகள் கம்பளத்தார்களின் வாக்கு வலிமையை உணர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved