🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கயத்தாறில் தமிழக முதல்வரை வரவேற்க புறப்படுவோம் வாரீர்! வாரீர்! - தலைவர் திரு.S.இராதகிருஷ்ணன் அழைப்பு.

உறவுக்கு தோள் கொடுப்போம்! உரிமைக்கு குரல் கொடுப்போம்!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் 262-வது பிறந்தநாளான ஜனவரி'03 ஆம் தேதி "கட்டபொம்மன் ஜெயந்தி"யை தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் சிறப்பான முறையில் கொண்டாட சமுதாய அமைப்புகளும், அங்காங்கே இளைஞர்குழுக்களும் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றன. 


இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி.K.பழனிச்சாமி அவர்கள், ஜனவரி-03 ஆம் தேதி காலை 8 மணியளவில் கயத்தாறில் உள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 


முதல்வரின் வருகையின்பொழுது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்தவாரம் கயத்தாறில் பார்வையிட்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.S.இராஜூ அவர்கள், தமிழக முதல்வரை வரவேற்பது குறித்து சமுதாய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தை கோவில்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தினார். இக்கூட்டத்தில் த.வீ.க.பண்பாட்டுக்கழகம், வீரசக்கதேவி ஆலயக்குழு, கட்டபொம்மன் டிசண்டன்ட் டிரஸ்ட் , ஊமைத்துரை தொண்டர்படை உள்ளிட்ட சமுதாய அமைப்புகளின் தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் அதிமுக பிரமுகரும், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் ஒரேயொரு ஒன்றியப் பெருந்தலைவருமான  திருமதி.சுசீலா தனஞ்செயன், மாவட்டக்குழு உறுப்பினர் திரு.ஞானகுருசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


முதல்வரை வரவேற்க தூத்துக்குடி மாவட்ட வீ.க.பொ.பண்பாட்டுக்கழகத் தலைவர் வலைசை.திரு.கண்ணன் தலைமையிலான சிறப்புக்குழு விரிவான பணிகளை மேற்கொண்டு வருவதாக இக்குழுவில் இடம்பெற்றுள்ள திரு.மாரிச்சாமி தெரிவித்துள்ளார். இதேபோல் வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவையின் நிறுவன தலைவரும், அதிமுக திருவள்ளூர் மத்திய மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளருமான திரு.P.V.இராதாகிருஷ்ணன் அவர்களும் முதல்வரை வரவேற்க அழைப்பு விடுத்துள்ளார்.


இதேபோல் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாவீரன் கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுதவிர ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிரமாண்ட முறையில் மாவீரன் பிறந்தநாளைக்கொண்டாட அங்கு வசிக்கும் கம்பளத்தார்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். தமிழ்நாடு இராஜகம்பளத்தார் முன்னேற்றக் கழகம் மற்றும் இன்னபிற சமுதாய அமைப்புகள் மதுரையில் பிறந்தநாள் கொண்டாட அழைப்பு விடுத்துள்ளன.


விடுதலைக்களம் திருப்பூரிலும், கோவை, இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் ஈச்சனாரியிலும் மாவீரன் சிலைக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளன. இதேபோல் கரூர், ஈரோடு,திண்டுக்கல், சென்னை போன்ற இடங்களிலும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


இதற்கிடையே தமிழக முதல்வர் கயத்தாறு செல்வதுபற்றி சமூக ஊடகங்களில் ஒருசிலர் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி பதிவிட்டிருந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் திரு.S.இராதாகிருஷ்ணன், தமிழக முதல்வரின் கயத்தாறு வருகை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் அரசிலாக்குவது சமுதாயத்திற்கு எந்த நற்பெயரையும் பெற்றுத்தராது, இது நமது சமுதாயத்திற்கு களங்கத்தையே ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். மேலும், கயத்தாறு வருகைதரும் தமிழக முதல்வரை வரவேற்பது என்பது நமது பண்பாடு சார்ந்தது, காலம் காலமாக கம்பளத்தார் பின்பற்றிவரும் வாழ்வியல் நெறிமுறை சார்ந்தது, சமுதாயத்திற்கு தேவையானதை அரசிடம் கேட்டுப்பெறுவது என்பது உரிமை சார்ந்தது என குறிப்பிட்டுள்ளவர், உறவுக்கும், உரிமைக்குமான விசயங்களை தமிழக முதல்வர் வருகையோடு தொடர்புபடுத்துவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.


மாவீரன் கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் அமைக்க சட்டமன்றத்தில் குரல்கொடுத்து சாதித்துக்காட்டியதுடன், தமிழக முதல்வரை கயத்தாறு அழைத்துவர சிரமேற்கொண்டு முயற்சிகளை செய்திட்ட மாண்புமிகு அமைச்சர் கடம்பூர்.திரு.இராஜூ அவர்களுக்கும், விளாத்திக்குளம் நல்லசுவாமிகளுக்கு நினைவுத்தூண் அமைக்க பாடுபட்டவரும், மாவீரன் கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலையமைக்க சட்டமன்றத்தில் குரல்கொடுத்தவருமான, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்களுக்கும் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பை வழங்கிட விரிவான ஏற்பாடுகளை செய்துவரும் த.வீ.க.பண்பாட்டுக்கழகம் மற்றும் பிற சமுதாய அமைப்புகளுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்கிட வேண்டுமென்று சமுதாய மக்களையும், சென்னை,வீ.க.பொ.நலச்சங்கத்தின் மீது நன்மதிப்பும்,நல் ஆதரவும் வழங்கிவரும் பெருமக்களையும் அன்போடு கேட்டுக்கொள்வதாக தலைவர் திரு.S.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


இதேபோல் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியிலும், மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் சமுதாய மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மிகச்சிறப்பான வரவேற்பினை வழங்குமாறு தலைவர் திரு.s.இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved