🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழக முதல்வர் முன் கம்பளத்தாரின் முதல்வர் வீரமுழக்கம்!

தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பிரச்சார பயணத்தின் பொழுது மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாளன்று தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர், கயத்தாரில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, கயத்தாறுக்கு அருகேயுள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் மாவீரன் கட்டபொம்மனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். இதனால் முதல்வரின் கயத்தாறு பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கம்பளத்தார் சமுதாயத்தினர் பெறுத்த ஏமாற்றம் அடைந்தனர்.


கயத்தாறு வருகைதரும் முதல்வரிடம் சமுதாயத்தின் கோரிக்கைகளை முன்வைத்து பேசும் வாய்ப்பு சமுதாய தலைவர்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவர்களிடம் முதல்வர் கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு பரிசீலிப்பதாக கூறிச்சென்றதாக தகவல்கள் வெளியானது. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் 06.01.21-இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுருந்த முதல்வர், புஞ்சை புளியம்பட்டியில் சமுதாய தலைவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள சென்ற தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர்கள் முன் அனுமதி பெறுவதில் இருந்த சிக்கல்கள் காரணமாக முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இருந்தபோதிலும்,ஈரோடு மாவட்ட அதிமுக வின் முக்கிய பிரமுகரான சக்தி ஒன்றியச்செயலாளர் திரு.வரதாராஜன் அவர்களின் பெரும் முயற்சியால், நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு முதல்வர் புறப்படும் முன் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியபொழுது, சத்தியமங்கலம் திரு.பவுல்ராஜ் அவர்கள் முதல்வருக்கு "வீரபாண்டிய கட்டபொம்மனின்" ஓவியத்தை வழங்கினார். அப்பொழுது பட்டக்காரர் திரு.நடராஜ் அவர்களின் தலைமையில் சென்றிருந்த சமுதாய தலைவர்கள் முதல்வரிடம் மனு வழங்கினர். அதை இன்முகத்துடன் பெற்றுக்கொண்ட முதல்வர் புகைப்படக்காரர்களை அழைத்து சமுதாய தலைவர்களுடன் புகைப்படம் எடுக்க உத்தரவிட்டார்.


இப்படி இராஜகம்பளத்தார் சமுதாயத்தினர் முதல்வரை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க எடுத்த முயற்சிகள் இருமுறை தோல்வியைத் தழுவிய நிலையில், 06.01.21-அன்று பிரச்சார பயணத்தை முடித்துக்கொண்டு அன்றிரவு ஈரோடு அருகே தங்கியிருந்த தமிழக முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு கிட்டியது. அப்பொழுது முதல்வரிடம் கம்பளத்தார் சமுதாயத்தின் வரலாறு, மக்கள்தொகை மற்றும் மக்களின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அப்பொழுது உடனிருந்த அமைச்சரும் முதல்வரிடம் விளக்கினார்.


இதனையடுத்து அடுத்தநாளான நேற்று (07.01.21)  பெருந்துறையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த தமிழக முதல்வர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் செங்குந்த முதலியார் சமுதாய தலைவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மாவட்ட அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஈரோடு சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் வலிமையை நன்கு உணர்ந்தவர்கள் என்பதுடன் , கடந்த ஒருசில தினங்களுக்கு முன் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளை சமுதாயத்தினர் கோவை, ஈரோடு,திருப்பூர்,பெருந்துறை போன்ற மேற்கு மாவட்டங்களில் எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டபொழுது, ஒருசில நிகழ்ச்சிகளில் அவர்களும் கலந்தும் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் எதிரொலியாக,  பெருந்துறை நிகழ்ச்சி நிரலில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருடனான சந்திப்பு திட்டமிடப்படாதபோதிலும் கூட ,அப்பகுதியில் செல்வாக்கு பெற்றவரும், தமிழகம் முழுவதும் அனைத்து இராஜகம்பள மக்களாலும் சமுதாயத்தின் ஒற்றை முகமாக, அனைத்து அமைப்புகளாலும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருப்பூர் தொழிலதிபரும், இராஜகம்பள மகாஜனசங்கத்தின் பொதுச்செயலாளருமான திரு.P.S.மணி அவர்களை தொடர்புகொண்ட அமைச்சர் பெருமக்கள், அந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்ததுடன், அவர் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றபொழுது உற்சாகமாக வரவேற்று மேடையில் அமரச்செய்ததுடன், பேசவும் வாய்ப்பு வழங்கினர்.


தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பற்றிக்கொண்ட திரு.P.S.மணி அவர்கள், முதல்வர் முன் கொங்கு தமிழில் பேசி இரண்டே நிமிடங்களில் சமுதாய மக்களின் நீண்ட நாள் ஏக்கங்களை எடுத்துவைத்தார். அவர்பேச்சின் முத்தாய்ப்பாக, தமிழகம் முழுவதும் இருபதிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் கம்பளத்தார்களுக்கு அதிமுக சார்பில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். திரு.P.S.மணி அவர்களின் பேச்சை கல்வி அமைச்சர் மாண்புமிகு.செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் வெகுவாக ரசித்துக்கேட்டனர். 

கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக சமுதாயத் தலைவர்கள் முதல்வரை சந்திக்கும் தீவிர முயற்சி நேற்று நடைபெற்ற இந்த திடீர் நிகழ்ச்சியின் மூலம் நிறைவுக்கு வந்ததுடன், திரு.P.S.மணி அவர்களின் பேச்சு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றிலிருந்து திரு.P.S.மணியை தொடர்புகொண்டு சமுதாய தலைவர்களும், அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved