🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சென்னையில் நடைபெற்ற 262-வது பிறந்தநாள் குடும்பவிழாவில் இராஜகம்பளத்தார் வர்த்தக பிரிவு தொடக்கம்!

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாள் விழா மற்றும் குடும்பவிழா இன்று (10.01.21) காலை 10.00 அளவில், செங்குன்றத்தில் அமைந்துள்ள கட்டபொம்மன் அரங்கில் நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக மிக எளிய முறையில் நடைபெற்ற  இவ்விழாவுக்கு திருமதி.நலச்சித்ரா இராமராஜூ அவர்கள் தலைமை தாங்கினார். திரு.கந்தசாமி குருக்கள் அருள்மிகு வீரசக்கதேவிக்கு பூஜை, புணஸ்காரங்கள் செய்வித்ததோடு விழா தொடங்கியது. அடுத்ததாக மாவீரன் கட்டபொம்மனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனையடுத்து, உறுதிமொழி ஏற்புடன் குடும்பவிழா தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக இச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர் சங்கம் வளர்த்த தங்கம் திரு.இராமசாமி அவர்களின் திருவுருவப்பட திறப்புவிழா நடைபெற்றது. மறைந்த திரு.இராமசாமி அவர்களின் திருவுருவப்படத்தை இராஜகம்பள சமுதாய கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இராஜகம்பள மேன்மக்கள் அறக்கட்டளையின் முக்கிய தலைவரும், மத்திய அரசின் பொதுப்பணித்துறையில் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான பொறியாளர் திரு.P.இராமராஜ் அவர்கள் திறந்துவைத்து உரையாற்றினார். இதில் இச்சங்கத்தின் பெருந்தலைவர் திரு.சென்னையா நாயக்கர், மு.செயலாளர் திரு.சுப்பையா, ஒருங்கிணைப்பாளர் திரு.தங்கம் மற்றும் பொருளாளர் திரு.இராமராஜு ஆகியோர் மறைந்த திரு.இராமசாமி அவர்களுடனான தங்கள் நினைவுகளையும், அவராற்றிச்சென்ற பணிகளையும் நினைவுகூர்ந்தனர்.


இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் துவங்கப்பட்டுள்ள "வர்த்தகப்பிரிவை" நெல்லுர், தொழிலதிபர் திரு.S.கோட்டைச்சாமி அவர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதில் வாழ்த்துரை வழங்கிப்பேசிய திரு.கோட்டைச்சாமி அவர்கள் தன்வாழ்நாளெல்லாம் கம்பளத்தாரின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதிபட பேசினார். அவரைத்தொடர்ந்து பரந்துவிரிந்த தொழில் வாய்ப்புகளையும், தொழிலதிபராக ஆவது எப்படி என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார் சங்கத்தின் தலைவர் திரு.S.இராதாகிருஷ்ணன். அவரை அடுத்துப்பேசிய

வர்த்தகப்பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் திரு.சுரேஷ்குமார்,அதிக முதலீடு இன்றி தொழில்துறையில் சாதிப்பது குறித்து விளக்கினார். சங்கத்தின் மூத்த ஆலோசகர் திரு.சுப்பையா பேசுகையில் நிதியை பெருக்குவதும், கையாள்வதும் குறித்து எடுத்துரைத்தார். இச்சங்கத்தின் நோக்கங்களையும், லட்சியங்களையும் நிறைவேற்ற அனைவரும் பாடுபட உறுதியேற்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார் இறுதியாக உரையாற்றிய தனியார் நிறுவனமொன்றின் உயரதிகாரி.திரு.முத்துக்குமார்.


இறுதியாக சமுதாயத்தின் கல்வி,பொருளாதார, சமூக மேம்பாட்டிற்கு அச்சாணியாக விளங்கும் DNT-இடஒதுக்கீடு, சான்றிதழ் அவசியம் குறித்து உணர்ச்சிகர உரையாற்றினார் பொருளாளர். திரு.இராமராஜூ. இதனைத்தொடர்ந்து அனைவரும் எழுந்துநின்று DNT-கோரிக்கை முழக்கம் எழுப்பினர். நன்றியுரையை சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பெருமாள் வழங்கினார்.

இநிகழ்ச்சியில் நெல்லூர் தொழிலதிபர் திரு.கோட்டைச்சாமி அவர்கள் "கட்டபொம்மன் பர்பிள் கிளப்" உறுப்பினர் கட்டணத்தின் பங்குத்தொகையாக ரூ.50000/- வழங்கினார்.150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இவ்விழாவில் தேனி,விருதுநகர் மாவட்டத்தைச்சேர்ந்த ஒருசில உறவுகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved