🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விபத்தில் இறந்த கம்பள சமுதாய கட்டிட தொழிலாளி!- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!- நிவாரணமாக ரூ.20 லட்சம் பெற்றுத்தந்த சமுதாய தலைவர்கள்!

விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்த கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.முருகன் அவர்கள் தவறி விழுந்து மரணமடைந்தார். மரணமடைந்த கட்டிடத்தொழிலாளி திரு.முருகன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கட்டுமான நிறுவனம் முன்வராததைக்கண்டித்து, உரிய இழப்பீடு பெற்றுத்தரக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு இராஜகம்பளத்தார் முன்னேற்றக்கழகத்தின் நிறுவன தலைவர் திரு.இரவி நாயக்கர்  தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதனப்படுத்தி கலைந்து போகச்செய்தனர். 


விபத்து தொடர்பாக உயிரிழந்த கட்டிடத்தொழிலாளி முருகனின் மகன் மு.காளிராஜன் அளித்த புகாரின் பேரில் கட்டுமான நிறுவன இயக்குனர் திரு.ராஜசேகரன், கண்காணிப்பாளர் திரு.பாண்டியராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சூலக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட திரு.இரவி நாயக்கர், திரு.ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 52பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் கட்டுமான நிறுவனம் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ.20 லட்சம் வழங்கியது. சக சமுதாய உறவுக்காக நஷ்டஈடுகேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மற்றும் சமுதாய தலைவர்களின் முயற்சியால் உரிய நிவாரணம் கிடைக்கச்செய்தது குடும்பத்தினருக்கு ஆறுதலை தருவாதாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

தகவல் உதவி: திரு.செல்லப்பாண்டியன், நிலக்கோட்டை.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved