🔴 LIVE | முப்பெரும் விழா 2023


650-ஆண்டுகளுக்குப்பின் மதுரை முற்றுகையில் கம்பளத்தார்படை...

மதுரை.... தமிழ்சங்கம் வளர்த்த மதுரை, தமிழ் இனத்தின் வரலாற்றிலும், இராஜகம்பளத்து தொட்டியநாயக்கர் வரலாற்றிலும் மறக்கவும், பிரிக்கவும் முடியாத மண்...


650-ஆண்டுகளுக்கு முன் விஜயநகரப்பேரரசின் மாமன்னர் குமாரகம்பணின் பெரும்படைகள் மதுரையை முற்றுகையிட்டு, மாமதுரையை முகமதிய மாலிக்காபூரிடமிருந்து மீட்டடெடுத்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்துகிடந்த மீனாட்சி அம்மன் ஆலயத்தை மறுசீரமைத்து, மீனாட்சியை மதுரையில் மீண்டும் குடியமர்த்தியதோடு மட்டுமல்லாமல், மாலிக்காபூர் படையெடுப்பிற்கு அஞ்சி, மதுரை மண்ணை வீட்டு மாற்றிடம் குடிபெயர்ந்த மண்ணின் மைந்தர்களை மீண்டும் மதுரையிலே குடியமர்த்தி, முகமதியன் விரட்டிய பாண்டிய மன்னனை மீண்டும் அரியாசனம் ஏற்றி, ஏறக்குறைய 500-ஆண்டுகாலம் விஜயநகரப்பேரரசின் கொடிபரந்த மண் மதுரை. அந்தப்பெரும்படையின் வழிவந்த போர்க்குடிகளான தொட்டியநாயக்கர் சமுதாயத்தினர், இன்று தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க 68-DNT சமுதாயங்களுடன் மதுரையை முற்றுகையிட வேண்டிய நிலை.

போர்ச்சூழல் முடிவுற்று 200 ஆண்டுகள் கடந்துவிட்டதே, இன்றைய இளைஞர்களிடம் விஜயநகரப் படையின் வீரமும்,தீரமும் இருக்குமா? என்ற ஐயம், தவிடுபொடியானது இன்று. பறிக்கப்பட்ட நமது உரிமைகளை மீட்டெடுக்க மதுரையிலே ஆர்ப்பாட்டம் என்று அறிவித்ததுதான் தாமதம், பதுங்கியிருந்த படைகள் மங்காத வீரத்தோடு வீறுகொண்டெழுந்து புறப்பட்டது மதுரையை நோக்கி. வடக்கே நாமக்கல்லிலிருந்து விடுதலைக்களம் திரு.கொ.நாகராஜன் மற்றும்  தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கத்தின் திரு.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் ஒரு படையணி, மேற்கே தமிழ்நாடு இராஜகம்பளத்தார் முன்னேற்றக்கழகத்தின் துணைத்தலைவர் திரு.செல்லப் பாண்டியன் தலைமையில் இளைஞர் படை, தெற்கே விருதுநகரிலிருந்து நிறுவனத்தலைவர் திரு.இரவி நாயக்கர் தலைமையில் ஒரு பெரும்படை, அப்படையின் தளபதியாக திரு.அருண் குமார், இப்போருக்கு இதுவே அதிகம் என்றுருக்க, எங்கள் வீரத்தை எங்குகாட்ட என்று புயலென புறப்பட்ட காப்பு பேரவையின் இளம் புயல் திரு.குட்டி நாயக்கர், களம் எங்கென்றாலும் அதில் கம்பளத்தார் படை, அகர வரிசைப்படி நாங்களே களம் காணுவோம் என்று விடாப்பிடியாக முதல் மரியாதையை தட்டிச்செல்லும் அருப்புக்கோட்டை படையணி திரு.சந்திரசேகரன் தலைமையிலே அணிவகுக்க, போர்க்களத்திற்கு புயல்கள் மட்டுமல்ல தென்றலும் தேவையென, தேனியிலிருந்து திரு.ஜக்குசாமி தலைமையிலே அணியொன்று, இப்படி நாற்புறமும் படைகள் களம் காண, வீரமிக்க வாலிபர் பட்டாளத்தை வழிநடத்த பிதாமகர் பீஷ்மராக இராஜகம்பள மகா ஜன சங்கத்தின் திரு. திரு.மாரையா அவர்களும், விதுரராக பொதுச்செயலாளர் திரு.சௌந்திர பாண்டியனும் வழிகாட்ட, கம்பளத்தாரின் பெரும்படை மாற்றோர் பொறாமைப்படும் வகையில் மதுரை DNT முற்றுகைப்போராட்டத்தில் கம்பளத்தாரின் இரட்டை வாள் கொடி ஆதிக்கம் பட்டொளி வீசி பறந்தது. 

அமைதியான ஆர்ப்பாட்டத்தை போராட்டகளமாக்க விடுதலைக்களம் திரு.கொ.நாகராஜன் அச்சாரமிட, வந்திருந்தோர் பறந்துசென்று சாலையின் இருபுறமும் மறியல் செய்ய, 1.30 மணி நேரம் ஸ்தம்பித்தது மதுரை. ஓடோடி வந்த அமைச்சர் பெருமக்கள் வந்திருந்தவர்களை ஆறுதல் படுத்தி, ஆவண செய்வதாக வாக்குறுதி அளித்துச்சென்றுள்ளனர். இதனையடுத்து வரும் பிப்,03-ஆம் தேதி நமது கோரிக்கைகள் குறித்து நேரடியாக முதல்வரிடம் அழைத்துச்சென்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக அளித்த வாக்குறுதியில் அடங்கியது இன்றைய மதுரை போராட்டம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved