மூன்று தசாப்தங்களுக்கு பின் இராஜகம்பளத்தார் கோட்டைக்கு வந்த ஸ்ரீமத் முத்தாலம்மன்!
விருதுநகர் மாவட்டம், கோட்டைபட்டியில், இந்து எர்ற கொல்ல இராஜகம்பள நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமத் முத்தாலம்மன் கோவில் உற்சவப்பெருவிழா கடந்த 32 ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த நிலையில், கடந்தவாரம் மீண்டும் மிகுந்த எழுச்சியுடன் சீறும் சிறப்புமாக நடைபெற்று முடிந்துள்ளது. உற்சவ விழாவின் இறுதிநாளான வியாழன்று (14.11.2024) மாண்புமிகு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோர் கலந்து முத்தலம்மனை தரிசித்து அருள்பெற்றனர். இதன் விவரம் வருமாறு,
விருதுநகரின் பிரதானப்பகுதியான கோட்டைபட்டியில், இந்து எர்ற கொல்ல இராஜகம்பளத்தாருக்குப் பாத்தியப்பட்ட பிரசித்திபெற்ற ஸ்ரீமத் முத்தாலம்மன் கோவில் உள்ளது. சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவில் மாமன்னர் திருமலைநாயக்கர் ஆட்சியில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோவில் உற்சவப்பெருவிழா மூன்றாண்டுகளுக்கொருமுறை நடைபெருவது வழக்கம். தீபாவளிப்பண்டிகையை அடுத்துவரும் மங்கலவாரமான செவ்வாயன்று, அம்மனுக்கு மஞ்சள் பாலபிஷேகம் செய்து பொங்கல் சாட்டுதலோடு தொடங்கும் இப்பெருவிழா தொடர்ந்து பத்துநாட்கள் நடைபெறும். விழாத்தொடங்கியதிலிருந்து ஒவ்வொருநாளும் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இறுதிநாளுக்கு முந்தையதினத்தில் விருதுநகரிலிருந்து ஏறத்தாழ பத்துகிலோமீட்டர் தொலைவிலுள்ள நல்லமநாயக்கன்பட்டிக்கு சீர்வரிசைகளோடு செல்லும் இராஜகம்பளத்தார் சமுதாய மக்கள், அங்கு வடிவமைக்கப்பட்டுருக்கும் சிலைக்கு முத்தாலம்மன் திருக்கோவில் பூசாரி நாயக்கர் பூஜை, புணஸ்காரங்கள் மற்றும் அபிஷேகங்கள் செய்வித்தபின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முத்தாலம்மனுக்கு தங்கச்சங்கிலிகள் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவித்து, தேர்போல் அலங்கரிக்கப்பட்ட மலர் வண்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ, கோட்டைபட்டியை நோக்கி ஊர்வலமாக அழைத்து வருவர். பட்டாசுகள் வெடித்து, மேள தாளம் முழங்க, வான வேடிக்கையோடும், தேவராட்டக்குழுவினரின் ஆடல் பாடல் நிகழ்ச்சியோடும் நகரின் எல்லையை வந்தடையும் முத்தாலம்மனை பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பர்.
இறுதியாக கேட்டைபட்டி கோவிலை வந்தடையும் முத்தாலம்மன், திருக்கோவில் பீடத்தில் அமர்த்தப்பட்டு, பல்வேறு அபிஷேக பூஜைகள், பூஜை, புணஸ்காரங்கள் செய்வித்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீமத் முத்தாலம்மன் பக்தகோடிகளின் தரிசனத்திற்கு காட்சி தந்து அருள்பாவிப்பாள். இதில் சுற்றுப்பகுதி கிராமமக்களும், வெளியூர் அன்பர்களும் கலந்துகொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனின் அருள்பெற்றுச்செல்வது காலங்காலமாக நடைபெற்று வரும் வழக்கம். இவ் விழாவின் இறுதியாக அம்மன் சிலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஊரணியில் கரைக்கப்படுவதுடன் பத்து நாட்கள் விழா நிறைவுபெறும்.
ஒருதலைமுறையே இவ்விழாவை காணமுடியாமல் போனநிலையில், மூன்று தசாப்தங்களுப்பின் நடைபெறும் உற்சவவிழாவுக்காக விருதுநகர், கோட்டைபட்டி, இந்து எர்றகொல்ல நாயக்கர் பொதுநலச்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் கடின உழைப்பைச் செய்திருந்தனர். விழாக்குழுவினருக்கு அப்பகுதி இராஜகம்பள சமுதாயப்பொதுமக்களும் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். விழாக்குழுவினரின் அழைப்பை ஏற்று வருகை தந்த மாண்புமிகு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோர் ஸ்ரீமத் முத்தாலம்மனை தரிசித்து அருள்பெற்றனர்.
முன்னதாக திருக்கோவிலுக்கு வருகைதந்த அமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் திருப்பணிக்குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.