🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஈகையாலும், அன்பாலும் நிறைந்த கேப்டன் மறைந்தார்! - இராஜகம்பளத்தாரின் கண்ணீர் அஞ்சலி.

தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவன தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் அவர்கள் இன்று காலை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொரோனோ சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தார் விஜயராஜ். தமிழ்த் திரைப்படங்கள் மீது ஏற்பட்ட தீராக்காதல் காரணமாக பள்ளிப்படிப்பை 10 ஆம் வகுப்புடன் நிறுத்திவிட்டார். அப்பாவின் அரிசி ஆலையை கவனிக்கத் தொடங்கினார். ஆனாலும், விஜயராஜ்க்கு, மனம் முழுவதும் சினிமாவே இருந்தது. அதிலும் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதே கனவு.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் மதுரையில் இருந்து 1978 இல் சென்னைக்கு வந்த விஜயராஜ். ‘இனிக்கும் இளமை' படத்தின் மூலம் விஜயகாந்த் ஆக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அவரை இயக்குநர் எம்.ஏ.காஜா கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்தார். திரைவாழ்வில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், மிகப்பெரிய வெற்றிகள் என பலவற்றை பார்த்த விஜயகாந்த் புரட்சிக் கலைஞர், கேப்டன் என மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைத் துவங்கிய கேப்டன் விஜயகாந்த், 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு விருதாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்து ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் தேமுதிக இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றிபெற்றதின் மூலம் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2016 தேர்தலில் திமுக-அதிமுக அல்லாத மக்கள் நலக்கூட்டணி அமைத்து முதல்வர் வேட்பாளராகவும் போட்டியிட்டார். ஆனால் அக்கூட்டணி தோல்வியை சந்தித்தது.

அரசியல், திரைப்படம் தாண்டி தனது ஈகை குணத்தால் மக்களின் அன்பையும், பரிவையும் பெற்றவர் விஜயகாந்த். சாமானிய குடும்பத்தில் பிறந்து தனது தனித்திறமையால் திரைத்துறையிலும், அரசியலிலும் தனி முத்திரை பத்தித்த விஜயகாந்த் அவர்கள் எம்ஜிஆர் அவர்களுக்கு அடுத்து கம்பளத்தார் சமுதாய இளைஞர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். இதன் எதிரொலியாக தேமுதிக கொடிபறக்காத கம்பளத்தார் வசிக்கும்  தென்மாவாட்ட கிராமங்களே இல்லை என்ற அளவில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு கம்பளத்தார் இல்லம் தோறும் வெறுமயை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல.

கேப்டன் அவர்களின் மறைவால் வாடும் தேமுதிக அகட்சியினருக்கும், குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலசங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, சீர்மரபினர் நலச்சங்கத்தின் செயல்தலைவர் பெ.இராமராஜ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved