🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மனிதநேயப் பண்பாளர் மீது இயற்கை நடத்திய வன்முறை - வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர் அவர்கள் தொடங்கிய பின் அவரால் வார்ப்பிக்கப்பட்ட இளம் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தவர் சைதை துரைசாமி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், சென்னை மாநகர மேயராகவும் பொறுப்பு வகித்தவர். எம் ஜி ஆர் மறைவுக்குப்பின் சில காலம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து, அவரின் கட்டளைப்படி மனிதநேய அறக்கட்டளையை தொடங்கி தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து, ஆயிரக்கணக்கான அதிகாரிகள் உருவாகக் காரணமாக இருந்து வருபவர் மனித நேய பண்பாளர் சைதை துரைசாமி.

 சைதை துரைசாமி அவர்களின் அன்புமகன் வெற்றி துரைசாமி இமாச்சல் பிரதேசத்திலற்கு தனது உதவியாளருடன் புதிய திரைப்பட படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்வதற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வாடகைக்கு ஒரு காரை அமர்த்திக் கொண்டு காஷங் நாலா பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆம் தேதி மாலை வெற்றி உள்பட 3 பேர் காரில் பயணம் செய்தனர்.

அப்போது ஓட்டுநர் டென்சினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து கார் தாறுமாறாக ஓடி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார், மீட்பு படையினர் சம்பவ இடம் சென்று நீரில் மூழ்கியிருந்த காரை கயிறு கட்டி மீட்டனர். அப்போது டென்சினின் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து வெற்றியின் உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் படுகாயங்களுடன் பாறைகளில் விழுந்து கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை உடனடியாக கண்டுபிடிக்க முடியாததால்  வெற்றியின் உடலை சட்லஜ் ஆற்றுக்குள் தேடி வந்தனர்.

 கடந்த 8 நாட்களாக தேடப்பட்டு வந்தநிலையில் வெற்றியின் உடைகள், உடமைகள், சூட்கேஸ், ஐஃபோன் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது. ஆனால் வெற்றியின் நிலை தெரியவில்லை. பாறை இடுக்குகளில் இருந்த மனித மூளை வெற்றியினுடையதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது.

ஏனெனில் டென்சினுக்கு தலையில் காயம் ஏற்படவில்லை. கோபிநாத்தும் உயிருடன் இருக்கிறார். இதையடுத்து மனித மூளை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதனுடன் ஒப்பிட சைதை துரைசாமியின் டிஎன்ஏ மாதிரிகளும் இமாச்சலுக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் வெளியாவதற்குள் வெற்றியின் உடலை மீட்பு படையினர் மீட்டனர்.

வெற்றியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நமது சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கட்டபொம்மன் அகாடமி தொடங்குவதற்காக சங்க நிர்வாகிகளோடு சைதை துரைசாமி அவர்களை பலமுறை சந்தித்துப்பேசும் வாய்ப்பு கிட்டியது. கரூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் கம்பளத்தார் குறித்து உள்ளும் புறமும் முழுமையாக அறிந்தவர். மிகவும் பின் தங்கிப்போய்விட்ட சமுதாயத்தை உயர்த்த எடுக்கும் முயற்சிகளுக்கு தான் நிச்சயம் உதவுவதாக வாக்குறுதியளித்திருந்தார். (கொரோனா பெருந்தொற்று காரணமாக நேரடி வகுப்புகளை குறைத்து, ஆன்லைன் வகுப்புகளை அதிகப்படுத்திய மனித நேய அறக்கட்டளை, பிரதான தேர்வு (மெயின்ஸ்) மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதை முன்னிலைப்படுத்தியதால் தொடர்ந்து நமக்கு உதவி வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இருந்தும் முதன்மைத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்க ஒப்புக்கொண்டிருந்தார்).

ஓவ்வொரு முறை சந்திக்கும்போதும் அரசியல், உடல் ஆரோக்கியம் குறித்து நீண்ட நேரம் பேசும் சைதை துரைசாமி அவர்கள், தன்னுடைய உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி முறை குறித்து விளக்கி, தான் 120 ஆண்டுகள் வாழ்வேன் என்று உறுதிபடக்கூறுவார். உணவு உண்ணும் முறையை விளக்கி நம்மையும் அதை பின்பற்றச்சொல்வார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் சட்லெஜ் நதியில் விழுந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட அவரது மகன் வெற்றி துரைசாமி அவர்கள் நீரில் மூழ்கி இறந்துவிட்டார் என்ற துயர்ச்செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களை ஐஏஎஸ் கனவு காணச்செய்து, ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களை உயர்பதவியில் அமர்த்தி அழகுபார்த்தவர் சைதை துரைசாமி அவர்கள். மனித நேயத்தை முன்னிறித்தி அறக்கோட்பாட்டோடு வாழ்ந்துவரும் சைதை துரைசாமி அவர்களுக்கு இப்படியொரு பெருந்துயரை இயற்கை வழங்கியது, இயற்கையே அறத்துக்கு எதிராக செயல்படுகிறதோ என்று நம்பிக்கை இழக்கச்செய்கிறது.

அன்பு மகனை இழந்து ஆற்றொணாத்துயரில் வாடும் சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் இராஜகம்பளத்தாரின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved