🔴 LIVE | முப்பெரும் விழா 2023


எட்டயபுரம் கோவிலில் கிடைத்த கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட செப்பேடு!

எட்டயபுரம் கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தண்டனை வழங்கப்பட்ட செப்பு பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி எட்டயபுரம் கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தண்டனை வழங்கப்பட்ட செப்பு பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. சுவடிக்குழு தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளையும், செப்பு பட்டயங்களையும் பராமரித்து, பாதுகாத்து, நூலாக்கம் செய்திட பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் 12 பேர் கொண்ட சுவடி திட்ட பணிக்குழுவினரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார். இந்த குழுவினர் இதுவரை 25 செப்பு பட்டயங்களையும், பல்வேறு ஓலைச்சுவடிகளையும் கண்டறிந்து உள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் எட்டீசுவரமூர்த்தி கோவிலில் மேற்கொண்ட ஆய்வில் முக்கிய செப்பு பட்டயம் கிடைத்து உள்ளது. இதுகுறித்து திட்ட பணியின் ஒருங்கிணைப்பாளரும், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது:-

செப்பு பட்டயம் 

எட்டயபுரம் எட்டீஸ்வரமூர்த்தி கோவிலில் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்ட செப்பு பட்டயம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த செப்பு பட்டயம் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடிக்க ஆங்கிலேயர் விளம்பரம் செய்த வரலாறு குறித்து பேசுகிறது. இந்த செப்பு பட்டயத்தை வைத்தவர் ஆங்கிலேயரின் ராணுவ படை தளபதி மேஜர் பானர்மேன் ஆவார். இந்த பட்டயம் எழுதப்பட்ட காலம் 20-10-1799 ஆகும்.

நெல்லை சீமையை சேர்ந்த பாளையக்காரர்களுக்கும் குடிமக்களுக்கும் தெரியும்படி மேஜர் பானர்மேன் விளம்பரம் செய்து உள்ளார். அந்த பட்டயத்தில், கும்பினியார் உத்தரவுப்படி நெல்லை சீமைகளில் எனது பாளையத்தை இழக்க வேண்டிய சூழல் உருவானது. பாஞ்சாலங்குறிச்சியார், ஏழாயிரம் பண்ணையார், நாகலாபுரத்தார், கோலார்பட்டியார், காடல்குடி குளத்தூரார் இவர்கள் அனைவரும் கும்பினியாரிடம் இருந்து தப்பித்து துர்மார்க்க நடத்தைகளில் நடந்ததினால் இவர்களின் பாளையப்பட்டுகளைக் கும்பினியார் வசம் சேர்த்துக்கொள்ளும் சூழல் உருவானது.

உயிர்சேதம் தண்டனை 

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மநாயக்கர், அவருடைய தானாதிபதி சிவசுப்பிரமணியபிள்ளை, நாகலாபுரத்து பாளையக்காரருக்கு தமையனும் காரியஸ்தருமான சவுந்தரபாண்டிய நாயக்கர் ஆகியோரை உயிர்சேதம் ஏற்படும் வண்ணம் தண்டனை வழங்கப்பட்டது. அதுவன்றி நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்களையும் சில முக்கியமான மனிதர்களையும் அவரவர் பாளையப்பட்டுகளில் இருந்து நீக்கி சென்னைப்பட்டணத்துக்கு அனுப்பும்படியான சூழலும் உண்டானது. மேற்படி பாளையப்பட்டுகளில் உள்ள கோட்டைகளை எல்லாம் இடித்து அதில் உள்ள சேர்வைக்காரர், சேவகர், குடியானவர் கைகளில் உள்ள ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும் சூழலும் உண்டானது. இனிமேல் எந்த பாளையக்காரரும் கோட்டை கொத்தளங்கள் போட்டாலும், பீரங்கிகள், ரேக்குலா வெடிமருந்துகள் வைத்திருந்தாலும், அவர்கள் கும்பினியாருடைய ஆதரவுகளை இழப்பர். அவர்களின் பாளையப்பட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு தண்டிக்கப்படுவர். பாளையப்பட்டுகளில் உள்ள சேர்வைக்காரர், சேவகர், காவல்காரர், குடியானவர் முதலியோர் துப்பாக்கி, வெடி, ஈட்டி, வல்லயம் பிடித்திருந்தாலும் அல்லது வைத்திருந்தாலும் உயிர்ச்சேதம் செய்யப்படுவர். 

பாதுகாக்க... 

பாளையப்பட்டுகளின் குடியானவர்களுடைய நடத்தைகளுக்கு அந்தந்த பாளையக்காரர்களே பொறுப்பு. அதை மீறி எந்த பாளையக்காரர்களின் ஜனங்களாலும் தொந்தரவுகள் இருந்தால் அவர்களுக்கு உயிர்சேதம் அடையும் தண்டனை வழங்கப்படும். மேலும் பாளையங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பாளையக்காரரும் தண்டிக்கப்படுவார். சீமைக்கு நலம் ஏற்படும் வண்ணம் மேலே எழுதப்பட்டிருக்கக் கூடிய சட்டங்களைச் சகல ஜனங்களும் இனிமேல் என்றென்றும் அறிந்து மனதில் வைத்து நடக்க வேண்டும் என்பதற்காக இந்த விளம்பரம் செப்புத் தகட்டிலே எழுதப்பட்டு அந்தந்த பாளையப்பட்டுகளின் தலைமையான கிராமங்களில் பிரபலமான இடங்களில் அடித்து வைக்க உத்தரவிடப்படுகிறது. இப்படிக்கு மேஜர் பானர்மேன் என்று செப்பேட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இச்செப்பேடு மூலம் ஆங்கிலேயரை எதிர்த்த பாளையக்காரர்கள் அழித்து ஒழிக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது. இதேபோன்று கரூர் மாவட்டம் குளித்துறை கடம்பவனநாத சுவாமி கோவிலிலும் ஒரு செப்பு பட்டயம் கண்டறியப்பட்டு உள்ளது. அது கி.பி.1796 என்று அறிய முடிந்தது. இச்செப்பு பட்டயம் கோவிலின் கடம்பவனநாத சுவாமிக்கு அர்த்தசாம கட்டளை நடக்க வழங்கப்பட்ட நிலதானம் குறித்து தெரிவிக்கிறது. இந்த செப்பேடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved