🔴 LIVE | முப்பெரும் விழா 2023


டைவர்ஸ்....இனி ஆறுமாத காத்திருக்கத் தேவையில்லை! உச்சநீதிமன்றம் அதிரடி..

”மீளவே முடியாத மணமுறிவு என்று இருக்கும் சூழலில், ஒரு தம்பதி பரஸ்பரம் தங்களுக்குள் முடிவெடுத்து விவாகரத்து பெற விரும்பினால், சட்டவிதிகளின் படி அறிவுறுத்தப்படும் வழக்கமான 6 மாத கால காத்திருப்பின்றி உச்சநீதிமன்றத்தால் அவர்களுக்கு விவாகரத்து வழங்க முடியும்” என ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு மே 1ஆம் தேதி தீர்ப்பளித்திருக்கிறது.

அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ், உச்சநீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, விவாகரத்தை வழங்க முடியும் என்று நீதிபதி சஞ்சய் கிஷண்கௌல் தலைமையிலான அமர்வு அதன் தீர்ப்பில் கூறியிருக்கிறது.

“அதே சமயம், மீளவே முடியாத மனமுறிவு என்ற அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் தொடரப்படும் விவாகரத்து வழக்குகளில், சம்பந்தப்பட்ட தம்பதிகளின் குழந்தைகளின் நலன்கள், உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

"இத்தகைய வழக்குகளில், விவாகரத்து வழங்கி மக்களுக்கு முழுமையான நீதியை வழங்குவதற்கு, அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை உச்சநீதிமன்றம் செயல்படுத்தும்” எனவும் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு மேற்கோள்காட்டியுள்ளது.

முறையான நீதியை வழங்குவதற்கு, தன்னுடைய முழுமையான அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பயன்படுத்த முடியும் எனவும் நீதிபதிகள் அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, எதிர்காலத்தில் அதிகமான விவாகரத்து நடப்பதற்கு காரணமாக அமையும் எனவும், இது பெண்களையே அதிகமாக பாதிக்கும் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த தீர்ப்பை ஒரு பிரிவினர் ஆதரித்தாலும் மற்றொரு தரப்பினர் இது நடைமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.

இதுகுறித்து பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள வழக்கறிஞர் திலகவதி “உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் விவாகரத்து எண்ணிக்கை அதிகமாகும் என்று கூறுவது உண்மையல்ல. விவாகரத்து கோரும் தம்பதி இனி சேர்ந்து வாழ்வதற்கான சாத்தியமே இல்லை என்று கூறுவதற்கு திடமான காரணத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தால் மட்டுமே காத்திருப்பு காலம் இல்லாமல் (cooling period) அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்படும் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கிறது. முக்கியமாக இது இந்து திருமண சட்டத்தின்படி வருகிறது,” என்கிறார் .

மேலும், “நம் சமூகத்தில் உள்ள குடும்ப அமைப்பின்படி, ஒரு தம்பதி பரஸ்பரம் விவாகரத்து பெறும் முடிவிற்கு வருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. குறிப்பாக, பெண்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். அனைவரிடமும் தன்னுடைய முடிவு குறித்து புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல் திருமணம் என்ற உறவுக்குள் செல்லும்போது, இன்றைய தலைமுறையினர் மிகவும் யோசித்து நிதானத்துடன்தான் செல்கின்றனர். ஆனால் சில நேரங்களில் அது சரியாக அமையாத போது அவர்கள் விவாகரத்தை நாடுகின்றனர்.

அப்படி விவாகரத்து நாடி நீதிமன்றத்திற்கு செல்பவர்களுக்கு, குடும்ப நல நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதாக விவாகரத்து வழங்குவதில்லை. ஏனெனில் குடும்பநல நீதிமன்றத்தின் முக்கிய பொறுப்பே குடும்பங்களின் அமைப்பை காப்பதுதான். எனவே அவர்கள் அந்த தம்பதியினருக்கு கால அவகாசம் கொடுத்து, கவுன்சிலிங் போன்றவற்றிற்கு பரிந்துரைக்கின்றனர். அதன் பின்னும் அவர்களுக்குள் ஒத்துவரவில்லை என்றால் அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. இதுதான் வழக்கமான பரஸ்பர விவாகரத்து வழக்குகளில் காணப்படும் நடைமுறை.

எனவே உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியிருக்கும் தீர்ப்பு, பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்திற்கு முறையிடும் அனைவருக்கும் பொதுவானது இல்லை என்பதை முதலில் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் திலகவதி.

"உச்ச நீதிமன்ற முடிவு புதிதல்ல"

"மீளவே முடியாத மனமுறிவு ஏற்பட்ட சில வழக்குகளில், அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் ஏற்கனவே விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தற்போது அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை வரவேற்கிறோம்” என்கிறார் மற்றொரு பிரபல வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

காத்திருப்பு இல்லா விவாகரத்தைப் பெறுவதில் உள்ள சிக்கல்களை விளக்கியுள்ளார்.

“இந்த தீர்ப்பு வரவேற்கக்கூடியதாக இருந்தாலும், அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் உள்ள அதிகாரத்தை உச்சநீதிமன்றத்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். உயர்நீதிமன்றங்களால் அதை பயன்படுத்த முடியாது. எனவே எத்தனை பேர் உச்சநீதிமன்றம் வரை வந்து விவாகரத்து வழக்கை நடத்துவார்கள் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது” என்கிறார் சுதா ராமலிங்கம்.

”கசப்பான திருமண வாழ்க்கையை எதிர்கொண்டு வாழ்ந்து வருவோருக்கு உச்சநீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவு நன்மையையே அளிக்கும்” என்கிறார் ஊடகவியலாளர் கௌதமி சுப்ரமணியன்.

“பொதுவாக இருவரும் பரஸ்பர முடிவுடன் விவாகரத்து கோருகிறார்கள் என்றாலே, தங்களுக்குள் ஏற்கெனவே ஏற்பட்டிருக்கும் கசப்பான அனுபவங்களால் நன்றாக யோசித்து உறுதியான மனநிலையிலேயே பிரிந்து செல்லும் முடிவை எடுத்திருப்பார்கள்.

எனவே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய பிறகு, மீண்டும் யோசிப்பதற்காக கால அவகாசம் கொடுப்பது அவர்களுக்கு மன உளைச்சலையே ஏற்படுத்தும். இத்தகைய கால அவகாசங்கள், தங்களின் வாழ்க்கையின் அடுத்த நகர்வுகள் குறித்து அவர்களை முடிவெடுக்கவிடாமல் செய்யும். விவாகரத்து வழக்கு முடியும் வரை, அந்த தம்பதி அதே சிந்தனையிலேதான் இருக்க வேண்டியிருக்கும். எனவே மீளவே முடியாதளவு மணமுறிவு ஏற்பட்டிருக்கும் விவாகரத்து வழக்குகளில், கால அவகாசம் இல்லாமல் உடனடியாக அவர்களுக்கு விவாகரத்து வழங்குவது வரவேற்கத்தக்கது” என்கிறார் கெளதமி.

குழந்தைகளின் நலன்கள் முக்கியம்

“பொதுவாகவே தங்களுடைய கண் முன்னே பெற்றோர் அடிக்கடி சண்டையிட்டுகொள்ளும் காட்சிகளை பார்ப்பது அல்லது கேட்கும் குழந்தைகளின் நலன்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் விவாகரத்து கோரும் தம்பதிக்கு குழந்தைகள் இருக்கும்பட்சத்தில், இந்த விவாகரத்து தொடர்பான பேச்சுக்கள், அடிக்கடி அவர்களின் முன்னால் நடந்தால் அது அவர்களின் மனநலத்தை பெரிதும் பாதிக்கும். எனவே சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்று முடிவானால், அந்த தம்பதிக்கு உடனடியாக விவாகரத்து வழங்குவது அவர்களின் வாழ்க்கைக்கு உதவும்” என்பது கௌதமியின் வாதம்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசியுள்ள எழுத்தாளர் ராஜசங்கீதன் ”இங்கே நாம் விவாதத்திற்கு எடுத்துகொள்ள வேண்டியது, விவாகரத்துகள் ஏன் அதிகரிக்கின்றன என்பது குறித்த சமூக சூழலைத்தானே தவிர, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அல்ல” என்கிறார்.

“இந்த காலத்தில் விவாகரத்து வாங்குவது எல்லாம் அதிகமாகி விட்டது என்ற பேச்சு, எல்லா காலத்திலும் ஒலித்துகொண்டுதான் இருக்கிறது. அது ஒரு பொருட்டல்ல.

உடனடி விவாகரத்து

இங்கு மீளவே முடியாத அளவிற்கு மணமுறிவு ஏற்பட்டிருக்கும் வழக்குகளில், பெரும்பாலும் அந்த தம்பதிக்கு விவாகரத்து கோரியதற்கான அழுத்தமான காரணங்கள் இருக்கும். சில பிரச்னைகள் குறித்து அவர்களால் வெளியே கூற முடியும், சிலவற்றை வெளியே சொல்ல முடியாது. அப்படியே அது குறித்து மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டாலும், கேட்பவர்களுக்கு அதன் ஆழமான தன்மை குறித்த புரிதல் இருக்காது.

எனவே இதுபோன்ற விவாகரத்து வழக்குகளில் இத்தகைய பிரச்சினைகள் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகின்றன. நம்முடைய அரசியல் சாசன சட்டம் என்பது ‘Liberal’ சட்டமாக இருக்கிறது.

இங்கு ’அளவு மாற்றம்தான் பண்பு மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்பார்கள்.

எனவே இன்றைக்கு இருக்கும் ’Liberalization’ தலைமுறையினருக்கு ஏதுவாக, விவாகரத்து சட்ட விதி ஒன்று உருவாகியிருக்கிறது.

மாறிவரும் சமூகத்திற்கு ஏற்றவாரு இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது வரவேற்கதக்கது” என்கிறார் ராஜசங்கீதன்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved