🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாட்னா நீதிமன்றம் திடீர் தடை!

மத்திய அரசு 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கை நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இக்கோரிக்கைக்கு செவிசாய்க்காத மத்திய அரசு மாநில அரசுகள் தேவைப்பட்டால் நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துவிட்டது.

பீகார் மாநிலத்தில் நீண்ட காலமாக சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கடந்த ஆண்டுசாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கக்  உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதனடிப்படையில் பீகார் மாநிலத்தில் இருகட்டங்களாக 45 நாட்கள் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கத் திட்டமிடப்பட்டு கடந்த ஜனவரி 7 ஆம் தேதிமுதல் 21 ஆம் தேதிவரை நடைபெற்ற முதல்கட்ட கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதுமுள்ள வீடுகள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் இரண்டாம்கட்ட கணக்கெடுப்புப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுவந்த சாதிவாரி கணக்கெடுக்கும் பணிக்கு அம்மாநில அரசு சுமார் 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த பணிக்காக அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தின பணியாளர்கள் பலருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. முதற்கட்ட கணக்கெடுப்பில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் சுமார் 2.58 கோடி குடும்பங்களும், அதில் சுமார் 12.70 கோடி மக்கள் தொகை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.  இந்த சாதி வாரிக் கணக்கெடுப்பு பணிகள் இந்த மே மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என  பீகார் மாநில அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் நிதிஷ்குமார்," சாதி அடிப்படையில் ஆன மக்கள் தொகை விவரத்தைத் தெரிந்து கொள்வதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலைமை குறித்து நமக்குத் தெரியும். அடித்தட்டு மக்களின் மேம்பாடு உறுதி செய்யப்படும். பாஜக கட்சி ஏழைகளுக்கு எதிரான கட்சியாக விளங்கி வருகிறது. அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை" என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இந்த சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத்தடை விதிக்க கோரி சமத்துவத்திற்கான இளைஞர்கள் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், வீடு வீடாகக் கணக்கு எடுக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனுத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இம் மனுவைத் தாக்கல் செய்த மூன்று நாட்களுக்குள் பரிசீலனை செய்து முடிவு வழங்குமாறு பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

பாட்னா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வரும்நிலையில்  சாதி வாரிக் கணக்கெடுப்புக்கு பாட்னா உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved