🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வினாத்தாள் லீக், ஆள் மாறாட்டம், தேர்வு மைய மோசடி, கருணை மதிப்பெண் குளறுபடி - அம்பலமாகும் நீட் மோசடி!

நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கமளித்து வரும் நிலையில், நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த மே 5ம் தேதி நாடு முழுவதும் 557 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 4,751 தேர்வு மையங்களில் நடந்தது. அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடந்தது. மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 1.55 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் 24 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நீட் தேர்வு எழுதினர்.

குஜராத் மாநிலம் பன்ச் மகால் மாவட்டம்  கோத்ராவில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடந்தது. அப்போது இந்த தேர்வு மையத்தில் ஜெய் ஜலராம் பகுதியில் உள்ள பள்ளியை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் துஷார் பட், தேர்வு மையத்தின் துணை சூப்பிரண்டாக பணியில் இருந்தார். அப்போது அவர் பணியில் உள்ள தேர்வு மையத்தில் நீட் எழுதிய 6 மாணவர்களிடம், ‛‛நீட் தேர்வில் விடை தெரியாவிட்டால் அதனை எழுதாமல் விட்டு விடுங்கள். தேர்வு முடிந்த பிறகு உங்களின் விடைத்தாளில் சரியான விடைகள் எழுதி தரப்படும்'' எனக்கூறி ரூ.10 கோடி பேரம் பேசியுள்ளார். இதற்கு 6 மாணவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதில் ஒருவர் சார்பில் ரூ.7 லட்சம் முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை துஷார் பட் வாங்கி தனது காரில் வைத்துள்ளார்.

துஷார் பட் முறைகேட்டில் ஈடுபடுவது பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றது. இந்த புகாரை தொடர்ந்து கூடுதல் கலெக்டர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஆகியோர் துஷார் பட்டை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது செல்போன் சோதிக்கப்பட்டது. அப்போது அந்த மையத்தில் தேர்வு எழுதிய 16 மாணவர்களின் தேர்வு எண், அவர்களின் பெயர் விபரங்கள் இருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் ஜூன்14 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் குஜராத்தை தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமாகி இருந்தது. நீட் தேர்வு வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை ஆனதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் என நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.  இந்த முறைகேடு சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம்,  ஜூன் 14ஆம் தேதி வெளியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட எந்தத் தடையும் இல்லை எனக் கூறி, இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை மாதம் ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 14ஆம் தேதி இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த பரபரப்பான நேரத்தில் சத்தமே இல்லாமல் நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 67 பேர் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்ததாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரே மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். ஆனால் தேசிய தேர்வு முகவை இந்த முறைகேடுகளை மறுத்துள்ளது. என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் தேர்வு மையங்களில் நேரத்தை செலவிட்டதற்கான கருணை மதிப்பெண் உள்ளிட்ட காரணங்களுக்காக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு காரணங்கள் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் தேர்வு முகமையின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்றும், வட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவதிலிருந்து வினாத்தாள் வழங்குவதுவரை பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே நீட் தேர்வில் நடத்திய விதம் மற்றும் கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையே,  நீட் தேர்வு முடிவு வெளியானதிலிருந்து தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை நாடுமுழுவதும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருவது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே, பிரியங்கா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 25 லட்சம் மாணவ, மாணவியரின் மருத்துவக்கனவை முழுமையாக அரசு நிறைவேற்றாவிட்டாலும் கூட, நடத்துகின்ற தேர்வை சிறப்பாக நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved