வெல்டிங் செய்யாமலே ஒட்டிக்கொள்ளும் பொருட்கள் - விண்வெளி ரகசியம்!
விண்வெளியில் இரண்டு இரும்பு ஆணிகளை ஒன்றோடு ஒன்று சேர்த்துப்பிடித்தால் என்ன நடக்கும்...!?
நிரந்தரமாக ஒட்டிக்கொள்ளும் ! - ஒரே துண்டாக மாறிவிடும் ! நம்ப முடியவில்லையா..? இதைதான் cold welding என்று அழைக்கிறார்கள் !
நமக்கு மிக பரீட்சயமான 'உருக்கி ஒட்டும்'(Welding) பற்றி கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். மிக வெப்பமான நெருப்பு சுவாலை கொண்டு உலோகத் துண்டுகளை உருக்கி, ஒட்டி பின்னர் குளிர வைப்பார்கள். அது 'hot welding'. ஆனால் விண்வெளியில் அது அவசியமில்லை.
ஒரே வகை அணுக்களாலான (உ+ம் :- இரும்பு Fe ) வேறு எந்த படையாலும் மூடப்படாத, சுத்தமான இரண்டு பொருட்களை ஒன்றுடன் ஒன்று தொட செய்தால் போதும்; அப்படியே இணைந்து ஒரே துண்டாக மாறிவிடும் ! பூமியில் ஏன் இது சாத்தியமில்லை..? விண்வெளியில் மட்டும் எப்படி முடிகிறது...?
அதற்கு காரணம் 'வளி'(காற்று). பூமியில் அனைத்து பொருட்களை சுற்றியும் வளி அல்லது ஏதேனும் வேறு அணுக்களாலான படை இருக்கும். (உ+ம்:- ஒக்சைட் படலம்...) ஆனால் விண்வெளியில் வளியே இல்லை. இதை பற்றி ஒரு விஞ்ஞானி இப்படி கூறுகிறார் .
"நீங்கள் விண்வெளியில் இரண்டு ஒரே அணுக்களாலான பொருட்களை சேர்க்கும்போது அவை இரண்டும் வேறு வேறான பொருட்களுக்கு சொந்தமானவை என்று அவற்றுக்கே தெரியாது. அதனால் உடனே ஒன்றாகி விடுகின்றன. ஆனால் பூமியில் அவற்றுக்கு இடையே இருக்கும் ஏதாவது ஒன்று உண்மையை அந்த அணுக்களுக்கு காட்டிக்கொடுத்து விடுகின்றன."
விண்வெளியில் மட்டுமல்ல, பூமியிலும் வளியற்ற (Vaccum) அறையை அல்லது ஒரு சிறு இடத்தை உருவாக்கி இதனை செய்ய முடியும் ! விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பி, அதில் பல காரியங்கள் செய்யும் போதும், மனிதர்கள் திருத்தும், பொருத்தும் வேலைகள் செய்யும் போதும் இந்த cold welding effect பல சிக்கல்களை உருவாக்கி உள்ளது. இதனால் அங்கு பயன்படும் கருவிகள், உபகரணங்களின் மேல் ஒரு பிளாஸ்டிக் பூச்சு இடப்படுகிறது!