தாமஸ் ஆல்வா எடிசன் Vs நிகோலா டெஸ்லா - மின்சாரத்தின் கதை!

தெஸ்லா உருவாக்கிய ஆடலோட்ட மின்சாரம் (Alternative Current - AC) அதிக வோல்ட் அளவை கொண்டிருந்தது. அதனால்தான் அதிக தூரத்திற்கு அந்த மின்சாரத்தை விநியோகிக்க கூடியதாக இருந்தது. இதை எடிசன் ஒரு பெரும் ஆபத்தாக கூறினார். அதிக வோல்டளவு உயிரை கொல்லக் கூடியது என்று பயமுறுத்தினார். எடிசன் உருவாக்கிய நேரோட்ட மின்சாரத்தின் (Direct Current - DC) வோல்ட் அளவு குறைவு என்பதால் அந்த ஆபத்து இல்லை, அது பாதுகாப்பானது என்று கூறினார்.
இது மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்களவு பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், என்னதான் இருபதாம் நூற்றாண்டு அண்மித்திருந்தாலும், ஆபத்தை விலை கொடுத்து வாங்கி, அதை வீட்டுக்குள்ளேயே கொண்டுவரக்கூடாது என்பதில் மக்கள் விழிப்பாயிருந்தார்கள். ஆனால் எடிசனின் ஆதரவாளர்கள் வெறும் வார்த்தைகளோடு நிற்கவில்லை.
1888 ம் ஆண்டு ஏராளமான தெருநாய்களை ஒன்றுதிரட்டி, அவற்றின்மீது AC மற்றும் DC மின்சாரத்தை பாயச்செய்து, AC தான் மிக விரைவாக நாய்களை கொல்கிறது என்று நடைமுறை உதாரணங்கள் காட்டப்பட்டன. இந்த கொடூரம் படிப்படியாக மாடுகள், குதிரைகள், யானைகள் என்று பாரிய விலங்குகள் வரை தொடர்ந்தது. இதன் மறைமுக நோக்கம் மிகத்தெளிவானது. மனிதனை விட பெரிய விலங்குகளுக்கே டெஸ்லாவின் மின்சாரம் இத்தனை சீக்கிரமாக, கொடூரமாக மரணத்தை கொடுக்கிறது என்றால், மனிதர்களின் நிலை எவ்வளவு ஆபத்தானது ? – என்பதை எடிசன் தரப்பு நிரூபிக்க துடித்தது.
அனைத்துக்கும் உச்சமாக, அமெரிக்க நீதிமன்றம், மின்சாரம் பாய்ச்சி கொல்வதை மரண தண்டனை முறையாக ஏற்றுக்கொண்டது. 1990 இல் வில்லியம் கெம்லர் என்கிற கொலைக் குற்றவாளி, ஒரு மர நாற்காலியில் அமர்த்தப்பட்டு, கைகால்கள் கட்டப்பட்டு, மின்கம்பிகள் பொருத்தப்பட்டு, alternating current அதாவது ஆடலோட்ட மின்சாரம் செலுத்தி கொல்லப்பட்டார். இதுவே மின்சார கதிரை மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் தடவையாகும். இந்த முறை, பின்னர் உலகின் மற்ற நாடுகளிலும் வழமைக்கு வந்தது. இன்றும் சட்டரீதியாக சில இடங்களில் அதற்கு அனுமதி இருந்தாலும், மிக மிக அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.
“மனிதனை கொல்வதற்காக பயன்படுத்தும் ஆடலோட்ட மின்சாரத்தை, வீடுகளில் பயன்படுத்த யாராவது முன்வருவார்களா !?” என்று எடிசன் தரப்பு நினைத்தது. ஆனால் யாருமே எதிர்பாராததை தெஸ்லா செய்தார்.
ஆடலோட்ட மின்சாரத்தின் மீடிறனை(Frequency), அதாவது, ஒரு செக்கனுக்கு எத்தனை தடவை திசை மாற்றுகிறது என்பதை அதிகரித்தால் அதனால் மனித உடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாது என்று கண்டறிந்தார் தெஸ்லா. இதை மக்களுக்கு காட்டவேண்டும், மின்சாரத்தை சரியான முறையில், பாதுகாப்பாக பயன்படுத்தினால் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்காக மிருகங்களையோ வேறு மனிதர்களையோ பயன்படுத்தாமல் தன்னையே பயன்படுத்தினார்.
1891 ம் ஆண்டு, ஊடகவியலாளர்கள், விஞ்ஞானிகள், முதலீட்டாளர்கள் என அனைவரும் கூடி நிற்க, மிக அதிகமான வோல்ட் அளவும், அதிக மீடிறனும் கொண்ட ஆடலோட்ட மின்சாரம் அவர் உடலினூடாக பாய்ந்து, அவர் கையில் பிடித்திருந்த கோலின் மூலம் மறு முனைக்கு கடத்தப்பட்டது. எந்தவித பாதுகாப்பு உடையோ, கவசமோ அணியாமல், தெஸ்லா செய்துகாட்டிய இந்த செய்கை, அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஒரு மாயாஜாலம் போல காட்சியளித்தது!
இந்த சம்பவம், நிலைமையை தலைகீழாக மாற்றியது. எடிசன்-தெஸ்லா இருவருக்குமான போட்டியை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டுவந்தது. 1896ம் ஆண்டு புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியில், ஜோர்ஜ் வெஸ்டிங்ஹௌஸ் நிறுவனம் மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கி, டெஸ்லாவின் முறைப்படி, ஆடலோட்ட மின்சாரத்தை உற்பத்தி செய்து, நியூயோர்க் பஃப்பலோ நகரை ஒளியேற்றியது ! எடிசனின் கனவு, தெஸ்லா மூலம் நிறைவேறியது !