பூமியில் 180 கிமீ விட்டம், 20 கிமீ ஆழம் கொண்ட பிரமாண்ட பள்ளம் உருவானது எப்படி?

மெக்சிகோவின் யுகட்டான் வளைகுடா பகுதியில் இருக்கிறது ச்சிக்ஸலூப் என்கிற பெரும்பள்ளம். பெரும்பள்ளம் என்றால் ஏதோ கொஞ்சம் பெரிதாக இருக்கும் என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இது 180 Km விட்டமும், 20 Km ஆழமும் கொண்ட ஒரு மாபெரும் பள்ளம்!.
பூமியின் மேற்பரப்பில், இப்படி ஒரு பள்ளம் எப்படி ஏற்பட்டது ? எது ஏற்படுத்தியது ? அந்த கதை மிகப்பழைமையானது. அதை அறிந்துகொள்ள 65 மில்லியன் ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்...
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 10 Km விட்டம் கொண்ட ஒரு மிகப்பெரிய விண்கல் பூமியில் மோதியது. மோதிய விண்கல்லின் விட்டமே 10 Km என்றால், அது ஏற்படுத்திய தாக்கம் எவ்வளவு பெரிதாக இருக்கும்...!? அதன் விளைவாக உருவானதுதான் இந்த ச்சிக்ஸலூப் பெரும்பள்ளம்.
சரி, பள்ளம் மட்டும்தானா ? வேறொரு பாதிப்பும் இல்லையா ? இருக்கிறது. அதுதான் மிகப்பெரும் சோகம். உலகின் உயிரினங்களின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய அதிர்ச்சிகளுள், அவலங்களுள் அதுவும் ஒன்று!
விண்கல் மோதியதால் எழுந்த கல்லும், மண்ணும், தூசு துகள்களும் வளிமண்டலத்தையும் தாண்டி விண்வெளி வரை சென்றன. மோதல் நிகழ்ந்த இடத்தில் சுமார் 9 முதல் 11 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, 100 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்தன. பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணித்த இந்த ராட்சத அலைகள் பாரிய அழிவுகளை உருவாக்கின.
பூமியின் மேற்பரப்பு சூடான காரணத்தால் காட்டுத்தீ அனர்த்தங்கள் ஏற்பட்டு, உலகின் மொத்த காடுகளில் 70% இனை அழித்தன. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வான் நோக்கி எழுந்த தூசுகளும் சல்பேட்டுக்களும் சூரிய ஒளியை மறைத்து, உலகை குளிர்மையடைய செய்தன. அமில மழை பொழிந்தது. சூர்ய ஒளி இன்மையால் மிஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச தாவரங்களும் ஒளித்தொகுப்பு செய்து உணவு தயாரிக்க முடியாமல் மடிந்து போயின. காலநிலை மாற்றம் மற்ற உயிரினங்களை கொன்றது. உலகில் அன்று வாழ்ந்த மொத்த உயிரினங்களுள் 75% ஆனவை இதனால் அழிந்தன.
கடலாமைகள், முதலைகள் போன்ற சில உயிரினங்களையும், 25 Kg களுக்கு குறைவான ஒருசில நான்கு கால் உயிரினங்களையும் தவிர மற்ற எதுவுமே உயிர்த்தப்பவில்லை. இதில் அழிந்துபோன மிக முக்கியமான உயிரினம்தான் டைனோசர்.