தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுடன் சந்திப்பு!
தமிழகத்தில் வாழும் தெலுங்கு சமுதாயங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு டிஎன்டி சாதிசான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் தெலுங்கு சமுதாயங்கள் சார்பில் முறையிடப்பட்டது. இப்பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகாண உதவுமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் விவரம் வருமாறு,
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மொழி சிறுபான்மையினருக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருபதிற்கும் மேற்பட்ட சாதியினர் தெலுங்குமொழி பேசுபவர்களாகவும், மக்கள்தொகை அடிப்படையில் 30% முதல் 35% என்று மதிப்பிடப்படுகிறது. இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடைக்கோடி கிராமங்கள் வரை 200 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக ஒரே கிராமங்களில் வசித்து வருகின்றனர். கடந்த தலைமுறை வரை தெலுங்கு மொழியில் பேசிவந்த இக்குடும்பங்களில் 2K கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைய தலைமுறையினர் பெரும்பாலும் தெலுங்குமொழி பேசுவதில்லை.
குறைந்தபட்ச அளவில் கூட தெலுங்கு மொழி தெரியாமல் இன்றைய தலைமுறை வளர்ந்துவிட்ட காரணத்தால், இவர்களை மொழி சிறுபான்மையினர் என்று அடையாளம் காணுவதிலும், சான்றிதழ் வழங்குவதிலும் அதிகாரிகளிடையே தயக்கம் நிலவி வருகிறது. இதனால் மொழி சிறுபான்மையினர் என்று சான்றிதழ் பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டு, சேர்க்கையின்போது சான்றிதழை உடனடியாக வழங்கமுடியாத சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இதில் குறிப்பாக முதல் தலைமுறையாக கல்லூரிக்குள் நுழையும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிக பாதிப்பிற்குள்ளாகின்றனர். ஆகவே மொழி சிறுபான்மை சாதிகளை தனியாக வகைப்படுத்தி சாதிச்சான்றிதழோடு, சிறுபான்மை மொழியினருக்கான சான்றிதழையும் வழங்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகாண வேண்டும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
அதேபோல் தெலுங்கு மொழி பேசும் வேறு சில சாதிகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு அமைச்சரிடம் வலியுறுத்தினர். அப்போது தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் மற்றும் சமூகநீதிக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.இராமராஜ் ஆகியோர் டிஎன்டி ஒற்றைச்சாதிச் சான்றிதழ் வழங்குவதாக தமிழக முதல்வர் கொடுத்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படாமல் ஏற்கனவே உள்ள நடைமுறையில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அரசின் அறிவுப்பு வெளியாகியிருப்பதை சுட்டிக்காட்டி அக்குறைகளைப்போக்குவதோடு, சாதிச்சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவு வழங்கவும் வலியுறுத்தினர்.
இச்சந்திப்பின்போது கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் காரணமாக கலந்துகொள்ள முடியாததை நினைவுக்கூர்ந்து, கட்டபொம்மன் அகாடமி குறித்து கேட்டறிந்து தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அமைச்சருடனான இந்த சந்திப்பின்போது மூத்த வழக்கறிஞர் நாமக்கல் பழனிச்சாமி, தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகிகள் எம்.சரவணன், தங்கவேல், மனோகரன், கண்ணன், வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.