🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவர் தெரியும் - இந்தியப்பெருஞ்சுவர் தெரியுமா?

உலக அதிசயங்களில் ஒன்று சீனாவில் இருக்கும் பெருஞ்சுவர். 'தி கிரேட் வால் ஆஃப் சைனா' 21,196 கிலோமீட்டர் தூரம் நீள்கிறது.

கி.மு 220 இல் திறக்கப்பட்ட இந்த கட்டிடக்கலை மிக அற்புதமானது. சீனாவை ஆண்ட மிங் வம்சத்தினரால் முதன் முதலில் கட்டப்பட்டதாகும். அதன் பிறகு வந்த மன்னர்களும் குறிப்பிடத்தக்க கட்டமைப்புகளை மேற்கொண்டு இதனை நீட்டித்தனர் என்றே தகவல்கள் கூறுகின்றன.


சரி இந்த சீன பெருஞ்சுவர் பற்றிதான் நமக்கு தெரியுமே. இப்போது ஏன் இதை பற்றி பேசவேண்டும்? இந்தியாவிலும் ஒரு பெருஞ்சுவர் இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

அதற்காக தான் இந்த முன்னுரை!

இந்தியாவின் பெருஞ்சுவர் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. உதய்ப்பூரில் இருந்து சுமார் 84 கி மீ தொலைவில் இடம்பெற்றிருக்கும் கும்பால்கர் கோட்டை மதில் தான் இந்தியாவின் பெருஞ்சுவர் என்று அடையாளப்படுத்தப்படுகிறது.

உலகின் மிக நீண்டச் சுவர்களில் இதுவும் ஒன்று. ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்திருக்கும் இந்த கோட்டை, 15ஆம் நூற்ராண்டில் ராணா கும்பா என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோட்டைச் சுவரின் நீளம் 36 கிலோமீட்டர். இதுவே உலகின் இரண்டாவது பெருஞ்சுவராகும். புராணங்களின் படி இந்த கோட்டையின் அகலம், 8 முழுதாக வளர்ந்த குதிரைகள் நிற்கும் அளவிற்கு இருக்குமாம்.

கோட்டையின் உட்புற கட்டமைப்பும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. கோட்டையின் மீதேற மேடை போன்ற வடிவம் ஒன்று உள்ளது. ஆனால் அதுவும் அதிகமான வளைவுகள் நிறைந்ததாக உள்ளன. அந்தக் காலத்தில் யானை மற்றும் குதிரை படைகளின் தாக்குதல்கள் அதிகமாக இருந்ததால், இது போன்ற நுணுக்கமான கட்டமைப்பு தேவைப்பட்டது.


மேலும் கோட்டையைச் சுற்றி ஏராளமான பொறிகளும் எப்போதும் தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த கோட்டைக்கு மற்றுமொரு சிறப்பும் இருக்கிறது. ராஜஸ்தானை ஆண்ட மாமன்னர் மஹாராணா பிரதாப் சிங்கின் பிறப்பிடம் இது தான்.

இந்த கோட்டைக்குள் அழகிய, பிரமிப்பூட்டும் வேலைபாடுகளுடன் கூடிய கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் சிறப்பு வாய்ந்தது, நீலகண்ட மகாதேவ் கோவில். இது மிகவும் உயரமான ஒரு கட்டிடக்கலை அற்புதமாக திகழ்கிறது. இந்த கோட்டையும் இந்தியாவின் வீழ்த்தப்படாத கோட்டைகளில் ஒன்றாக உள்ளது, அதிக சுற்றுலா பயணிகளின் கவனத்தைபெறாத இடமாக இருப்பது தான் வேதனையான ஒன்று.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved