🔴 LIVE | முப்பெரும் விழா 2023


எச்சரிக்கை! - குழந்தைகளை காவு வாங்கும் சந்திப்புரா வைரஸ் மூளைக்காய்ச்சல்.

தற்போது நமது நாட்டின் குஜராத் மாநிலத்தில் சந்திபுரா மூளைக்காய்ச்சல் அபாயகரமான அளவில்  குழந்தைகளிடையே பரவி வருகிறது. 

இதுவரை இந்தத் தொற்றுக்கு உள்ளான 29 குழந்தைகளில் 15 குழந்தைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும் கிட்டத்தட்ட ஒரு டஜன் மாவட்டங்களில் இருந்து மொத்தம் 29 வழக்குகள் பதிவாகியுள்ளன. 29 வழக்குகளில், 26 குஜராத்தைச் சேர்ந்தவை, இரண்டு ராஜஸ்தானைச் சேர்ந்தவை, ஒரு வழக்கு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவை. 15 இறப்புகளில், 13 பேர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர் அண்டை மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்.நிலைமையின் தீவிரம் கருதி நாம் அனைவரும் இந்தத் தொற்று குறித்தும் அதன் அறிகுறிகள், பரவும் விதம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்து வைத்திருப்பது கட்டாயமாகிறது. 

சண்டிபுரா வைரஸ் என்றால் என்ன?

ஒரு கட்டுரையின்படி, 'சண்டிபுரா வைரஸ்: வளர்ந்து வரும் மனித நோய்க்கிருமி? '2004 இல் தி லான்செட்டில் வெளியிடப்பட்டது , இந்த வைரஸ் ராப்டோவிரிடே குடும்பத்தின் வெசிகுலோவைரஸ் இனத்தைச் சேர்ந்தது. தற்செயலாக இந்த குடும்பத்தில் ரேபிஸ் வைரஸும் அடங்கும். சண்டிபுரா வைரஸ், முதன்முதலில் 1965 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பெரியவர்களின் இரத்தத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது. இந்த வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. மனிதர்களில் வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட மற்றொரு நிகழ்வு, 1980 ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேசத்தில் கடுமையான மூளைக்காய்ச்சல் நோயாளியிடமிருந்து, கட்டுரை கூறுகிறது.

இந்தத் தொற்று பெரும்பாலும் கிராமங்களில் பரவுவது தெரிகிறது. இந்த சந்திப்புரா வைரஸானது கிராமங்களில் உள்ள மண்ணால் ஆன வீடுகளில் உள்ள விரிசல்களில் புற்று கட்டி வளரும் மணல் ஈக்களின் வாய்களுக்குள் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளுக்குள் வளரும். இந்த மணல் ஈக்கள் மனிதர்களைக் கடிக்கும் போது அவர்களுக்கு வைரஸ் தொற்று கடத்தப்படுகிறது. இவ்வாறாக தொற்றைப் பெற்றவரிடம் இருந்து மணல் ஈக்கள் மற்றும் சில வகை கொசுக்கள் இந்த வைரஸை ஆரோக்கியமான நபர்களுக்கு பரப்பிவிடுகின்றன. 

இந்த வழி தவிர மனிதர்களிடையே தொடுவதாலோ வேறு வழிகளிலோ வைரஸ் பரவுவதில்லை. இவ்வாறு வைரஸ் தொற்றைப் பெரும் குழந்தைகளுள்  சிலருக்கு நோயின் அறிகுறிகள் வெளிப்படும் 

- அதீத காய்ச்சல் 

- வலிப்பு 

- குழப்ப நிலை 

- வாந்தி 

- வயிற்றுப் போக்கு 

- தலைவலி 

- மூர்ச்சை நிலை 

- கோமா  ஏற்படுகிறது. 

இந்த வைரஸ் ஃப்லிபோடோமைன் எனும் மணல் ஈ வகையும் கூடவே டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் இஜிப்டி வகை கொசுக்களாலும் பரவும் என்பதால் ஏற்கனவே டெங்கு தொற்றுப் பரவல் உள்ள மாநிலங்கள் அலர்ட் நிலையில் இருக்க வேண்டும். 

2003 இல் நடந்த சந்திப்புரா மூளைக்காய்ச்சல் நோயில் ஆந்திர பிரதேசத்தில் 183 குழந்தைகள் மடிந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இறந்த குழந்தைகளைப் பொருத்தவரை, மருத்துவமனையில் அட்மிட் ஆன 48 மணிநேரங்களுக்குள் மரணம் சம்பவித்திருக்கிறது. நோய்த் தொற்று கண்டவரின் ரத்த மாதிரிகளில் இருந்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து வைரஸைக் கண்டறியலாம். நோய் நிலைக்கு ஆளானோருக்கு சுவாசம் விடுதல், ரத்த ஓட்டம், நாடித்துடிப்பு, போன்றவை முறையாகப் பராமரிக்கப்பட்டு அதனுடன் நீர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் சரியாக இருக்குமாறு சிரை வழி திரவங்கள் வழங்கப்படும். 

எவ்வாறு இந்தத் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது? 

மணல் ஈக்கள் உருவாகும் இடங்களான வீடுகளில் உள்ள விரிசல்களைப் பூசிவிட வேண்டும்.

பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்து அவற்றைக் கொல்ல வேண்டும்.

டெங்கு கொசு உற்பத்தி ஆகும் இடங்களை அழிக்க வேண்டும். 

வீட்டுக்குள்ளும் வீடுகளுக்கு வெளியேவும் நீர் சிறிதளவு கூட தேங்கி நிற்பதை தடுக்க வேண்டும். 

குழந்தைகளுக்கு கை கால்களை முழுவதுமாக மறைக்குமாறு உடை அணிவிக்க வேண்டும். கொசு வலைக்குள் குழந்தைகளைப் படுக்க வைக்கலாம். 

வீட்டில் சேரும் குப்பைகளை உரிய முறையில் வெளியேற்ற வேண்டும். கொசு விரட்டிக் களிம்புகள், விரட்டிகள் போன்றவற்றை உபயோகித்து கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

சந்திப்புரா வைரஸ் தொற்று பரவும் மாநிலங்களின் பரவல் இருக்கும் மாவட்டங்களில்  இருந்து நமது ஊருக்கு வரும் மக்களில் இந்த அறிகுறிகள் தோன்றினாலும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஒரு நல்ல செய்தி: 

இதுவரை 1965, 2003 ,2009 -2011 ஆகிய காலங்களில் இந்த வைரஸ் பரவல் நிகழ்ந்துள்ளது.எனினும் நாடு முழுவதும் பரவியதாகவோ, மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை உயிர்சேதங்களை ஏற்படுத்தியது எனவோ வரலாறு இல்லை. எனவே அளவு கடந்த அச்சம் தேவையில்லை. எச்சரிக்கை உணர்வு போதுமானது. ஒவ்வொரு  உயிரும் நமக்கு முக்கியமானதே. 

நன்றி : Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved