🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திருநெல்வேலியில் கட்டபொம்மனாரின் சிலை அகற்றம் - அதிகாரிகளின் அலட்சியப்போக்கிற்கு கடும் கண்டனம்.

பரங்கியருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பாளையக்காரர்களில் முதன்மையானவரும், விடுதலை முரசு கொட்டி தூக்குக்கயிரை முத்தமிட்டு மக்கள் நெஞ்சங்களில் சுதந்திரத்தீயைப் பற்ற வைத்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் சிலை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அகற்றப்பட்டிருப்பதற்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் வீரத்திற்குப்பெயர் போன பாஞ்சாலங்குறுச்சி பாளையத்தை ஆண்டு வந்தவர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். வியாபர நோக்கில் இந்தியாவிற்குள் நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு நாடு பிடிக்கும் ஆசை வந்தபின், வடபுலத்தை ஆண்டு வந்த சிற்றரசர்களை வீழ்த்தி தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்தவர்களுக்கு தென்னகத்தில் எழுந்த எதிர்ப்பே இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறுக்கு வித்திட்டது. இந்தியாவின் 90 சதவீத நிலப்பரப்பை பெரிய அள்வில் சேதாரமின்றி கைப்பற்றிய பரங்கியர் படைக்கு தெற்குச்சீமையை ஆண்ட பாளையக்காரர்கள் பெருத்த சேதத்தை ஏற்படுத்தினர். தன் பராக்கிரமத்தால் ஆங்கிலேயர்களை பெரும் அச்சம் கொள்ளச் செய்தவர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். தான் வீழும் முன் ஆங்கிலேயர்களை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர். இதனால் வரலாற்றில் தங்கள் வீரத்தை நிலைநிறுத்த ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு பல பாளையக்காரர்கள் தள்ளப்பட்டனர் என்றால் மிகையல்ல. இப்படியாக ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிராக தென்பாண்டிச்சீமை பாளையக்காரர்கள் சிந்திய ரத்தமே பின்நாட்களில் பாடல் வடிவமாகவும், கதைகளாகவும் உருவகம் பெற்று சாமானிய மக்களிடம் சுதந்திர வேட்கையை விதைக்கமுடிந்தது.

அப்படிப்பட்ட பாளையக்காரரான மாவீரன் கட்டபொம்மனை கௌரவப்படுத்தும் வகையில் 1986 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டத்திற்கு நெல்லை கட்டபொம்மன் மாவட்டம் என பெயர் சூட்டினார். பின்நாளில் ஏற்பட்ட ஜாதி கலவரம் காரணமாக சமுதாயத் தலைவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்டது. எனினும் மக்கள் மனங்களில் நீக்கமுடியவில்லை.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் கட்டபொம்மன் கம்பீரமாக கையில் வாளுடன் காட்சி அளிக்கும் முழு உருவ சிலை அமைக்கப்பட்டிருந்தது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சிலை அங்கு இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிலையை காணவில்லை. வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சிலை வேறு இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கலாம் என்று மக்கள் எண்ணியிருந்தனர்.

தற்சமயம் அக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் சீரமைப்புப் பணிக்காக அப்புறப்படுத்தப்பட்ட கட்டபொம்மன் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படாதது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிருந்து அகற்றப்பட்ட கட்டபொம்மன் சிலை அரசு அருங்காட்சியகத்தில் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவீரன் கட்டபொம்மனாரின் சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்காமல் இருப்பதற்கு அதிகாரிகளின் கவனக்குறைவா? அல்லது அலட்சியப்போக்கா? என்று கண்டனம் தெரிவித்துள்ள இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், 50 ஆண்டுகளாக வீற்றிருந்த அதே இடத்தில் மீண்டும் கட்டபொம்மனாரின் சிலை நிறுவப்பட மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வருக்கு தனிப்புகார் கடிதமும் அனுப்பியுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved