ஆகஸ்டு முதல்வாரத்தில் மீண்டும் கட்டபொம்மன் சிலை!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை கையில் வாளுடன் கம்பீரமாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது மாயமானதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் மீண்டும் சிலை அதே இடத்தில் கட்டபொம்மனன் சிலை நிறுவப்பட வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கம் அமைந்துள்ளது. இந்த அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் வாரந்தோறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. அரங்கின் முன் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அகற்றப்பட்டது. வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் சீரமைப்புப் பணிகள் நிறைவுபெற்று திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மனுக்களை துறை வாரியாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு பல ஆண்டுகளாக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை மட்டும் மீண்டும் வைக்கப்படாமல் இருந்துவந்துள்ளது. இதனால் சிலை மாயமானதாக தகவல் கட்டுத்தீயாக தமிழகம் முழுவதும் பரவியதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து வரும் 29-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக விடுதலைக்களம் கட்சி அறிவித்தது.
இச்செய்தி பல்வேறு நாளிதழ்களில் வெளியானதையடுத்து இச்சம்பவம் குறித்து தற்போது விளக்கமளித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் விளக்கத்தை வெளியிட்டுள்ள தினகரன் நாளிதழ் செய்தியின்படி, வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு பெய்த கன மழை வெள்ளத்தால் கலெக்டர் அலுவலகம் சூழப்பட்ட நிலையில், வெள்ள நீரில் சிக்கிய கட்டபொம்மன் சிலை சேதம் அடைந்து காணப்பட்டது. இது கட்டிட மறுசீராய்வு பணியின்போது தெரியவந்தது. இதையடுத்து கட்டபொம்மன் சிலை சீரமைப்பு பணிக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிலை மாவட்ட வளர்ச்சி மன்ற அரங்க அரங்கில் மீண்டும் வைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் விளக்கத்தையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வீ.கபொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், சுதந்திரப்போராட்ட மாவீரன் கட்டபொம்மன் சிலை காணமல் போனதாக சொல்லப்பட்ட விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு விளக்கம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சிலை பிளாஸ்டர் ஆப் பாரீஸ் பொருளால் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. பிளாஸ்டர் ஆப் பாரீஸால் செய்யப்படும் பொருட்கள் நீண்ட ஆயுட்காலம் கொண்டதோ, உறுதியானதோ அல்ல. எளிதில் சேதமாகக்கூடிய வாய்ப்பும், அதிக பராமரிப்பும் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சிலை வெங்கலச் சிலையாகவோ, கற்சிலையாகவோ வைக்கப்பட்டிருந்தால் வெள்ளநீரால் ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என்பதாலேயே சேதமடைந்துள்ளது தெரியவருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆகஸ்டு மாதம் மீண்டும் அச்சிலை அதே இடத்தில் நிறுவப்படும் என்று விளக்கமளித்துள்ள நிலையில், ஆளுயர வெங்கல சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.