உலகில் ஒற்றை கான்ஸ்டபிளால் அடக்கப்பட்ட புரட்சி!
1565
பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் நடுவே இங்கலீஷ் சேனல் (English Channel) உள்ளது. இங்கே சேனல் தீவுகள் (Channel Island) எனும் தீவுகூட்டம் உண்டு. பிரிட்டனைச் சேர்ந்த இந்த தீவுகளில் 2.1 கிமி பரப்பளவுள்ள சார்க் (Sark Islands) எனும் தீவும் உண்டு. இது பாறைத்தீவு என்பதாலும், இங்கே ஆறுகள் இல்லை என்பதாலும் இங்கே மக்கள் குடியேறவில்லை. இதைப்பயன்படுத்திக்கொண்ட கடற்கொள்ளையர்கள் சார்க் தீவை ஆக்கிரமித்துக்கொண்டு பிரிட்டிஷ் கப்பல்களுக்கு தொல்லை கொடுத்து வந்தார்கள். பிரிட்டானிய கடற்படை ரோந்து வருகையில் தீவை விட்டு ஓடிப்போவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கோபமடைந்த ராணி முதலாம் எலிசபெத் சார்க் தீவில் மக்களை நிரந்தரமாக குடியேற்றினால் தான் கடற்கொள்ளையரை விரட்ட முடியும் என உணர்ந்தார். அருகே இருந்த ஜெர்ஸி தீவில் இருந்து ஒரு பிரபுவை (Lord) அழைத்த ராணி எலிசபெத், "சார்க் தீவு முழுக்க உனக்கு சொந்தமாக கொடுக்கிறேன். அங்கே நீ ஒரு ஐம்பது குடும்பங்களை கொண்டு சென்று குடியேற்றி, அங்கே குடியேறுபவர்களிடம் நீ என்ன வரி வேண்டுமானாலும் வசூலித்து கொள்ளலாம். இது தவிர தீவுவாசிகளுக்கு பிரிட்டிஷ் குடியுரிமையும் உண்டு. அதேசமயம் பிரிட்டன் சார்பில் எந்த வரியும் விதிக்கப்படாது. ஒரே நிபந்தனை கடற்கொள்ளையர் வந்தால், நீங்கள் எல்லாம் சேர்ந்து அவர்களை விரட்ட வேண்டும். தீவுக்கு வாடகை ஆண்டு ஒன்றுக்கு £1.79 பவுண்டு பிரிட்டன் அரசுக்கு கொடுக்கவேண்டும். இனி சூரிய சந்திரர் உள்ளவரை உன் வம்சாவளிக்கு தீவு சொந்தம்... என்றார் ராணி.
ராணியின் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டு 40 போர்வீரர்கள் குடும்பங்களை அழைத்துக்கொண்டு சார்க் தீவுகளில் குடியேற்றினார் பிரபு. தீவுவாசிகளுக்கு விதிக்கபட்ட நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். கடற்கொள்ளையர்கள் வந்தால் குடும்பத்துக்கு ஒருவர் துப்பாக்கியுடன் போருக்கு வரவேண்டும். தீவு பாறைத்தீவு என்பதால், தீவின் மேலிருந்து சில முக்கிய இடங்களில் கோட்டைகள், அரண்களை அமைத்து துப்பாக்கியுடன், பீரங்கியுடன் நிற்கும் ஐம்பது பேரால், பலநூறு பேர் கொண்ட கடற்கொள்ளையர் படையையும் முறியடிக்க முடியும் என்பதால் சார்க் தீவுகளில் கொள்ளையர் பிரச்சனை ஒழிந்தது.
1990
சார்க் தீவை அந்த பிரபுவின் வாரிசுகள் ஆண்டு வருகிறார்கள். இன்றும் ப்ரிட்டிஷ் அரசுக்கு ஆண்டுக்கு £1.79 பவுண்டு மட்டுமே வரி கட்டுகிறார்கள். மூத்தமகன் ஆட்சிக்கு வருவார். பிற மகன்கள், மகள்கள் பிரிட்டனுக்கு சென்றுவிடுவார்கள். தீவின் மக்கள் தொகை 500 மட்டுமே. தீவில் கார்களுக்கு அனுமதி இல்லை. விவசாயத்துக்கு டிராக்டர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மீன் பிடித்து, ஆடு, மாடு, கோழி வளர்த்து மக்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆறுகள் இல்லை, கிணறுகளும், மழைநீர் சேமிப்பும் தான் நீருக்கு வழி. குதிரை வண்டிகளும், குதிரைகளும் தான் போக்குவரத்துக்கு பயன்படுகின்றன (2024லிலும் அதே நிலைதான்). சாலைகள் இல்லை, தெருவிளக்குகள் அவசியம் இல்லை. குற்றம், திருட்டு, வழிப்பறி எதுவும் இல்லை. ஏழைகள் இல்லை, பணக்காரர் இல்லை, மக்கள் நலன் பேணும் பிரபுவின் நல்லாட்சி. தீவுக்கு ஒரே ஒரு சம்பளம் இல்லாத கான்ஸ்டபிள் மட்டுமே. அவர் தான் தீவின் மின் உற்பத்தி, மளிகை கடையையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மளிகைக்கடையில் அமர்ந்து இருந்த அந்த கான்ஸ்டபிளுக்கு மக்களிடம் இருந்து ஒரு தகவல் வந்தது. "தீவை நாளை ஒரு புரட்சிப்படை ஆக்கிரமிக்க போகிறதாம். துப்பாக்கியுடன் பிரபுவின் அலுவலகத்தைக் கைப்பற்றி சர்வாதிகார ஆட்சியை அமைக்க போகிறார்கள்".
"புரட்சியா நம்ம தீவிலா? யார் அது?"
புரட்சி செய்யவிருந்தது ஒரு பிரான்சு அணு விஞ்ஞானி. வேலை இழந்த அவருக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அருகே சார்க் தீவு இருந்தது. அதன் பாதுகாப்புக்கு ராணுவம் எதுவும் இல்லை. "நாம் ஏன் அதை புரட்சி நடத்தி கைப்பற்றி மன்னர் ஆகக்கூடாது?" என்று எண்ணினார் அந்த அணு விஞ்ஞானி.
சார்க் தீவுக்கு படகில் துப்பாக்கிகளுடன் வந்தார். அங்கே இருந்த ஓட்டலில் தங்கினார். கொண்டு வந்திருந்த புரட்சி போஸ்டர்களை இரவோடு, இரவாக ஒட்டினார். புரட்சி மறுநாள் மதியம் 12 மணிக்கு துவங்குவதாக சொல்லபட்டு இருந்தது. புரட்சி துவங்க இன்னும் 10 நிமிடங்கள் இருந்ததால் ஊர் மத்தியில் உள்ள டவுன்ஹாலுக்கு போய் ஒரு காப்பி குடித்துக்கொண்டிருந்தார் புரட்சி வீரர்.
கான்ஸ்டபிள் மப்டியில் அவருக்கு அருகே சென்றார்.
"புரட்சி ஆரம்பிக்கறேன்னு போஸ்டர் ஒட்டிருக்கீங்க. பார்க்கலாம்னு வந்தேன். இந்த துப்பாக்கியை வெச்சுட்டு தான் புரட்சி பண்ண போறீங்களா? ரொம்ப நவீன துப்பாகியா இருக்கே?" என்றார் கான்ஸ்டபிள்.
"ஹா..ஹா.. நாங்க எல்லாம் பிரான்சு., ரொம்ப முன்னேறிய நாடு. இந்த துப்பாக்கி எப்படி வேலை செய்யும் தெரியுமா?". இது விஞ்ஞானியின் பதில்.
துப்பாக்கியை கழட்டி, அதன் சேம்பரையும் கழட்டி விளக்கம் கொடுக்க, கான்ஸ்டபிள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொன்டு அவர் மேல் பாய்ந்து அமுக்கினார். கொஞ்ச நேரம் மல்யுத்தம் நடந்து, புரட்சிவீரர் பிடிக்கப்பட்டார். அவருக்கு ஏழு நாள் ஜெயில் தண்டனை கொடுத்து பிரான்சுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள். புரட்சிக்கு ஆயுள் தண்டனை எல்லாம் கொடுத்தால் ஆயுள் முழுக்க யார் வெச்சு சோறு போடுவது?
ஆக உலக வரலாற்றில் ஒற்றை கான்ஸ்டபிளால் அடக்கபட்ட ஒரே புரட்சி இதுவாக தான் இருக்கும்.
நன்றி:நியாண்டர் செல்வன்.