வயதாகும் வேகத்தை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு?

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து, ஆய்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட விலங்குகளின் ஆயுட்காலத்தை 25% அதிகரித்துள்ளதாகவும், இதேபோல் மனிதர்கள் முதிர்ச்சி அடையும் வேகத்தையும் இந்த மருந்தால் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட எலிகள் இளமையாக தோற்றமளிப்பதால், அவை ‘சூப்பர்மாடல் பாட்டிகள்’ என அழைக்கப்படுகின்றன.
இரண்டு விதமான சோதனைகளை மேற்கொண்ட ஆய்வாளர்கள், ஒரு சோதனையில் ‘இன்டர்லூகின் 11’ (Interleukin 11) எனும் புரதத்தை உற்பத்தி செய்ய முடியாத மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலியை பயன்படுத்தினர். மற்றொரு சோதனையில் பயன்படுத்தப்பட்ட எலிக்கு அந்த புரதத்தை நீக்கும் மருந்தை வழங்கினர்.
இந்த புரதம்தான் வயதாவதை ஊக்குவிப்பதாகக் கருதப்படுகிறது. இந்தப் புரதம் இல்லாத எலிகள், சிகிச்சை அளிக்கப்படாத மற்ற எலிகளுடன் ஒப்பிடும்போது, ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருந்ததோடு, புற்றுநோயினால் குறைவாகவே பாதிக்கப்பட்டன.
இந்த மருந்து ஏற்கெனவே மனிதர்களிடத்தில் சோதிக்கப்பட்டுள்ளது. நுரையீரலில் வடுக்கள் ஏற்பட்டு, மூச்சுவிடுவதற்கு சிரமத்தை ஏற்படுத்தும் ‘ஃபைப்ரோசிஸ்’ (fibrosis) எனப்படும் பிரச்னை கொண்ட நோயாளிகளிடையே இந்த மருந்து சோதனை முயற்சியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.