ஆழ்கடல் அற்புதம்: சூரிய ஒளி புகாத ஆழத்தில் ஒளிச்சேர்க்கை இல்லாமல் ஆக்சிஜன் உற்பத்தி!
கடலின் மேற்பரப்பிற்கு கீழே ஆழ்கடலில் "இருண்ட ஆக்ஸிஜன்" உற்பத்தி ஆவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நேச்சர் ஜியோசைன்ஸில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், பசிபிக் பெருங்கடலின் கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலத்தில் (CCZ) மேற்பரப்பிற்கு கீழே 4,000 மீட்டர் (13,000 அடி) உள்ள கனிம வைப்புகளில் வெளியிடப்பட்டது. இந்த ஆழம் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் கிட்டத்தட்ட பாதியாகும். இது விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் பாதி கடலில் இருந்து கிடைப்பதாகும். இந்த கண்டுபிடிப்பிற்கு முன்பு வரை, கடல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆகிறது என்றும் இந்த செயல்பாட்டுக்கு சூரிய ஒளி தேவைப்படும் என்றும் புரிந்துக் கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது சூரிய ஒளி ஊடுருவ முடியாத இடத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியாவதை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளதின் மூலம் அக்கருத்து மாறுகிறது. உருளைக்கிழங்கு அளவிலான இந்த உலோகம் கொண்ட திடப்பொருட்கள் (உலோக முடிச்சுக்கள்) மில்லியன் ஆண்டுகளுக்கு 1 மில்லிமீட்டர் என்ற நம்பமுடியாத வேகத்தில் வளரும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பல சுரங்க நிறுவனங்கள் இந்த உலோக முடிச்சுகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளன. அப்படி நடந்தால் இயற்கையாக நிகழும் செயல்முறையை சீர்குலைக்கும் என்று கடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். சுரங்க நிறுவனங்கள் உலோக முடிச்சுகளை எடுக்க ஆரம்பித்தால் அவை உருவாக்கும் ஆக்சிஜனைச் சார்ந்து இருக்கும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும்.
இதுகுறித்து விளக்கிய ஸ்காட்டிஷ் அசோசியேஷன் ஃபார் மரைன் சயின்ஸ்’ அமைப்பின் முன்னணி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்வீட்மேன் "கடலில் சூரிய ஒளியே இல்லாத, முழு இருளில் அதிக அளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது" என்பதை முதன் முதலில் 2013 இல் கவனித்ததாக கூறுகிறார். ஆனால் அச்சமயத்தில் "இதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை, காரணம் ஒளிச்சேர்க்கை மூலம் மட்டுமே ஆக்ஸிஜன் உற்பத்தி ஆகும் என்று எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. நான் அதை நம்பினேன்” என்று விளக்கினார்.
"இறுதியில், இந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பை பல ஆண்டுகளாக நான் புறக்கணித்து வந்ததை என்பதை உணர்ந்தேன்" என்று கூறியுள்ளார்.
உலோக முடிச்சுகள் எப்படி உருவாகிறது?
கடல் நீரில் கரைந்த உலோகங்கள், ஷெல் துண்டுகள் அல்லது பிற கழிவுகள் ஒன்றிணைந்து சில வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்து உலோக முடிச்சுகள் உருவாகின்றன. இந்த செயல்முறை முழுமையாக நிகழ மில்லியன்கணக்கான ஆண்டுகள் ஆகும்.
இந்த உலோக முடிச்சுகளில் லித்தியம், கோபால்ட் மற்றும் தாமிரம் போன்ற உலோகங்கள் இருப்பதால் - இவை அனைத்தும் பேட்டரிகள் தயாரிக்கத் தேவைப்படும். எனவே பல சுரங்க நிறுவனங்கள் அவற்றைச் சேகரித்து மேற்பரப்பில் கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன.
பேராசிரியர் ஸ்வீட்மேன் கூற்றுபடி, உலோக முடிச்சுகள் உருவாக்கும் `இருண்ட ஆக்ஸிஜன்’ கடற்பரப்பில் இருக்கும் உயிரினங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும்.
`இருண்ட ஆக்ஸிஜன்’ கண்டுபிடிப்பு கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலத்தில் நிகழ்ந்தது.
`கிளாரியன்-கிளிப்பர்டன்’ மண்டலம் (Clarion-Clipperton Zone) என்பது பசிபிக் பெருங்கடலின் சுற்றுச்சூழல் மேலாண்மைப் பகுதியாகும். இது சர்வதேச கடற்பரப்பு ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த பகுதி ஏற்கனவே பல கடற்பரப்பு சுரங்க நிறுவனங்களால் ஆராயப்பட்டு வரும் ஒரு தளமாக உள்ளது. அந்த நிறுவனங்கள் உலோக முடிச்சுகளை சேகரித்து மேற்பரப்பில் ஒரு கப்பலுக்கு கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன.
இதற்கிடையே, அமெரிக்க தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகம், "கடற்பரப்பு சுரங்கம், இந்த பகுதிகளில் உள்ள உயிர்கள் மற்றும் கடற்பரப்பு வாழ்விடங்களை அழிக்கும்" என எச்சரித்துள்ளது.
44 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட கடல்சார் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் அபாயங்களை எடுத்துரைக்கும் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். ஆழ்கடலில் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். ஆழ்கடலைப் பற்றி நாம் அறிந்ததை விட சந்திரனின் மேற்பரப்பைப் பற்றி நமக்கு அதிகம் தெரியும் என்கின்றனர் சில விஞ்ஞானிகள். அந்தளவுக்கு ஆழ்கடலில் பல கண்டுப்பிடிக்கப்படாத ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இந்த உலோக முடிச்சுகள் ஆழ்கடலில் இருக்கும் உயிர்கள் வாழ ஆக்ஸிஜனை வழங்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
எடின்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர், பேராசிரியர் முர்ரே ராபர்ட்ஸ், கடலுக்கு அடியில் சுரங்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிரான மனுவில் கையெழுத்திட்ட விஞ்ஞானிகளில் ஒருவர்.
"ஆழ்கடல் உலோக முடிச்சுகளை அகற்றுவது நம்மால் புரிந்து கொள்ள முடியாத சுற்றுச்சூழல் அமைப்புகளை அழித்துவிடும் என்பதற்கு ஏற்கனவே ஏராளமான சான்றுகள் உள்ளன" என்று கூறுகிறார். "இந்த கடற்பரப்பு நமது கிரகத்தின் மிகப் பெரிய பகுதிகளை உள்ளடக்கியிருப்பதால், அவை ஆக்ஸிஜன் உற்பத்தியின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக இருக்கலாம் என்பதை அறிந்தப் பின்னரும் ஆழ்கடல் சுரங்கத்தை முன்னெடுப்பது பைத்தியக்காரத்தனமாக இருக்கும்." என்றார்.
பேராசிரியர் ஸ்வீட்மேன் மேலும் கூறுகையில்: "இந்த ஆய்வை நான் சுரங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒன்றாக பார்க்கவில்லை. நாம் ஆழ்கடலை இன்னும் விரிவாக ஆராய வேண்டும், ஆழ்கடலுக்குச் சென்று மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் சுரங்க நடவடிக்கைகள் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்” என்றார்.