🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஜாகுவார் - கொரில்லா தாக்குதலுக்கு மனிதர்களின் முன்னோடி!

வலியதுதான் உயிர்பிழைக்கும் என்கிற சர்வைவல் விதியின் கீழ் வாழ்கிற உயிரினங்களில் முக்கியமானதும், பதுங்குவது, பாய்வது, தாக்குவது, கொல்வது எனத் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்துகிற விலங்கினம் சிறுத்தை. பூனை இனங்களில் முக்கியமான விலங்கினம் சிறுத்தை. லெபர்ட், ஜாகுவார், சீட்டா, பூமா என நான்கு வகையில் இது இருக்கிறது. நான்கு உயிரினங்களும் உடலாலும் உருவத்தால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வித்தியாசங்களைக் கொண்டவை. உற்று நோக்கினால் மட்டுமே வித்தியாசங்களைக் காண முடியும். தோலில் உள்ள அடையாளங்கள், கால் மற்றும் உருவ அமைப்பு எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பது போல தோன்றும். ஆனால், உண்மையில் அவை ஒவ்வொன்றும் வேறு வேறு அடையாளங்கள் கொண்டவை. 

சிறுத்தையைப் போல இருக்கும் இன்னொரு உயிரினம் ஜாகுவார். ஜாகுவார் என்பது அமெரிக்கக் கண்டங்களில் வாழும் ஒரு பெரிய பூனை இனமாகும். இது பூனை குடும்பத்தில் மிகவும் சக்திவாய்ந்த உறுப்பினர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பெரிய தலையையும் தாடையையும் கொண்டது. கால்களும், அதன் வாலும் சிறியதாக இருக்கும். இது உருவத்தில் மிகப் பெரியதாகவும் முரட்டுத்தனம் வாய்ந்ததாகவும் இருக்கும். 

ஒரு பெரிய ஆண் ஜாகுவார் 100 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். ஒரு ஜாகுவார் சுமார் ஆறு முதல் ஏழு அடி நீளம் இருக்கும். சிங்கம், புலிக்கு அடுத்தபடியாக பூனைக்குடும்பத்தில் மூன்றாவது வலிமை படைத்த மிருகம் ஜாகுவார்.

எடை, உயரத்தில் தன் பெரியண்ணன்கள் சிங்கம், புலியை விட குறைவாக இருந்தாலும், கடி என வந்தால் ஜாகுவாரை அசைத்துக்கொள்ள முடியாது. சிங்கங்களே வேட்டையாட தயங்கும் முதலையின் தோலை கிழிக்கும் வலிமை படைத்தது ஜாகுவார். தென்னமெரிக்காவின் அமேசான் காடுகளில் ஆமைகளின் ஓடுகள் கூட ஜாகுவாரின் கடியில் சில்லாக உடையும்.

பெயருக்கேற்ப சிங்கம், புலி போல வேகமாக மணிக்கு 80 கிமி வேகத்தில் ஓடும். ஆனால் இதன் வேட்டையாடும் உத்தி சிங்கம், புலியில் இருந்து மாறுபட்டது. ஆப்பிரிக்க சவானாவில் சிங்கங்கள் குழுவாக வாழும், வேட்டையாடும். ஆனால் தென்னமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவில் அடர்ந்த காடுகள் மற்றும் மாபெரும் அமேசான் நதிப்பரப்பில் வாழும் ஜாகுவாருக்கு வேகமாக ஓடுவது அவசியமில்லை. கொரில்லா தாக்குதல் தான் பலனளிக்கும். குழுவாக வாழ்வதும் இல்லை. அவை தனியாக தான் வாழும்.

ஜாகுவார் மரங்களில் பதுங்கி இருந்து இரையைத் தாக்கும் கொரில்லா உத்தியைப் பயன்படுத்தும். தவிர முக்கியமாக அமேசான் நதியின் வெள்ளபெருக்கில் ஏராளமான மீன்கள், முதலைகள், ஆமைகள் வரும். பொதுவாக பூனைகளுக்கு தண்ணீர் பிடிக்காது. நாள் முழுக்க உட்கார்ந்து உடலை நக்கி சுத்தம் செய்துகொள்ளுமே ஒழிய தன்ணீரில் இறங்காது. ஆனால் ஜாகுவார் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

அமேசான் நதியின் ஆழமான பகுதிக்கு கூட தன்ணீரில் மீனை போல நீந்திசென்று மீன்கள், ஆமைகள், முதலைகளை கூட வேட்டையாடும். 20 நிமிடம் நீரில் முச்சை அடக்கி மூழ்கும் தன்மை கொண்டது. அமேசான் முதலைகளை நீருக்குள் சென்று வேட்டையாடும் சக்தி படைத்த ஒரே மிருகம் ஜாகுவார் தான். அதுவும் முதலையின் நடுத்தலையில் ஒரே கடி கடித்து தரைக்கு இழுத்து வந்து கொன்று உண்ணும்.

ஜாகுவார்கள் தங்கள் கூர்மையான நகங்களைப் பயன்படுத்தி மரங்களில் எளிதாக ஏறும் திறன் கொண்டவை. இந்த திறன் மேலிருந்து இரையைத் தாக்க உதவுகிறது. அமேசான் காடுகளில் நடக்கையில் மேலே மரங்களை பார்த்துக்கொண்டே தான் பழங்குடிகள் பீதியுடன் நடப்பார்கள். மேலிருந்து வீழ்ந்து அவர்களை தாக்கும் மிருகங்கள் அங்கே இரண்டு. ஒன்று ஜாகுவார், இன்னொன்று அனகோண்டா. ஜாகுவாரை வேட்டையாடும் ஒரே உயிரினம் அமேசான் காடுகளில் அனகோண்டா மட்டும் தான்.

அமெரிக்காவின் பல பழங்குடி கலாச்சாரங்களில், ஜாகுவார் என்பது வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் மர்மம் ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு சக்திவாய்ந்த சின்னமாகும். இது பெரும்பாலும் இரவு மற்றும் பாதாள உலகம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.மாயா மற்றும் அஸ்டெக் போன்ற பல்வேறு பழங்குடி குழுக்களின் புராணங்களில் ஜாகுவார்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அவை பெரும்பாலும் தெய்வங்கள் அல்லது ஆன்மீக குறியீடுகளாக சித்தரிக்கப்படுகின்றன.

மேலும், அது இரையைத் தேர்ந்தெடுப்பதில் சமயத்திற்கு ஏற்றாற்போல செயலாற்ற வல்லது. புவியியலை பொறுத்து தன் இயல்பை ஜாகுவார் மாற்றிக்கொண்டதில் தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved