🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விண்வெளியில் சிக்கிக்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் உலகம் திரும்புவது எப்போது?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆவார். இவர் அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஜூன் 6 ஆம் தேதி தனது சக விண்வெளி வீரரான வில்மோருடன் இணைந்து பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் மணிக்கு 17500 மைல் எனும் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சுருக்கமாக ஐ.எஸ்.எஸ்                    (இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேசன்) க்கு சென்றிருக்கிறார்.

பயணத்தின் நோக்கம் என்ன? 

போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் எனும், விண்வெளிக்கு மனிதர்களின் போக்குவரத்துக்கு உதவும் கலனின் முதல் பரிசோதனை ஓட்டத்தின் விமானி அவர். சுனிதாவுடன் பயணித்தவர் வில்மோர். இவர்கள் இங்கிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு ஐஎஸ்எஸை அடைந்து, மீண்டும் எட்டு நாட்களில் பூமி திரும்ப வேண்டும். இதுவே பயணத்திட்டம்.

ஆனால், ஸ்டார் லைனர் வாகனத்தை உந்திச் செலுத்தும் ப்ரொபலர்கள் மற்றும் பக்கவாட்டில் மேலே கீழே நகர்த்த உதவும் த்ரஸ்டர்கள் ஆகியவை பணி செய்வதில் சுணக்கம் தென்படவே ஸ்டார் லைனர் கலன் - ஐ எஸ் எஸிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு அதில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆனால் நாளுக்கு நாள் அதில் உள்ள சிக்கல்கள் ஒவ்வொன்றாக அதிகரித்த வண்ணமே உள்ளன. ஹீலியம் கசிவது உள்ளிட்ட பெரிய பிரச்சனைகள் இருப்பதால் சுனிதா மற்றும் வில்மோர் பூமிக்கு வருவதை நாசா காலவரையற்று தள்ளி வைத்திருக்கிறது. விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு சென்று கூட்டி வரும் பணியை எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனமும் செய்து வருகிறது. 

அவர்களிடம் உதவி கோரி வருகிற 2025 பிப்ரவரி மாதத்திற்குள் இருவரையும் பூமிக்கு பத்திரமாக கூட்டி வந்துவிடுவோம் என்கிறது நாசா. 

என்னங்க சொல்றீங்க? 

எட்டு நாள் பயணம்னு போனவங்க, இப்போ ரெண்டு மாசத்துக்கு மேல ஆகிடுச்சு, இன்னும் பல மாதங்கள் ஆகும்ணா, என்னென்ன பிரச்சனைகளை அவுங்க சந்திக்கலாம்.

முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சென்றிருக்கும் வீர வீராங்கனைகள் ஏற்கனவே இது போன்ற சவாலான கட்டங்களுக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டு அதற்குரிய உடல் மற்றும் மனவலிமையுடன் தான் விண்வெளிக்கு செல்வார்கள். மேலும், ஐஎஸ்எஸ் எனும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நவம்பர் 2000 தொடங்கி கட்டாயம் மனிதர்கள் தொடர்ந்து வசித்து வருகிறார்கள். இப்போதும் இந்த இருவருடன் ஏனைய ஏழு விண்வெளி வீரர்கள் தங்கி இருக்கின்றனர். 

ஐஎஸ்எஸ்ஸில் எப்படி நமது வீட்டில் பல்வேறு அறைகள் இருக்குமோ அதே போல டெஸ்டினி, ஹார்மனி, ட்ரான்குயிலிட்டி என மாட்யூல்கள் ( அறைகள்) இருக்கின்றன. அமெரிக்காவுக்கு என பிரத்யேகமான பகுதி ரஷ்யாவுக்கு மற்றும் ஐரோப்பிய வீரர்களுக்கு என பிரத்யேகமான பகுதிகள் உள்ளன. 

ஏழு படுக்கையறைகள் (குட்டியாகத் தான் இருக்கும்). மூன்று குளியலறைகள் கூடவே நீர் மற்றும் உணவு ஆகியவை அங்கு இருக்கிறது. நீர் மற்றும் உணவு போன்றவை கார்கோ விண்வெளிக் கப்பல்கள் மூலம் அவ்வப்போது அங்கு சென்று சேர்ந்து விடும். 

(ஏன் ரஷ்யாவிடம் உதவிகேட்கலாமே என்ற கேள்வி எழுவது இயல்பு. ஆனால் ஒரு விண்வெளி வீரருக்கு 85 மில்லியன் டாலர் செலவாகும். அதனால் ஏற்கனவே திட்டமிட்டு செலவழித்த தொகையைக் கொண்டே அவர்களை இங்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன).

சமீபத்தில் கூட ஆகஸ்ட் 6ஆம் தேதி சிக்னஸ் ஸ்பேஸ் ஃப்ரைட்டர் எனும் விண்வெளிக் கப்பல் மூலம் 8200 பவுண்டு உணவு மற்றும் ஆய்வுக்குத் தேவையான பொருட்கள் சென்று சேர்ந்துள்ளன. அதனால் இன்னும் பல மாதங்களுக்குப் போதுமான நீரும் உணவும் ஸ்டாக் இருக்கிறது. இருப்பினும், விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நமது பூமியின் நிலப்பரப்பை ஒப்பிடும் போது 90% என்ற அளவில் ஈர்ப்பு விசை இருக்கும். 

ஆனாலும் அந்த இடத்தில் காற்று இல்லாத காரணத்தால் உடல் எடையை உணர முடியாத நிலை இருக்கும். 

கூடவே அத்தனை வேகத்தில் ஐ எஸ் எஸ் பயணிக்கும் போது அதன் மைய விலக்கு விசை ( CENTRIFUGAL FORCE) பூமியின் ஈர்ப்பு விசையை சமன் செய்வதால் ஐஎஸ்எஸுக்குள் ஜீரோ கிராவிட்டி அல்லது மைக்ரோ கிராவிட்டி நிலவுகிறது.

கூடவே நமது உடலின் திரவங்கள் மேலிருந்து கீழ் என்று இல்லாமல் கீழிருந்து மேல் நோக்கி செல்லும். இதனால் கண்களில் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். கூடவே கபாலத்துக்குள் அழுத்தம் அதகரிக்கலாம். தண்ணீர் அருந்துதல் இயற்கையாகவே குறைந்து விடும் என்பதால் சிறுநீர் வெளியேற்றுதல் குறையும். இதனால் சிறுநீரகக் கற்கள் தோன்றும் வாய்ப்பு அதிகரிக்கும்.

தொடர்ந்து எடையை உணர முடியாத மைக்ரோ கிரேவிட்டியில் இருக்கும் போது நமது உடல் எடை எலும்புகள் மற்றும் தசைகளில் இறங்காமல் இருப்பதால் எலும்புகள் பலகீனமடையும். அதன் அடர்த்திக் குறையும். ஒரு மாதத்திற்கு 1.5% என்ற அளவில் எலும்பின் அடர்த்தி குறையும். இதன் காரணமாக எலும்பு முறிவு நடக்கும் வாய்ப்பு உள்ளது. தசை இழப்பையும் எலும்பு வலு குறைவதையும் தவிர்க்க தினமும் இரண்டு மணிநேரங்கள் விண்வெளியில் வீரர்கள் பயிற்சி செய்கின்றனர்.

இதற்கடுத்த படியாக சவாலாக இருப்பது கதிர் வீச்சு அபாயம். பூமியின் நிலப்பரப்பில் வாழும் நம்மை சுற்றி காற்று மண்டலமும் பூமியின் காந்தப்புலமும் விண்வெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை உட்புகாமல் தடுக்கின்றன. அல்லது அவற்றின் வீச்சை மட்டுப்படுத்துகின்றன. இத்தகைய பாதுகாப்பு அரண் ஐஎஸ்எஸில் இல்லை என்பதால் அங்கு வாழும் வீரர், வீராங்கனைகள் தினசரி 50 முதல் 20000 மில்லி சீவர்ட்ஸ் எனும் அளவில் கதிர் வீச்சுக்கு உள்ளாகின்றனர். இது தினசரி மூன்று எக்ஸ்ரே பரிசோதனை எடுப்பதற்கு சமமானதாகக் கருதப்படுகிறது. இத்தகைய தொடர் கதிர்வீச்சுக்கு நீண்ட நாட்கள் ஆட்படும் போது புற்று நோய் அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. 

இறுதியாக மனநிலை சார்ந்த பிரச்சனைகள்:

பூமியை விட்டு 400 கிலோமீட்டர் தூரத்தில் விண்வெளியில் தனிமையில் இருப்பதும், பிடித்த உணவை சாப்பிட இயலாமல் பாக்கெட்டில் அடைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு சிடி ஸ்கேன் எடுப்பது போன்ற சிறிய இடங்களுக்குள் படுக்கையறை இருப்பதும் எப்போது வீட்டுக் செல்வோம் என்பது தெரியாமல் நாட்கள் ஓடும் போது மன உளைச்சல் அதிகமாகும்.

இதையும் இந்த இரு வீரர்களும் கடந்து சமாளித்து பிப்ரவரி வரை அங்கு இருக்க வேண்டும். இந்நிலையில் தினசரி அவரவர் குடும்பத்தாருடன் அலைப்பேசியிலும் மெய்ல் சாட்டிங் செய்து வருவதாகவும், கூடவே எட்டு மணிநேர உறக்கத்தை உறுதி செய்து வருகிறார்கள். இந்த இரு வீரர்களுக்கும் ஐஎஸ்எஸில் நீண்ட நாட்கள் வாழ்வது என்பது புதிதல்ல. 

விண்வெளி வீரர்கள் பொதுவாக ஒரு நாளைக்கு 16 முறை பூமியை சுற்றி வருகிறார்கள். இதில் 16 சூரிய உதயம் மற்றும் 16 சூரிய மறைவு நிகழும். இதனால் இவர்களால் சரியாக 8 மணி நேரம் உறங்க முடியுமா? 8 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்க நேர்ந்தால் மனநலம் சார்ந்த பிரச்சினை அங்கே வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? ஏனெனில் இவர்கள் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்குள் 45 நிமிடம் சூரிய வெளிச்சம், 45 நிமிடம் இருட்டில் இருக்க வேண்டுமே?. 

இதற்கு இவர்கள் தூங்கும் அறைகளில் செயற்கையாக இருளான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கும். எனவே அதற்குள் சென்று உறங்குவார்கள். 

ஏற்கனவே 2006-07 இல் சுனிதா வில்லியம்ஸ் தனது முதல் விண்வெளி பயணத்தில் 196 நாட்களும், 2012 இல் இரண்டாவது பயணத்தில் 127 நாட்களும் ஐஎஸ்எஸில் தங்கி இருந்திருக்கிறார். வில்மோர் இதற்கு முந்தைய இரு பயணங்களையும் சேர்த்து 178 நாட்கள் அங்கு தங்கியிருக்கிறார். 

எனவே, இருவரும் தங்களது பயணத்தை சிறப்பாக முடித்து, பிப்ரவரி 2025க்குள் நல்லபடியாக பூமி திரும்புவர் என்று உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. நாசாவின் விண்வெளி அத்தியாயத்தில் இந்த ஸ்டார் லைனர் பிரச்சனை சிறு சறுக்கலாக அமைந்தாலும், இதையும் தாண்டி இதன் மூலம் பல நல்ல பாடம் கற்று விண்வெளி அறிவியல் வளர்ச்சிக்கு தொடர்ந்து தனது பணியை செவ்வனே செய்யும் என்று நம்புவோம். 

ஸ்டே ஸ்ட்ராங்க் - வில்மோர் & வில்லியம்ஸ்.

நன்றி: Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved