பொன்விழா காணும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை!
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக விளங்குவது மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் பாஞ்சாலங்குறிச்சிக்கோட்டை. ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள் தென்னகத்தை தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவருவதற்கு பெரும் சிம்மசொப்பனமாக இருந்தவர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். அந்நியர்களின் நவீன ஆயுதங்கள் தங்களை எளிதில் வீழ்த்தும் என்பதை அறிந்திருந்த சிற்றரரசர்களெல்லாம் வெள்ளையர்களை வெண்சாமரம் வீசி வரவேற்ற நிலையில் தென்கடைக்கோடி மூலையில் இருந்து ஒரு எதிர்ப்புக்குரல் கேட்டது. அதுதான் கட்டபொம்மனாரின் வெங்கலக்குரல்.
சமரா? சமாதானமா? என்று வந்தபோது சமர்புரிவதை தேர்ந்தெடுத்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், சிறிய படையை வைத்துக்கொண்டு தனது பராக்கிரமத்தாலும், சாதுரியத்தாலும் வெள்ளையர்களுக்கு இந்தியர்களின் வீரத்தை உணரவைத்தார். மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் காட்டிய அதே அளவு வீரத்தையும், சாதுர்யத்தையும் பிற மன்னர்களும் காட்டியிருந்தால் வெள்ளையர்கள் தோற்றோடிப் போயிருப்பர் என்பது நிதர்சனம்.
சிறிய படையை வைத்துக்கொண்டு ஆங்கிலேயருக்கு கட்டபொம்மன் ஏற்படுத்திய பெரும் சேதாரத்தால் , மன்னனின் மீதான கோபம் மன்னனின் மாளிகையின் மீது திரும்பியது. விளைவு, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வேறோடும், வேரடி மண்ணோடும் அளிக்கப்பட வேண்டும் என்ற கோபத்தில், பாஞ்சை கோட்டை அழித்தொழிக்கப்பட்டது. ஆனால் அண்ணன் போனால் என்ன? மன்னன் நான் ஊமைத்துரை உள்ளேன் என்று பீரங்கியால் துழைக்கப்பட்ட கோட்டையை கண்ணிமைக்கும் நேரத்தில் மீண்டும் கோட்டை கட்டினார். அப்படிக்கட்டப்பட்ட கோட்டையும் வெள்ளையர்களால் அழிக்கப்பட்டது.
அப்படி அழிக்கப்பட்டது எதோ சிற்றரசரின் கோட்டை என்பல்ல, அது இராஜகம்பளத்தாரின் முகவரி. இதை உணர்ந்து நமது சட்டமன்ற கதாநாயகன் கா.சுப்பு அவர்களின் கோரிக்கையை ஏற்று, அன்றைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களால் கட்டப்பட்டது தான் இன்றுள்ள பாஞ்சை கோட்டை. இது சாதரண கோட்டை மட்டுமல்ல கம்பளத்தாரின் அடையாளம், வரலாறு என்பது கலைஞருக்கும் தெரிந்திருக்கும். அதனால் தான் கட்டபொம்மனின் தம்பியாக ஊமைத்துரையும், ஊமைத்துரையின் தம்பியாக கலைஞரும் வீழ்ந்த கோட்டையை எழுப்பி கம்பளத்தாருக்கு விலாசம் கொடுத்துள்ளனர்.
உலக சரித்திரத்தில் மூன்றுமுறை கட்டப்பட்ட ஒரே கோட்டையான பாஞ்சாலங்குறிச்சிக்கோட்டை இன்று (18.08.2024) பொன்விழா காண்கிறது. வீழ்ந்துவிடாத வீரத்திற்கு அடையாளமாகத் திகழும் இக்கோட்டையை, 1974-இல் இதே நன்னாளில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களால், சட்டமன்ற கதாநாயகன் க.சுப்பு மற்றும் இராஜகம்பள மஹாஜன சங்க நிர்வாகிகள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது.