🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விண்வெளியில் ஆய்வுக்குச்செல்லும் வீரர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்?

சோறு முக்கியமா? சங்கம் முக்கியமா? 

சோறு தான்!

வயிறு நிறைஞ்சா தானங்க ஆராய்ச்சி பண்ண முடியும்.

அதுவும் விண்வெளில ஆராய்ச்சி பண்ண தனி தைரியமும் உடம்புல தெம்பும் வேணும்ல. நம்ம SETC பஸ் மாதிரி போற வழில ஹோட்டல்ல இறக்கி பதினைஞ்சு நிமிசம் வண்டி நிக்கும் சாப்புடறவங்க.. பாத்ரூம் போறவுங்க போய்க்குங்கனு வண்டிய நிப்பாட்டவா முடியும்? 

நானும் கூட சின்ன வயசுல சொல்லப்பட்ட கதைகளான சாப்பாடு எல்லாத்தையும் கொடுக்குற மாதிரி சத்து மாத்திரை போட்டுக்குவாங்க போன்ற கதைகளை நம்பி வந்தேன். ஆனால் அது உண்மையன்று. 

அப்ப அங்க போற நம்ம பயலுக என்ன சாப்புடுறாங்க?

வாங்க பார்ப்போம்!

அமெரிக்கா 1958 முதல் 1963 காலத்தில் மெர்குரி மிஷன் எனும் பெயரில் மனிதர்களை விண்வெளியில் பூமியை சுற்றி வரச் செய்தது. ஜான் ஆலன் எனும் விண்வெளி வீரர் தான் விண்வெளியில் முதலில் உணவு சாப்பிட்டவர். 

அப்போது சென்று விண்வெளி வீரர்களுக்கு 

- சிறிதாக விழுங்கக் கூடிய அளவில் க்யூப்கள்

- உரைகுளிர்விக்கப்பட்ட பொடிகள்

- அலுமினியம் ட்யூப்களில் அடைக்கப்பட்ட பகுதி திரவங்கள் 

இவ்வாறு உணவை சாப்பிட்டனர். 

அவர்களிடம் இந்த உணவு குறித்து கருத்து கேட்கப்பட்டது. 

அவர்கள் அளித்த பதில்

- உவ்வே இதை சாப்டணும்னு நினைச்சாலே பசி எடுக்க மாட்டேங்குது.

- என்னய்யா இது ட்யூப பிதுக்கி தண்ணீர் குடிக்க சொல்றீங்க?

- பொடில தண்ணிய கலக்குறது பெரும்பாடா இருக்குங்க..

- பிரட் திண்ணா அதுல சிந்தல் செதறல் இருக்கக் கூடாதுங்குறீங்க? 

(அந்த சிதறல்கள் விண்வெளிக் கப்பலின் மெல்லிய பாகங்களை சேதப்படுத்தி விடும்).

இவ்வாறு விண்வெளி வீரர்கள் கடுப்பாகி தங்கள் ஃபீட் பேக்கை பதிவு செய்தனர். 

இதற்கடுத்து நாசா கையில் எடுத்த ஜெமினி மிஷன் (1965-1966). நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, அங்கு சற்று நீண்ட நேரம் சுற்றி வரச் செய்து மீண்டும் பூமிக்கு வரவழைத்து பரிசோதனை செய்து கொண்டிருந்தது. 

இம்முறை 

- அந்த க்யூப்களில் ஜெலடின் பூசி அனுப்பியது. இதனால் சாப்பிடும் போது சிந்தாமல் சிதறாமல் உண்ண முடிந்தது 

- உரைகுளிர்விக்கப்பட்ட பொடிகளை ஒரு ப்ளாஸ்டிக் கண்டெய்னருடன் அனுப்ப, நீருடன் கலப்பதற்கு ஏதுவாக இருந்தது. 

- உணவை பேக்கேஜிங் செய்யும் தொழில்நுட்பம் மேம்பட்டது.

இதனால் 

இரால் சூப் / தொக்கு, கோழிக்கறி, காய்கறிகள், பட்டர் ஸ்காட்ச் புடிங், ஆப்பிள் சாஸ் இதையெல்லாம் அனுப்ப முடிந்ததில் ஆஸ்ட்ரநாட்ஸ் சற்று குஷியாகினர். 

அடுத்து தான் நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய அப்போலோ மிஷன் ஆரம்பித்தது. அவர்களுக்கு உணவின் அளவு மற்றும் தரம் சிறப்பாக மாறியது. முதன்முதலில் விண்வெளியில் சுடு வெள்ளம் பகிரப்பட்டது அப்பலோ மிஷனில் தான். சாப்பாடு சாப்பிட சட்டுமுட்டு சாமான் ஸ்பூன்லாம் எடுத்துட்டு போனதும் அப்பதான். எந்த வெப்பநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்காமல் ஸ்திரமாக இருக்கும் பைகளில் உணவுகள் பேக் செய்யப்பட்டன. 

இப்படி படிப்படியாக முன்னேறி முன்னேறி, தற்போது ஐஎஸ்எஸில் 72 வகையான உணவு வகைகள் விண்வெளி வீரர்களுக்குக் கிடைக்கின்றன. அங்கே ஸ்கை லேப் எனும் கிச்சன் இயங்கி வருகிறது. அதில் உரைகுளிரில் பராமரிக்க ஃப்ரீசர்,  குளிர்சாதனப் பெட்டி மற்றும் உணவை சூடாக்கிப் பரிமாற ஓவன் மூன்றும் இருக்கிறது.

இவ்வளவு இருந்தாலும் உணவை நாம் அங்கு சமைக்க இயலாது என்பதால் அங்கு விண்வெளி வீரர்கள் சாப்பிட வேண்டிய உணவு அனைத்தும் இங்கு பூமியில் தான் செய்யப்பட்டு கச்சிதமாக பேக் செய்யப்படுகின்றன. 

விண்வெளி வீரர்களுக்குத் தேவையான நுண்சத்துகள் மற்றும் நுண்கனிமச் சத்துகள்  100% கிடைக்குமாறு உணவு வகைகள் தயார் செய்யப்படுகின்றன. விண்வெளி வீரர்கள் தங்களின் பயணத்துக்கு சுமார் 8 முதல் 9 மாதங்களுக்கு முன்பே தங்களுக்கு உகந்த பிடித்த உணவுகள் மற்றும் பானங்களை மெனுவில் இருந்து டிக் செய்து தர வேண்டும். 

அவரவர் உண்ண வேண்டிய உணவு தனித்தனியாக பேக் செய்யப்பட்டு விடும். உணவுகள் அனைத்தும் பின்வரும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பேக் செய்யப்படும்.

முதல் வகை:

நீர்ச்சத்து நீக்கப்பட்ட உணவுகள்: நீர் இருந்தால் புறப்படும் போது எடை அதிகமாக இருக்கும் என்பதால் நீர் நீக்கப்பட்டு பொடி வடிவில் உணவுகள் அடைக்கப்பட்டிருக்கும். இவற்றுடன் நீர் கலந்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டியது தான். சிக்கன் சூப், மஷ்ரூம் க்ரீம் சூப், மேகரோனி, சீஸ் சிக்கன் ரைஸ், இறால் காக்டெய்ல், முட்டை பொடிமாஸ், தானியங்கள் ( கெலாக்ஸ் மாதிரி) இருக்கும் இதனுடன் பால் பவுடரும் சீனியும் இருக்கும். நீரைக் கலந்தால் காலை டிபன் ரெடி.

இரண்டாவது வகை: வெப்பநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்காத பேக்கிங்கில் வரும் உணவுகள். இதில் டூனா , சால்மன் மீன்கள், பழங்கள், மாட்டு ஊன், பன்றி ஊன், கோழி ஊன், காளான் போன்றவை இருக்கும். சூடுபடுத்தி அவரவர் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். 

மூன்றாவது வகை: கதிரியக்கத்தால் கிருமி நீக்கம் செய்யப்பட்ட உணவுகள் 

நான்காவது வகை : நட்ஸ், கலோரிகளை வழங்கும் சாக்லேட் பார்கள், பிஸ்கட்டுகள் இவற்றை அப்படியே சாப்பிடலாம்.

இவையன்றி உணவின் ருசியைக் கூட்டும் மயோனேஸ், சாஸ் வகைகள், பெப்பர் சாஸ், நீரில் கலக்கப்பட்ட திரவ நிலை உப்பு, எண்ணெயில் அமிழ்த்தப்பட்ட திரவ நிலை பெப்பர் (பொடியாக விண்வெளியில் உபயோகிக்க முடியாது). இவையன்றி நாம் பூமியில் உண்ணும் பிரட்கள் போல மாவினால் செய்யப்பட்ட டார்ட்டிலாக்கள் விண்வெளி வீரர்களுக்கு ரொம்ப பிடிக்குமாம். நம்ம பிரட் சாப்பிடும் போது பொடி தூள் சிதறும்ல அந்த பிரச்சனை டார்ட்டில்லாக்களில் இருக்காதாம். 

இவைதவிர, டீ, காபி, ஆப்பிள் சிடர்,ஆரஞ்சு ஜூஸ், லெமன் ஜூஸ் எல்லாமே பொடியாக இருக்கும். தண்ணீர் கலந்து குடிச்சுக்க வேண்டியது தான்.ஒரு நாளைக்கு மூணு வேளை சாப்பாடு கூட ஸ்நாக்ஸ், எட்டு நாளைக்கு ஒரு தடவ உணவு மெனுக்கள் ரிப்பீட் ஆகுற மாதிரி வீக்லி சார்ட். தினமும் இரவு சாப்பாட அங்க இருக்குற விண்வெளி வீரர்கள் ஒன்னா சாப்டுறத வழக்கமாக வச்சுருக்காங்களாம். நாலு பேருக்கு தேவையான சாப்பாட அஞ்சு நிமிசத்துல ரெடி பண்ணிடலாம். சாப்புடுற இடத்துல டேபிள்ல உக்காந்து கால்ல ஸ்ட்ராப் மாட்டிக்கிட்டு தான் உட்கார முடியும். அப்ப தான் அங்க உட்கார்ந்து சாப்பிட முடியும். 

இங்க இருக்குற மாதிரியான அதே கலோரி தேவைகள் தான் அங்கயும் இருக்கு. இருப்பினும் இங்கு உண்பதை விட இரும்புச்சத்து குறைவாக அவர்கள் உண்ண வேண்டும். காரணம் அங்கே ரத்த சிவப்பணுக்கள் அளவில் குறைந்து விடும். இதனால் இரும்புச்சத்து உடலின் வேறு பகுதிகளில் சேமிக்கப்பட்டு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எலும்பின் கால்சியம் குறைவதைத் தடுக்க சோடியம் குறைவான உணவுகளையே அவர்கள் உண்ண வேண்டும். இவையன்றி விட்டமின் டி சப்ளிமெண்ட்களை அவர்கள் தொடர்ந்து உட்கொள்வார்கள்

இதுவன்றி தற்போது நீண்ட நாள் தொலைதூர விண்வெளிப்பயணங்களுக்கு ஏதுவாக பயணத்தின் போது உண்ண வேண்டிய உணவுகள் வேறு கிரகத்திற்கு ( செவ்வாய் / நிலவு) சென்று இறங்கிய உடன் உண்ண வேண்டிய உணவுகள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. 

இதுவே விண்வெளி வீரர்கள் உணவு உட்கொள்ளும் முறை. 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved