🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சென்னையா நாயக்கர் நினைவு தியான மண்டப திறப்புவிழா

சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிறுவன தலைவரும், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் சென்னை மாவட்ட மேனாள் தலைவரும், தொழிலதிபருமான ஆர்.சென்னையா நாயக்கர் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நிணியவைக்குறிக்கும் வகையில் சென்னையா நாயக்கர் பிறந்த கிராமமான தேனி மாவட்டம் ஆனைமலையன்பட்டியில் அவரது துணைவியார் திருமதி.குருவம்மாள் சார்பில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்திறப்பு நேற்று முன்தினம் (23.08.2024-வெள்ளிக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது. இதில் முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்தினர். இதன் விவரம் வருமாறு,


தேனி மாவட்டம் ஆனைமலையன்பட்டி கிராமத்தில் பிறந்து தன் கடின உழைப்பாலும், கைவிடாத நேர்மையாலும், எளிமையான வாழ்க்கையாலும் வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர் சென்னையா நாயக்கர். மெத்தப்படித்த மேதாவியோ, பாரம்பரிய தொழில் பின்னனியோ இல்லாமல், படிப்பறிவற்ற சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து தொழில்துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு தனித்து நின்று புகழ்கொடி ஏற்றியவர் சென்னையா நாயக்கர். 


தொழில்துறையில் புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்வதிலும், புதிய புதிய தொழிநுட்பங்களை புகுத்துவதிலும் தொடர்ந்து முன்னனியில் இருந்த சென்னையா நாயக்கர், பாரம்பரியங்களை கடைபிடிப்பதிலும், குடும்ப அமைப்பு முறை மற்றும் தாய்மொழி மீதான ஈடுபாட்டில் என்றும் பழமையின் பக்கமே நின்றவர்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சென்னையா நாயக்கர், தொழில், அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், சமூகம், சமுதாயம், குடும்பம் ஆகியவற்றிற்காகவும் நேரம் ஒதுக்கி ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.


தனது பன்முகத்தன்மையால் சமூகத்தில் தனக்கான இடத்தை நிலைநிறுத்திக்கொண்ட சென்னையா நாயக்கர், தான் பிறந்த கிராமத்தையும், மக்களையும் மறக்காமல் பொதுக்காரியங்களிலும், சுக துக்கங்களிலும் தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்றி 2006-07 காலகட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கோவில் முன் மண்டபத்தை கட்டிக்கொடுத்ததோடு, உள்ளூர் பொதுவிவகார வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று வெற்றிக்கனியை பெற்றுக் கொடுத்தவர் சென்னையா நாயக்கர்.

தான் வாழும் காலத்தில் வரலாகிப்போனவரின் புகழ்,உழைப்பு,எளிமை, நேர்மை பலதலைமுறைகள் தாண்டி வருங்கால சமுதாயத்திற்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டுமென்ற விருப்பத்தின் பேரின் அவரது துணைவியார் திருமதி.குருவம்மாள் அவர்கள் தனது அன்புக்கணவரின் நினைவாக சென்னையா நாயக்கர் பிறந்து வளர்ந்த கிராமமான ஆனைமலையன்பட்டியில் தியான மண்டம் ஒன்றை நிறுவியுள்ளார்.


இதன் திறப்பு விழா கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராமராஜ் அவர்கள் விழாத்தலைமையேற்று சென்னையா நாயக்கர் அவர்களின் படத்தை திறந்துவைத்து உரையாற்றினார். தியான மண்டபத்தை குருவம்மாள் சென்னையா நாயக்கர் திறந்துவைத்தார். சிறப்பு விருந்தினர்களாக எரசக்கநாயக்கனூர் ஜமீன்தார் சாமித்துரை, ஊராட்சி மன்றத் தலைவர் மீனா மும்மூர்த்தி, காவல்துறை துணை ஆய்வாளர் அருண்பாண்டியன், பேராசிரியர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சென்னையா நாயக்கருக்கு புகழாரம் சூட்டி வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னையா நாயக்கரின் மகனும் தொழிலதிபருமான எஸ்.இராதாகிருஷ்ணன் செய்திருந்தார். விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு சென்னையா நாயக்கர் குடும்பத்தின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் ஆனைமலையன்பட்டி மற்றும் சுற்றுகிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விருந்தினர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved