11/2 வயது குழந்தைக்கு சிக்கலான அறுவை சிகிச்சை! கார்ப்பரேட் மருத்துவமனைக்கு சவால் விடும் எளிய மருத்துவர்கள்!
திருப்பூரிலுள்ள பின்னலாடை நிறுவனமொன்றில் பணியாற்றிவந்த வடமாநில கூலித்தொழிலாளியின் 11/2 வயது மகனின் இடது கால் தொடை, எந்திரத்தில் சிக்கி முற்றிலும் நசுங்கிய நிலையில் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழலில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குத் தேவையான நவீன கருவிகள் இல்லாததால், திருப்பூர் செஸ்ட் மருத்துமனையின் டாக்டர் சுரேந்தரன் உதவியுடன் குழந்தையையை காப்பாற்றியுள்ளனர். திருப்பூர் நகரில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இச்சம்பவம் தொடர்பான விவரம் வருமாறு,
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மனைவி ஷர்மி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 11/2 வயது குழந்தை அபிஷேக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோருடன் திருப்பூரில் வசித்து வருகிறார். வயிற்றுப்பிழைப்புக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் பிகாரிலிருந்து திருப்பூருக்கு புலம்பெயர்ந்துள்ளது ஜித்தேஷ், ஷர்மி குடும்பம். வீட்டுக்கு அருகிலேயே பின்னாலாடை நிறுவனமொன்றில் தினக்கூலியாக வேலைபார்த்து வரும் இத்தம்பதிகளுக்கு 11/2 வயதில் அபிஷேக் என்ற ஆண்குழந்தை உள்ளது. சம்பவ தினத்தன்று பராமரிப்புப்பணிக்காக நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கைக்குழந்தையாக உள்ள அபிஷேக்கை தூக்கிக்கொண்டு சம்பளப்பணம் பெறுவதற்காக சென்றுள்ளார் ஷர்மி. அங்கு குழந்தையை இறக்கி விட்டுவிட்டு, தாய் ஷர்மி அருகிலிருந்தவர்களோடு பேசிக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக அருகே இருந்த எந்திரம் ஒன்றில் சிக்கிக்கொண்டதாகத் தெரிகிறது.
அலரியடித்துக்கொண்டு ஓடிய ஷர்மியும், பக்கத்திலிருந்தவர்களும் குழந்தையைக் காப்பாற்றி மீட்டுள்ளனர். அதற்குள் 11/2 வயது பிஞ்சுக்குழந்தையான அபிஷேக்கின் இடது தொடை முழுவதும் நசுங்கி சேதமடைந்துவிட்டது. உடனடியாக அபிஷேக்கை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அபிஷேக்கிற்கு முதலுதவி செய்த மருத்துவர்கள், குழந்தையை தீவிர கண்காணிப்பில் வைத்து ஒருவாரத்திற்கு மேலாக சிகிச்சையளித்தனர். ஆனால் தொடையில் ஏற்பட்ட புண் மேலும் மேலும் தீவிரமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றது. உடனடி அறுவை சிகிச்சையால் மட்டுமே குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில், அதற்குத்தேவையான நவீன உபகரணங்கள் அந்த மருத்துவமனையில் இல்லை என்று சொல்லப்படுகிறது.
கோடிக்கணக்கான மக்களின் பசியைப்போக்கி வரும் திருப்பூர் நகரம், தனது வறுமையையும், வயிற்றுப்பசியையும் நிச்சயம் போக்குமென்று, மொழி தெரியாத ஊருக்கு நம்பிக்கையோடு வந்த ஜித்தேஷும் அவரது மனைவியும், மனப்பிரம்மை பிடித்ததுபோல் செய்வதறியாது திகைத்தனர். குழந்தை இனி உயிர் தப்ப வழி இல்லை என்று தீர்மானித்து பிகாருக்கே திரும்பிச்செல்ல முடிவெடுத்து, வீட்டருகில் இருப்பவர்களின் உதவி பெற்று ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர்.
ஆனால், கருணை உள்ளம் கொண்ட திருப்பூரைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர், வடமாநிலம் சென்றால் உரிய சிகிச்சையின்றி, புண்ணில் புழுப்பிடித்து துடிதுடிக்கச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் உயிறைப் பறித்துவிடும் என்பதை உணர்ந்து, ஜித்தேஷ் மற்றும் ஷர்மியை சமாதானம் செய்து, இங்கேயே ஒரு நல்ல அறுவை சிகிச்சை மருத்துவரிடம் சேர்த்து காப்பாற்றிவிடலாம் என்றும், மருத்துவச்செலவு குறித்தோ, உணவு, வீட்டு வாடகை குறித்தோ கவலைப்பட வேண்டாம், அனைத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று நம்பிக்கை அளித்து , குழந்தை அபிஷேக்கிற்கு உயர்தரமான சிகிச்சையளிக்க முன்வந்துள்ளனர்.
ஒருவழியாகப் பெற்றோரை சமாதானம் செய்த கையோடு, சென்னை, கோவை என்று பிரபல மருத்துவமனைகளுக்கு கூட்டிச்சென்றால் நாமும் நாள்தோறும் சென்று பார்க்கமுடியாது, மொழி தெரியாத வடமாநிலப் பெற்றோர்களுக்கும் சௌகரியமாக இருக்காது என்று முடிவுக்கு வந்த தன்னார்வலர்கள், "கோடிக்கணக்கான மக்களுக்கு சோறுபோட்டு. பல்லாயிரம் கோடிகளை அரசுக்கு வரி வருவாயாக ஈட்டித்தரும் குட்டி ஜப்பான் என்று பகழப்படும் திருப்பூர் நகரில் திறமையான மருத்துவர்கள் இல்லாமலா போவார்கள்" என்ற நம்பிக்கையோடு தீவிர தேடுதலில் இறங்கினர்.
பலகட்டத் தேடுதலுக்குப்பின் ஒருவழியாக அவர்களின் விருப்பப்படியே மண்ணின் மைந்தரான மருத்துவரைக் கண்டறிந்தனர். அவர் தான் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் பி.சுரேந்தர். இளம் அறுவை சிக்கிச்சை மருத்துவரான சுரேந்தரைச் சந்தித்த தன்னார்வலர்கள், "அரசையும், கோடிக்காணக்கான மக்களையும் காப்பாற்றும் இந்தத் திருப்பூர் மண்ணில், எங்கிருந்தோ இந்த மண்ணை நம்பி வந்த ஒரு கூலித் தொழிலாளியின் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போகலாமா?" என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
குழந்தையின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை வாங்கிப்பார்த்த அறுவை சிகிச்சை நிபுணர் சுரேந்திர், தொடைப்பகுதி 85 சதவீத அளவிற்கு சேதமடைந்துள்ளதால், 11/2 வயதேயான குழந்தையின் மற்றொரு தொடையிலிருந்தான் தோல் எடுத்துத்தான் சரி செய்ய வேண்டியது இருக்கும். ஏற்கனவே காயம் வீரியமாக இருப்பதாலும், ஒருவாரகாலத்திற்கு மேலாக சிகிச்சை பெற்றுவருவதாலும், குழந்தையின் உடம்பில் போதிய ரத்தமும், ஊட்டச்சத்துமின்றி மெலிந்து அவதிப்படுகிறது. மேலும், தொடர்ந்து நீடிக்கும் காய்ச்சலும், வயதும், ஒத்துழைப்பும் அறுவை சிகிச்சைக்கு மிகப்பெரிய சவலாக இருக்கும் என்பதால் பெற்றோர்களும், தன்னார்வலர்களும் நம்பிக்கையோடு கடைசி வரை இருந்தால் மட்டுமே தன்னால் காப்பாற்ற முடியும் என்று நம்பிக்கையளிக்கிறார்.
இதுபோன்ற மிக சிக்கலான, உயர்தர அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களும், மருத்துவர்களும், பெரிய பெரிய நகரங்களில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் என்று பொதுமக்கள் புத்தியில் திணிக்கப்பட்டு, நம்பவைக்கப்பட்டுள்ளது. ஆனால், நல்வாய்ப்பாக அபிஷேக் விசயத்தில் முற்றிலும் அதற்கு நேர் எதிராக நடந்தது. பெரிய மருத்துவமனைக்குப்போனால், கூலித்தொழிலாளியால் எப்படித்தாங்க முடியும்? அல்லது தன்னார்வலர்கள் தான் எப்படி சமாளிப்பார்கள்?.
அங்குதான் குழந்தையின் நிலையறிந்து உதவிட முன்வந்தார் திருப்பூர் செஸ்ட் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், நுரையீரல் சிறப்பு மருத்துவருமான பொம்முசாமி. திருப்பூர் செஸ்ட் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை அபிஷேக்கிற்கு அறுவை சிகிச்சை நிபுணர் சுரேந்திரன் தலைமையில் குழந்தைகள் நல மருத்துவர் ஜெயப்பிரியா, மயக்கவியல் நிபுணர் பகவத்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சலில் இருந்து மீட்பது, ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவது, ரத்த அளவை அதிகரிப்பது, புண் மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவ போன்ற பல சவால்களை மருத்துவர் குழு எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இது ஒருபுறம் என்றால், இதற்கு சற்றும் குறையாமல் இருந்தது "மொழி தெரியாத பெற்றோர்களுக்கு சிகிச்சை குறித்து விளக்குவதும், நம்பிக்கை அளிப்பதும் தான்". வாய் பேசத்தெரியாத குழந்தையின் வலியைப் பெற்றோர்கள் எப்படி உணர்வார்கள்?. மருத்துவர்கள் கூறும் வார்த்தைகளால் மட்டுமே ஆற்றுப்படுத்தவும், நம்பிக்கை ஏற்படுத்தவும் முடியும். ஆனால் இதற்கு மொழி பெருந்தடையாக இருந்தது. சிகிச்சையின் வெற்றி பெற்றோர்களின் புரிதலிலும், நம்பிக்கையிலும் மட்டுமே இருப்பதைக் கவனத்தில் கொண்ட மருத்துவமனை நிர்வாகம், அளிக்கப்படும் சிகிச்சை பற்றி பெற்றோர்களுக்கு விளக்குவதற்கென்றே, இந்தி தெரிந்த ஒருவரை வரவழைத்து, சிகிச்சை மற்றும் முன்னேற்றம் குறித்து தினசரி விளக்கப்பட்டது.
ஒருவழியாக தொடர் காய்ச்சலையும், ரத்தப்பற்றாக்குறையையும் கட்டுக்குள் கொண்டுவந்த மருத்துவக்குழு, வலது கால் தொடையிலிருந்த தோலை எடுத்து சேதமடைந்த இடதுகால் தொடையில் பொருத்தி அறுவை சிகிச்சையை முடித்தனர். சுமார் ஒரு மணிநேர அறுவை சிகிச்சையின் வெற்றி 85 சதவீதம் பாதிக்கப்பட்ட இடது தொடையானது, வலது தொடையிலிருந்து எடுத்து பொருத்தப்பட்ட தோலை ஏற்றுக்கொண்டு வளர்கிறதா? என்பதில் தான் உள்ளது என்பதால், மருத்துவர்களின் தொடர் தீவிர கண்காணிப்பில் ஒருவார காலம் வைக்கப்பட்டிருந்தான் அபிஷேக்.
தன்னார்வலர்களின் நம்பிக்கையும், பெற்றோர்களின் பிராத்தனையும் வீண்போகவில்லை. எல்லா சிக்கல்களையும் எதிர்கொண்டு, இரண்டுவார காலத்திற்குள் அறுவை சிகிச்சை முடித்து பெற்றோர்களின் கைகளில் மீண்டும் குழந்தையைக் கொஞ்சுவதற்குக் கொடுத்துள்ளனர் சுரேந்தர் தலைமையிலான மருத்துவக்குழுவினர். "மறுபிறவி எடுத்ததுபோல் உணர்வதாக"க் கூறும் அபிஷேக்கின் பெற்றோர்கள் "இந்த மண்ணும், மருத்துவர்களும் தங்களைக் கைவிடாமல் காப்பாற்றிவிட்டதாக" கண்ணீர் மல்க நன்றி கூறினர்.
பின்னலாடை நிறுவனத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் இந்த விபத்து காட்டுத்தீ போல் திருப்பூர் மாநகரெங்கும் பரவி, குழந்தையின் நிலைமை குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இறுதியில் குழந்தை காப்பாற்றப்பட்டதில் தொழிலாளர்களும், புலம்பெயர் தொழிலாளர்களும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திருப்பூர் செஸ்ட் மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், நுரையீரல் மருத்துவருமான பொம்முசாமி, "எளிய மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவத்தை அளிப்பதே தங்கள் நோக்கம்" என்றும், நோய்களின் தோற்றுவாயாக உள்ள "நுரையீரல் சளி" யால் பாதிக்கப்பட்ட "ஆயிரக்கணக்கான நோயாளிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்வதாகவும், அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடிய தரமான மருத்துவர்களும், உபகரணங்களும் இருப்பதாகவும்" தெரிவித்தார்.
இச்செய்தி வெளியானதும் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேந்தர் தலைமையிலான குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி அறிவிலும், பொருளாதார பின்புலத்திலும் மிகவும் பின்தங்கி எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வியை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு தங்கள் விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும், முதல்தலைமுறை பட்டதாரிகளாக மட்டுமல்லாமல் மருத்துவத்துறை பட்டதாரிகளாக உயர்ந்து, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கோலோச்சும் மருத்துவத்துறையில், பயிற்சி காலம் முடிந்து சொந்தமாக மருத்துவமனை தொடங்கி, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையளிக்கும் வகையில் இளம் வயதிலேயே சாதனை புரிந்து வரும் டாக்டர் பொம்முசாமி, டாக்டர் சுதாகர், டாக்டர் ரமேஷ், டாக்டர் ராஜ்கண்ணா, டாக்டர் ராஜேஷ்வரி, டாக்டர் செந்தில்குமார், டாக்டர் பாஸ்கர் போன்றவர்கள் மேலும் வளர்ந்து மருத்துவத்துறையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.