விண்வெளி வீரரின் சடலம் மூலம் வேற்று கிரகங்களில் உயிர்கள் உருவாகும் வாய்ப்பு?
விண்கலனில் பறக்கும்போது விண்வெளி வீரர் ஒருவர் மரணம் அடைகிறார். அவரது சடலம் மூலம் வேறு கிரகங்களில் உயிர்கள் உருவாகுமா?
இதற்கான சாத்தியக்கூறு ஏராளம் என்கின்றனர் விஞ்ஞானிகள். பூமியிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட வாயேஜர் விண்கலம், ப்ளூட்டோவை எல்லாம் தாண்டி சூரிய குடும்பத்தின் கடைசி எல்லையை அடைந்துவிட்டது.
இன்னும் 30,000 ஆண்டுகளில் அது அடுத்த நட்சத்திரமான ரோஸ் 248 ஐ அடைந்துவிடும். ரோஸ் 248ன் புவியீர்ப்பு எல்லைக்குள் அது வந்தால் அங்கிருக்கும் எதாவது கிரகத்தில் விழுந்து உடையலாம்.
ஆக, இம்மாதிரி ஒரு விண்வெளிவீரரின் சடலம் உள்ள விண்கலம், விண்வெளியில் அனாதையாக மிதந்து கொண்டிருந்தால் ஒரு 30,000 முதல் 50,000 ஆண்டுகளில் அது எதாவது நட்சத்திரத்தின் கிரகம் ஒன்றில் விழும் வாய்ப்பு உள்ளது. அது பூமி மாதிரி உயிர்கள் வாழ ஏதுவான கிரகமாக இருந்தால், அங்கே சடலத்தில் இருந்து பாக்டீரியாக்கள் பரவி, உயிர் தளிர்க்கும் வாய்ப்பு உண்டு.
ஆனால் 30,000 ஆண்டு சடலம் மூலம் எப்படி உயிர் உருவாகும்?
பிணங்களில் பாக்டீரியாக்கள் ஏராளமாக உருவாகும். விண்வெளியின் கொடும்குளிரில் ஐஸ்பெட்டியில் வைக்கபட்டது போல சடலமும், பாக்டீரியாக்களும் பாதுகாக்கபடும். அண்டார்டிகாவின் பனிப்பாறைகளுக்கு அடியே பல மில்லியன் ஆண்டுகளாக இப்படி பாதுகாக்கபட்ட பாக்டீரியாக்கள் உள்ளன. விஞ்ஞானிகள் தோண்டி எடுத்ததும் அவை மீண்டும் உயிர்பெற்றன.
ஆக, விண்வெளிவீரரின் சடலம் ஒரு ப்ரிட்ஜ் மாதிரி பாக்டீரியாக்களை பாதுகாத்து எதாவது வேற்று கிரகத்தில் சேர்த்தால், அங்கே கார்பன்டை ஆக்சைடும், சூரியவெளிச்சமும் இருந்தால் கூட போதும். சிலவகை பாக்டீரியாக்களால் தமக்கான உணவை தாமே உருவாக்கிக்கொள்ளமுடியும்.
பூமியைப் போல அதன்பின் கார்பன் & ஆக்ஸிஜன் ஆகி, நீர் உருவாகி, பாக்டீரியாக்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து சில மில்லியன் ஆண்டுகளில் அங்கே பூமி மாதிரி சிங்கம், புலி, டைனசார், மனிதன் எல்லாம் உருவாகிவிடுவார்கள்.
ஆனால் இதற்காக யாராவது விண்வெளியில் சாகட்டும் என நாம் காத்துக்கொண்டிருக்கமுடியாது. பாக்டீரியாக்களை ஐஸ்பெட்டியில் வைத்து, நாமே பக்கத்து நட்சத்திரங்களான பிரக்ஸிமா பி சென்டாரி முதலானவற்றை நோக்கி குட்டி விண்கப்பல்களில் அனுப்பவேண்டியதுதான்.
அணுசக்தியால் பறக்கும் குட்டி ராக்கெட்டுகள் மூலம் அனுப்பினால் இன்னும் வேகமாக போய் சேரும்.
சரி இது நடக்குமா? இதற்கான செயல்திட்டம் நாசாவில் ஜெனெசிஸ் மிஷன் (Genesis Mission) எனும் பெயரில் தயாராவதாக தெரிகிறது.
பார்ப்போம்...இன்னும் எத்தனை ஆண்டுகளில் இப்படி காப்ஸ்யூல்களில் உயிர்விதைகள் மற்ற நட்சத்திரமண்டலங்களை நோக்கி பறக்கின்றன என்பதை.
நன்றி: நியாண்டர் செல்வம்