🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இன்னும் முப்பதே ஆண்டுகளில் மனிதனுக்கு இறப்பே இல்லை என்ற நிலை வரும்?

இறப்பு…. இறப்பு என்கின்ற வார்த்தையைக் கேட்டாலே போதும் எல்லோருக்குமே பயம் வந்துவிடும். உதாரணத்திற்கு ஜெர்மனியை எடுத்துக்கொண்டால்  அங்கே ஒரு மனிதன் சராசரியாக 77 வருடங்கள் வரை உயிருடன் இருப்பான் என்று புள்ளிவிவரத்தில் பார்க்கலாம். இதே போல் தான் ஒரு நாட்டின் சூழ்நிலை, மருத்துவ வசதி போன்ற காரணங்களின் அடிப்படையில் அந்த நாட்டு மக்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உயிருடன் இருப்பார்கள். இப்படிப் பார்த்தால், நாங்கள் எல்லோருமே ஒரு முடிவை நோக்கித் தானே சென்றுகொண்டிருக்கிறோம். அதாவது நமது பூமியில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் இறப்பு என்பது நிச்சயம் தானே? அது… சரி தானே…?

இல்லவே இல்லை என்று விஞ்ஞானம் கூறுகின்றது! 

குறிப்பாகக் கூகுள் (Google) நிறுவனத்தில் பொறியியல் பகுதிக்குப் பொறுப்பாக இருக்கும் (Director of Engineering) ரேய் குர்ஸ்வைல் (Ray Kurzweil) என்பவர் ஒரு நம்ப முடியாத விஷயத்தைக் கூறியிருக்கிறார். இதில் அதிசயம் என்னவென்றால், இவர் கடந்த காலங்களில் கூறிய அதிகமான விஷயங்கள் உண்மையாகவே நடந்து விட்டன. எனவே, இதுவும் சும்மா அறிவியல் புனைவு (Science Fiction) என்று சொல்லிவிட்டுப் போக முடியாது. 

அப்படி அவர் என்ன தான் கூறியிருக்கிறார்? 

ரேய் குர்ஸ்வைல் கணிப்புப் படி இன்னும் ஒரு 30 ஆண்டுகளில் நாம் நமது மூளையில் பதிந்திருக்கும் அனைத்தையும் ஒரு கணினியில் பதிவேற்ற, அதாவது Upload பண்ண முடியும் என்று கூறியிருக்கிறார். 

இதன் விளைவு என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா? 

அப்படி ஒரு நிலைமை வந்தால், நமது உடல் இறந்துவிட்டாலும், நாம் ஒரு கணினியினுள் நமது வாழ்க்கையைத் தொடரலாம் என்பது தான். எனவே எதிர்கால மனிதனுக்கு இறப்பே இல்லை! அதாவது உடல் இறந்தாலும், தனது கனவுகள், நினைவுகள் எல்லாவற்றுடனும் ஒரு செயற்கை வாழ்க்கையைக் கணினிக்குள் தொடரலாம். இதை ஒரு விதமான டிஜிட்டல் வாழ்க்கை என்றும் கூட அழைக்கலாம்.

இந்த விஷயத்தை அடிப்படையாக வைத்து டிரான்சன்டன்ஸ் (Transcendence) என்கின்ற பெயரில் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தைக் கூட எடுத்துள்ளார்கள். அதில் கதாநாயகனாகிய ஜானி டெப் (Johnny Depp) தனது மரணத்திற்குப் பின், தன்னை ஒரு கணினிக்குள் பதிவேற்றி விடுகின்றார். இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் கண்டிப்பாகப் பாருங்கள். எனக்குப் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று தான்! 

மனித மூளை போல் ஒரு அதிசயம் இந்த உலகில் மட்டும் இல்லை, இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை என்பதில் ஒரு வித மாற்றுக்கருத்தும் இல்லை. எனவே, ஒரு செயற்கை மனித மூளையை உருவாக்குவதற்குத் தற்போது இருக்கும் கணினிகள் போதாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். ஆனால், கணினியியலில் மூர்ஸ் லாவ் (Moore’s law) என்று அழைக்கப்படும் ஒரு சட்டம் இருக்கின்றது. அதன் அடிப்படையில் கணினிகளின் கணக்கீட்டு ஆற்றல் ஏறத்தாழ ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இந்தச் சட்டத்தை அடிப்படையாக வைத்துத் தான் ரேய் குர்ஸ்வைல் அவர்கள் 30 வருடங்களில் இருக்கும் கணினிகளுடன் ஒரு செயற்கை மனித மூளையைக் கட்டாயம் உருவாக்க முடியும் என்று கூறி இருக்கிறார். 

முன்னொரு காலத்தில் முடியவே முடியாது என்று கூறப்பட்ட விஷயங்கள், இன்று நமது வாழ்க்கையில் ஒரு சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. அதே போலத் தான் இன்று முடியாது என்று சொல்லும் ஒரு விஷயம், எதிர்காலத்திலும் சர்வ சாதாரண ஒரு விஷயம் ஆகிவிடும்.

நன்றி: SciNirosh

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved