சகல நோய்களுக்கும் சிகிச்சைமுறை அறிந்துள்ள பிக்மி தொல்குடிகள்!
பிக்மிகள் என்றால் ஆப்பிரிக்காவில் வசிக்கும் குள்ளமான தொல்குடிகள் என அறிவோம். ஆனால் பிக்மி (கிரேக்க மொழியில் குள்ளர்) என வெள்ளையர்கள் அவர்களுக்கு பெயர் வைத்தாலும், அவர்களுக்கு தாம் அப்படி அழைக்கபடுவதே தெரியாது. தம்மை அபா (மக்கள்) என அவர்கள் அழைத்துகொள்கிறார்கள்.
முபுட்டி (காங்கோ ஜனநாயக குடியரசில் ஒரு குறிப்பிட்ட குழு)
எஃபெ (காங்கோ ஜனநாயக குடியரசில் மற்றொரு குழு)
அகா (மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் காமரூனில் காணப்படும் ஒரு குழு)
என மூன்று இனக்குழுக்களாக, பல நாடுகளில் இவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள்.
ஒவ்வொரு பிக்மிக்கும் 3000 செடி, மரங்களின் பெயர்கள், அவை எந்த பருவத்தில் பூக்கும், காய்க்கும், எப்போது கனிகளை உண்ணலாம், அவற்றுக்கு வரும் நோய்கள், என சகலமும் தெரிந்துள்ளது. ஒவ்வொரு பிக்மியும் ஒரு மருத்துவருக்கு சமம்.
எலும்பு முறிவு முதல் குணமாக்கவே முடியாத மலேரியா காய்ச்சல் வரை பல நோய்களுக்கு ஒவ்வொரு பிக்மிக்கும் சிகிச்சை முறை தெரியும். அனைவருக்கும் வீடுகள், ஆயுதங்கள் செய்ய தெரியும். ஒவ்வொரு பிக்மியும் ஒரு பயாலஜி, பாட்டனி டிகிரி, மருத்துவர், எஞ்சினியர் டிகிரி படித்தவருக்கு சமம்.
யானைகளை தனியொரு பிக்மி வேட்டையாடுவார். யானைகள் வாழும் பகுதிக்கு ஈட்டியுடன் செல்லும் பிக்மி, யானைகள் உறங்குகையில், ஒரு இளம் யானையை தேர்ந்தெடுத்து, அதன் அடிவயிற்றில், மென்மையான பகுதியில் ஈட்டியை சொருகிவிட்டு ஓடிவிடுவார்.
அதன்பின் அடுத்த சில நாட்கள் அந்த யானை அங்கேயும், இங்கேயும் அலைந்து, ஏதோ ஒரு இடத்தில் உயிரை விடும். அந்த பகுதிக்கு அருகே இருக்கும் பிக்மி கிராமத்துக்கு தகவல் கொடுப்பார். அவர்கள் அந்த யானையை வெட்டி எடுத்து உண்பார்கள்.
ஆக நாம் வேட்டையாடும் யானை, நமது ஊருக்கு பயன்படாது. ஆனால் இன்னொரு கிராமத்துக்கு பயன்படும். அவர்களும் அதே போல ஏதோ யானையை வேட்டையாட, அது நமக்கு உணவாகும். இப்படி ஒரு வித்தியாசமான சோஷலிச சமுதாயம் அவ்ர்களுடையது.
பிக்மிகள் இருக்கும் வரை யானைகள் எண்ணிக்கைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நவீன மனிதன் துப்பாக்கிகளுடன் நுழைந்த பின்னர்தான் ஆப்பிரிக்க யானைகளுக்கு பிரச்சனை ஏற்பட்டது.
பிக்மிகள் உயரம் 4 அடி 11 இஞ்சு. அதாவது 149 செமி. இதற்கு சொல்லபடும் காரணங்கள் பல. ஒரு காரணம் காட்டில் வெப்பமான பகுதியில் வாழ்வதால், அவர்களின் உடல் குள்ளமாக இருக்கிறது என்பதே. குள்ளமான உடலில் குறைவான வெப்பமே உற்பத்தி ஆகும். உடல் சூட்டை குறைக்க உதவும் என்பது இன்னொரு காரணம் பிக்மிகளின் சராசரி ஆயுள் 20 ஆண்டுகள் என்பதே. காடுகளில் நவீன வசதிகள் ஏதுமின்றி பாம்பு கடித்தால் மரணம், யானை மிதித்து மரணம் என பல காரணங்களால் இளவயது மரணங்கள் நிகழ்கின்றன.
பிக்மிகள் உயரம் குறைவாக இருப்பதால் விரைவில் வயதுக்கு வந்துவிடுகிறார்கள். விரைவில் இனப்பெருக்கம் நிகழ்கிறது. சராசரி பிக்மி பெண் ஒன்பது வயதில் வயதுக்கு வந்துவிடுகிறார். பிக்மி பெண்ணுக்கு 12 வயதில் திருமணம் ஆகிவிடும். ஆண்களுக்கு 15 வயதில் திருமணம். சராசரியாக ஒரு பிக்மி பெண் நான்கு முதல் ஆறு பிள்ளைகள் பெறுகிறார்.
ஆக, நாம் வாழுமிடமும், இயற்கையும் நம் வாழ்க்கைமுறையை தீர்மானிக்கின்றன எனும் டார்வினியத்துக்கு சான்று பிக்மிகள்.