🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொரோனரி கால்சியம் ஸ்கோர் மூலம் இதய இரத்த நாள அடைப்பு எவ்வாறு கணிக்கப்படுகிறது?

கொரோனரி கால்சியம் ஸ்கோர் மூலம் இதய இரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு எவ்வாறு  கணிக்கப்படுகிறது ? 

இதயத்திற்கு ஊட்டமளிக்கும் முக்கிய தமனிகளில் சுவர்களில் அடைப்பு ஏற்படுகிறது. அந்த அடைப்பு நாளுக்கு நாள் அளவில் அதிகரிக்கும் போது தமனியின் விட்டத்தைக் குறைக்கிறது. இதனால் இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் குறைகிறது. மேலும் திடீரென இந்த அடைப்புகளில் வெடிப்பு ஏற்பட்டு அதன் விளைவாக இரத்தக் கட்டிகள் உருவாகி ரத்தநாள அடைப்பு ஏற்படும் நிலையும் வருகிறது. 

இதயத்தின் இரத்த நாள அடைப்புகளில் காரை எனும் கால்சியம் இடம்பெற்றுள்ளது. 

இந்த கால்சியத்தின் அளவை அறிந்து கொள்வதன் மூலம் இதய இரத்த நாளங்களில் உள்ள அடைப்பின் சதவிகிதத்தை அறிந்து கொள்ளும் முயற்சியே "கொரோனரி கால்சியம் ஸ்கோர்"  ஆகும்.

இது எக்ஸ்-ரே எனும் ஊடுகதிர் தொழில்நுட்பத்தில் மிகக்குறைவான கதிர்வீச்சுக்குட்பட்டு குறைவான நேரத்தில் செய்யப்படும் பரிசோதனை ஆகும். 

சிடி ஸ்கேன் மூலம் செய்யப்படும் ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் கையின் இரத்த நாளம் வழியாக அடைப்புகளை அடையாளப்படுத்திக் காட்ட ஏதுவாக "மை" வழங்கப்படும். கதிர் வீச்சின் தேவை சற்று அதிகமாக இருக்கும். 

கொரோனரி கால்சியம் பரிசோதனையில் "மை" வழங்கும் தேவையில்லை. 

எனினும், கொரோனரி கால்சியம் பரிசோதனையில் நம்மால் இதய இரத்த நாளங்களில் "கால்சியம் இருக்கிறதா?" எவ்வளவு இருக்கிறது?" என்பதை மட்டுமே அறிந்து கொள்ள முடியும். 

மாறாக, ஆஞ்சியோ பரிசோதனையில் தெரிவது போல இரத்த நாள அடைப்பின் தன்மை, அந்த அடைப்பு ரத்த நாளத்தின் விட்டத்தை எவ்வளவு குறுகலாக்குகிறது போன்றவற்றை கொரோனரி கால்சியம் ஸ்கோர் மூலம் கண்டறிய இயலாது. 

மேலும், கால்சியம் இன்னும் படியத்தொடங்காத அடைப்புகளின் (NON CALCIFIED PLAQUE)  தன்மை குறித்தும் "கொரோனரி கால்சியம் ஸ்கோர்" தகவல்களை வழங்காது. 

கொரோனரி கால்சியம் ஸ்கோர் "பூஜ்யம்" (ZERO) என்று வந்தால், உங்களின் இதயத்தின் ரத்த நாளங்களில் கால்சியம் படிந்த அடைப்புகள் இல்லை என்று பொருள். 

இந்த ஸ்கோர் நூறுக்குள் வந்தால் (<100) MILD CORONARY ARTERY DISEASE) குறைவான இதய இரத்த நாள நோய் என்று அர்த்தம்.

100 முதல் 400 என்ற அளவில் இருப்பின் மிதமான இதய இரத்த நாள நோய் (MODERATE CORONARY ARTERY DISEASE) என்று பொருள். 

400க்கும் மேல் வந்தால் தீவிர இதய இரத்த நாள நோய் (SEVERE CORONARY ARTERY DISEASE) என்று பொருள்.

ஒரு முறை இந்த பரிசோதனை செய்யப்பட்ட பின் ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை செய்யலாம்.

முதல் முறை "ஜீரோ" வாங்கிய நபர், ஐந்து ஆண்டுகள் கழித்தும் "ஜீரோ"  வாங்கினால் (இதை "டபுள் ஜீரோ" என்று அழைக்கிறோம்). அதற்கடுத்த பத்து ஆண்டுகளில் இதய இரத்த நாள நோயினால் மரணம் ஏற்படும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று கருதப்படும். 

பொதுவாக, இந்த கொரோனரி கால்சியம் ஸ்கோர் வருடத்திற்கு 20-25% ஏற்றம் காணும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

மேலும், இந்த கொரோனரி கால்சியம் ஸ்கோர்  என்பது நிக‌ழ்வு நிகழாத தன்மையை கணிப்பதில் அதிக கவனம் செலுத்தும் பரிசோதனை. இதை A TEST WITH  HIGH NEGATIVE PREDICTIVE VALUE என்போம்.

அதாவது, இந்த பரிசோதனையில் நூறு ஸ்கோர் எடுத்தவரை விட பூஜ்யம் எடுத்தவருக்கு, அடுத்த பத்து வருடத்தில் இதய இரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. 

நானூறுக்கு மேல் எடுத்தவரை விட, நூறு எடுத்தவருக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் இதய இரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. இவ்வாறு அடுத்த பத்து ஆண்டுகளில் இதய இரத்த நாள அடைப்பு ஏற்படாமல் இருக்கும் சதவிகிதத்தை கணிக்கும் முயற்சியே இந்த பரிசோதனை. இந்த பரிசோதனை எடுக்கப்பட்டவர்களில் செய்யப்பட்ட ஆய்வில் பரிசோதனை முடிவு மற்றும் அடுத்த எட்டு ஆண்டுகள் உயிரோடு இருந்துவர்கள் ( CUMULATIVE 8 YEAR SURVIVAL RATE) குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 

ஆய்வுட்குட்படுத்தப்பட்டவர்களில் 100க்கு குறைவாக ஸ்கோர் வாங்கியவர்கள் 95% பேர் அடுத்த எட்டு ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தார்கள். 

100-400 வாங்கியவர்கள் 90% பேர் அடுத்த எட்டு ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தார்கள்.

>400 க்கு மேல் எடுத்தவர்கள் 82% பேர் அடுத்த எட்டு ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தார்கள். 

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, இந்த பரிசோதனையில் ஜீரோ வந்தால், நாம் இப்போது செய்து கொண்டிருக்கும் நல்ல விசயங்களை தொடர வேண்டும். தீய பழக்கங்களை நிறுத்த வேண்டும் என்று பொருள்.

மாறாக, மாரடைப்பே தனக்கு வராது என்று இறுமாப்பு கொள்ளக்கூடாது. 400 க்கு மேல் பெற்றால் உடனே நெஞ்சு அடைத்து இறந்து விடுவோம் என்று அச்சப்படாமல், அதற்கடுத்த முயற்சிகளில் இறங்கத் தேவையான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதே. 

சரி, இந்த பரிசோதனையின் முடிவுகளை வைத்து இதய நல சிறப்பு நிபுணர் எத்தகைய சிகிச்சைகளை அறிவுரைகளை வழங்குவார்? 

நீங்கள் "ஜீரோ" எடுத்தால், உங்களுக்கு வாழ்த்து கூறி 

- நல்ல உணவுப் பழக்கங்கள்

- மது/ புகை விட்டொழித்தல்

- தினமும் நடைபயிற்சி

- நல்ல நீண்ட நேர உறக்கம்

- மன அழுத்தம் குறைக்கும் முயற்சிகளை தொடரச் சொல்வார்.

100க்குள் எடுத்தால் - உங்களுக்கு இருக்கும் பல்வேறு இணை நோய்கள் (நீரிழிவு, உடல் பருமன், ரத்த கொதிப்பு), குடும்ப நோய் வரலாறு, தீய பழக்கங்கள், உடல் உழைப்பின்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு அவற்றை சரியான அளவில் பராமரிக்கக் கூறுவார்.

தேவைப்பட்டால், ஸ்டாடின் மாத்திரைகள், ரத்த தட்டணுக்கள் ஒன்றிணைந்து கட்டி உருவாவதைத் தடுக்கும் மாத்திரைகள் வழங்குவார். 

ஸ்டாடின் மாத்திரைகள் இரத்த கொழுப்பு அளவுகளைக் குறைப்பதுடன், இரத்த நாள அடைப்புகளின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கின்றன. கூடவே இரத்த நாள அடைப்பின் அளவைக் குறைக்கின்றன. 

100-400 எடுத்தால் / 400 க்கு மேல் -  உங்களை ஆய்வு செய்து ஸ்டாடின் / இரத்த தட்டணுக்கள் ஒன்றிணைவைத் தடுக்கும் மாத்திரைகள் கூடவே ஆஞ்சியோ பரிசோதனை செய்து அடைப்புகளின் தன்மை மற்றும் அவை இரத்த நாளங்களை எத்தனை சதவிகிதம் அடைக்கின்றன என்பதை அறிந்து, அதற்கேற்றார் போல  அடைப்பை நீக்குவது / அடைப்பு இருக்கும் பகுதியின் விட்டத்தை அதிகரிக்க ஸ்டெண்ட் வைப்பது / அனைத்து தமனிகளிலும் தீவிர அடைப்பு இருந்தால் பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைப்பார்.

பொதுவாக இந்தப் பரிசோதனை 40 வயதைத் தாண்டிய இதய ரத்த நாள அடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ( நீரிழிவு / இரத்தக்கொதிப்பு / உடல் பருமன் / இதய நோய் / சிறுநீரக நோய் / புகைப்பழக்கம் / உடல் பயிற்சியற்ற வாழ்க்கை முறை) அதிகமாக இருக்கும் நபர்களுக்கு இதய நல நிபுணர்கள் பரிந்துரையின் பேரில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை  செய்யப்படும் பரிசோதனை. 

நன்றி : Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர் 


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved