🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உடம்பும், உள்ளமும் கேட்குமே ஒன்ஸ் "மோர்"... எளிய பானத்தில் இத்தனை நன்மைகளா?

விருந்தோம்பலில் மிக முக்கிய இடம் பிடிக்கும் மோர் பல சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இன்றைக்கும் கிராமங்களில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு முதலில் தண்ணீர் கொடுத்து விட்டு பின்னர் மோர் கொடுப்பதை பல வீடுகளில் பார்க்கலாம். 

நம் வீட்டில் தயாரிக்கப்படும் எளிமையான பானமான மோரில் 100 மில்லி லிட்டருக்கு 40 கலோரி சத்துக்கள் இருக்கிறது. புரதம், கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களையும் மோர் தன்னுள்ளே கொண்டுள்ளது.

மார்ச் முதல் ஜூலை வரையிலான கோடை காலத்தில் பலருக்கும் உடம்பு மிக சூடாவதைப் பார்க்கலாம். இதற்கு உஷ்ணத்தின் தாக்கம்தான் காரணமாக அமைகிறது. இயற்கையான பானங்களான இளநீர், பதநீர், மோர் போன்றவைகளை பருக சூடான உடம்பு கொஞ்சம் கூல் ஆகும். செயற்கை குளிர் பானங்களை அதிக விலை கொடுத்து சாப்பிடுவதை விட எளிமையான இயற்கை குளிர்பானங்களான வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய மோர், பானகம் போன்றவைகளை குடிக்க உடல் உஷ்ணம் கட்டுப்படும்.  மோர் குடிப்பதன் மூலம் கோடை காலத்தில் உடம்பில் நீர் சத்து குறைவது தடுக்கப்படும். மேலும், நாம் சாப்பிடும் உணவானது எளிதில் ஜீரணமாகக் கூடிய ஹெல்தி பாக்டீரியாக்கள் மோரில் உள்ளன.

மாதவிடாய் நின்ற பிறகு ஒருவித மன அழுத்தத்தில் இருக்கும் மெனோபஸ் கால 40+ பெண்களுக்கு மோர் ஒரு அற்புதமான அருமருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது.

கெட்டி தயிரில் நிறைய தண்ணீர் கலந்து கொஞ்சம் உப்பு, தேவையான அளவு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படும் நீர் மோர் நம்முடைய உடம்பில் நீர் சமநிலையை பராமரிக்கிறது.  தினமும் மோர் அருந்துவது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு கோடை காலத்தில் ஏற்படும் பல்வேறு தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மோரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்தை சீராக வைப்பதோடு உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. மோரில் உள்ள லாக்டிக் அமிலம் நமது சருமத்திற்கு நல்லது. கோடை காலத்திலும் சருமத்தை மினுமினுப்பாக மோர் உதவுகிறது. தலைமுடியில் ஏற்படும் வறட்சி நீங்கும்.

உடம்பில் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். மோரில் உள்ள ரிபோஃப்ளேவின் உடலின் ஆற்றல் சக்தியை அதிகரிக்கிறது. உடலில் புரத சக்தியை அதிகரிக்கிறது. 100 மில்லி மோரில் சுமார் 116 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது எலும்புகளுக்கும் பற்களுக்கும் நல்லது. தினசரி மோர் குடிப்பதன் மூலம் நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகளையும் பற்களையும் வலுவாக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சிதைவு நோய்களைத் தடுக்க கால்சியம் உதவுகிறது.

கோடை காலங்களில் அதிக காரமான உணவுகள், எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அமில உற்பத்தி அதிகரித்து சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். அவர்களுக்கு மோர் அருமையான மருந்து. ஒரு டம்ளர் மோரில் கொஞ்சம் கருப்பு மிளகு தட்டிப்போட்டு, கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து குடிக்க நெஞ்செரிச்சல் குணமடையும். 

மோரில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சீராக்கி குளுமையை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து மோர் குடிப்பது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை பராமரிக்க மோர் உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு மோர் கலந்த உணவுகளை கொடுப்பதன் அவர்களின் நோய் கட்டுப்படும். மோரில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved