லட்சக்கணக்கான இந்திய காகங்களைக் கொன்று குவிக்கும் பணியில் கென்ய நாடு!
இந்தியாவில் இறந்துபோன நம் முன்னோர்களிம் மறுபிறவியாக நம்பப்படுவதோடு, சனீஸ்வர பகவானின் வாகனமாகவும் புராணங்களில் கூறப்படுவது காகம். காகத்தின் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் கற்பிக்கும் கதைகள் ஏராளம். இப்படி இந்திய மக்களோடு குறிப்பாக தென்னிந்திய மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட காகங்கள் ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்நாட்டில் கொடிய பறவையாகக் கருதப்படும் இந்திய காகங்களை கொல்லவதற்கான பூர்வாங்கப்பணிகளை அந்நாடு தொடங்கியுள்ளது.
கென்ய கடற்கரையோரங்களில் இந்திய காகம் "குங்குரு" அல்லது "குராபு" என்று அழைக்கப்படுகிறது. இக்காகங்கள் இந்தியா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்தும் கென்யாவிற்குள் நுழைந்துள்ளது. இவை பெரும்பாலும் வர்த்தகக் கப்பல்களில் பயணம் செய்வதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் தாண்டி ஆப்ரிக்க நாடுகளுக்குள் வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இதற்கு மாறான கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. அதன்படி, 1890-களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் வேண்டுமென்றே காகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அப்போது பிரிட்டிஷ் பாதுகாப்பில் இருந்த சான்சிபார் தீவுக்கூட்டத்தில் பெருகிவரும் கழிவுப் பிரச்னையைச் சமாளிக்கும் முயற்சியில் காகங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளது. அங்கிருந்து, அவை நிலப்பரப்பு மற்றும் கென்யா கடற்கரை வரை பரவியதாக சொல்லப்படுகிறது.
குங்குரு காகங்கள் முதன்முதலில் 1947 இல் மொம்பாசா துறைமுகத்தில் இருந்ததாக பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் அதனுடன் இணைந்து அதிகரிக்கும் குப்பை மேடுகளால்தான் இந்த பறவைகள் அதிகளவில் பெருகின. குப்பை மேடுகள் பறவைகளுக்கு உணவளிப்பதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் சிறந்த சூழலை வழங்குகின்றன. இவற்றை இயற்கையாக வேட்டையாடும் விலங்கினமும் ஏதும் இல்லை.
இந்திய காகங்கள் பறவைகளை மட்டும் வேட்டையாடுவதோடு நிற்காமல், பாலூட்டிகள், ஊர்வனங்கள் ஆகியவற்றையும் வேட்டையாடுகின்றன. இதனால் பல்லுயிர் மீதான அவற்றின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்துகிறது. மேலும், இக்காகங்கள் மற்ற பறவைகளின் முட்டை மற்றும் குஞ்சுகளைக் கூட குறிவைத்து தாக்கி, அவற்றின் கூடுகளை அழிப்பதன் மூலம், வீவர்ஸ் மற்றும் வாக்ஸ் பில் (Weavers and Waxbills) போன்ற சிறிய உள்நாட்டுப் பறவைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளதாக அந்நாட்டு இயற்கை பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.
உள்ளூர் பறவைகளின் எண்ணிக்கை குறையும் போது, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட தொடங்குகிறது. பறவைகளால் வேட்டையாடப்படும் தீங்கு விளைவிக்கும் விஷப் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும், இது அங்கு வகிக்கும் மக்களின் உயிருக்கு பெரும் ஆபாத்தை ஏர்படுத்தக்கூடும் என்பதால் இந்திய காகங்களை வேட்டையாடும் பணியை கென்ய நாட்டு அரசு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக வாடாமு மற்றும் மலிந்தி ஆகிய நகரங்களில் சுமார் 10 லட்சம் காகங்களை விஷம் வைத்துக்கொல்லும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.