விமான விபத்து நடந்து 56 ஆண்டுகளுக்குப்பின் மீட்கப்பட்ட உடல்கள்!
இமயமலையின் பிர் பஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ள ரோஹ்தாங் கணவாய், லாஹவுல் மற்றும் ஸ்பிதி பள்ளத்தாக்கிற்கான நுழைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலியில் இருந்து 51 கிமீ தொலைவில்,கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது ரோஹ்தாங் கணவாய். மேலும் இது பாங்கி மற்றும் லே மற்றும் லடாக்கின் நுழைவாயிலாகவும் செயல்படுகிறது.
ரோஹ்தாங் என்ற பெயருக்கு 'பிணங்களின் நிலம்' என்று பொருள். இக்கணவாயைக் கடக்க முயன்று உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இயற்கை அழகுக்கு பெயர் பெற்ற ரோஹ்தாங் கணவாய் இந்தியாவிற்கு பூளோக ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கணவாய் பனிப்பாறைகள், சிகரங்கள், லாஹவுல் பள்ளத்தாக்கு மற்றும் சந்திரா நதி ஆகியவற்றின் அழகிய காட்சிகளைக் கொண்டுள்ளது. ரோஹ்தாங்கில் இருந்து கெய்பனின் இரட்டை சிகரங்களும் தெரியும். இந்த கணவாய் செனாப் நதி மற்றும் பியாஸ் நதியின் நீர்நிலைகளுக்கு இடையே உள்ள நீர்நிலையில் உள்ளது.
1968-இல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான (IAF) AN-12 டர்போபிராப் போக்குவரத்து விமானம் பிப்ரவரி 7 ஆம் தேதி நடுவானில் இக்கணவாய் மீது பறந்துகொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில்102 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தின் கடுமையான நிலைமைகள் மற்றும் சவாலான நிலப்பரப்பு காரணமாக தேடுதல் பணிகள் வெற்றிபெற முடியாத சூழலில், விபத்து நடந்து 25 ஆண்டுகள் கழித்து 2003 ஆம் ஆண்டில் தான் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், டோக்ரா சாரணர் குழுவினர் 2005, 2006, 2013 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேடுதல் பணிகளை முன்னெடுத்தனர். இதன் பலானாக 2019-இல் விபத்தில் சிக்கி உயிரழந்த 5 பேர்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது சந்திரபாகா மலைப் பயணத்தின்போது மேலும் நான்கு உடல்களை மீட்டுள்ளது.
இதன்படி, பலியான மூவரின் எச்சங்கள் ஆய்வுசெய்யப்பட்டதில், மல்கான் சிங், சிப்பாய் நாராயண் சிங் மற்றும் கைவினைஞர் தாமஸ் சரண் என அடையாளம் காணப்பட்டுள்ளது. நான்காவது சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை, இருப்பினும் அவர்களின் உறவினர்கள் தொடர்பான விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான விபத்துள்ளாகி 56 ஆண்டுகள் கழித்து விபத்துக்குள்ளானவர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டதில் உறவினர்கள் ஒருபுறம் சோகமும், மறுபுறம் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். மீதமுள்ள உடல்களும் மீட்கப்படும் என்ற நம்பிக்கையோடு தேடுதல் பயணத்தை தொடர்கின்றனர் டோக்ரா சாரணர் குழுவினர்.