🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முதலாம் உலகப்போரில் ஜெர்மனியை வீழ்த்திய பதுங்குகுழி யுத்தம்!

ஜெர்மன் படை பெல்ஜியம் வழியாக பிரான்சின் உள்ளே நுழைய முயல்கிறது. எல்லைக்கோட்டில் பிரெஞ்சு, ப்ரிட்டிஷ் படைகள் அவர்களை எதிர்கொள்கின்றன. எண்ணிக்கையிலும், தொழில்நுட்பத்திலும் வலுக்குறைந்த பிரெஞ்சு-ப்ரிட்டிஷ் படைகள் ஒரு தற்காப்பு உத்தியை கையாள்கின்றன. அதுதான் பதுங்குகுழி யுத்தம் (Trench War).

எல்லையெங்கும் பதுங்குகுழிகளை தோண்டி அதனுள் ஒளிந்திருந்து சுடுகிறார்கள். அந்த காலகட்டத்தில் பதுங்குகுழி யுத்தத்தை சரியாக எதிர்கொள்ளும் தொழில்நுட்பம் இல்லை. அதனால் பதுங்குகுழிகளுக்குள் இருந்து சுடுபவர்களை எதுவும் செய்ய முடியாமல் ஜெர்மானியர்களும் பதுங்குகுழிகளைத் தோண்டி, அதனுள் ஒளிந்துகொண்டு சுட ஆரம்பித்தார்கள். ஆண்டுக்கணக்கில் இந்த யுத்தநிலை நீடித்தது.

Trench Warfare என அழைக்கபட்ட இந்த யுத்தம் எப்போது முடிவடையும் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது. உணவும், ஆயுதமும் இருந்தால் பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த போரை நீட்டிக்கமுடியும். என்ன செய்து குழிக்குள் பதுங்கிபோரிடும் எதிரியை அழிப்பது?.

ஒரு ஆண்டு தொடர்ச்சியாக போரிட்டபின் ஜார்ஜ் போர்வெக் எனும் ப்ரிட்டிஷ் எஞ்சினியருக்கு அந்த ஐடியா தோன்றியது. இரு தரப்புக்கும் இடையே இருக்கும் இடைவெளி ஒரு சில கிலோமீட்டர் தான். நாம் ஏன் ப்ரிட்டிஷ் பதுங்குகுழிகளுக்கு கீழே ஒரு சுரங்கம் தோண்டி ஜெர்மன் பதுங்குகுழிகளுக்கு அடியே சென்று மிகப்பெரிய அளவில் வெடிகுண்டுகளை வெடிக்க வைக்ககூடாது? இரவில் அவர்கள் உறங்குகையில் குண்டு வைத்தால் பல்லாயிரம் ஜெர்மானியர்கள் உயிரிழப்பார்கள்.

இந்த யோசனை தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இதில் பல ரிஸ்க்குகள் இருந்தன. ப்ரிட்டிஷ் வீரர்களுக்கே தெரியாமல் சுரங்கம் தோண்டவேண்டும். காரணம் பல லட்சம் வீரர்களிடம் செய்தி பரவினால் ஜெர்மானியர்களுக்கும் தெரிந்துவிடும். பல கிமீ நீளத்துக்கு சுரங்கம் தோண்டவேண்டும். அதற்கு ஏராளமான ஆட்கள் வேண்டும். களிமண் பகுதி அது என்பதால் சுரங்கம் தோண்ட புது டெக்னாலஜி வேண்டும். சத்தம் வராமல் சுரங்கம் தோண்டவேண்டும். மண்வெட்டி, கடப்பாறைகளை பயன்படுத்தினால் மேலே இருக்கும் ப்ரிட்டிஷ் வீரர்களுக்கு விவரம் தெரிந்துவிடும்.

ஒருவழியாக சத்தமே இல்லாமல் வேலையை துவக்கினார்கள். மண்வெட்டிக்கு பதில் காலால் சுரங்கம் தோண்டும் வகையில் கருவி ஒன்று உருவாக்கப்பட்டது. பலகை ஒன்றில் ஒருவர் சாய்ந்து படுத்துக்கொண்டு, காலால் ஸ்க்ரூ போன்ற கருவியை இயக்கி மண்ணை தோண்டி எடுத்து வீச உதவும் கருவி அது. ஆண்டுக்கணக்கில் ரகசியமாக சுரங்கம் தோண்டினார்கள். 1917 வரை இரு ஆண்டுகள் சுரங்கம் தோண்டும்பணி நடைபெற்றது.

ஜெர்மானிய படைகள் குவிந்திருந்த பகுதிகளின் அடியே சுரங்கம் பல கிளைகளாகச் சென்றது. அதில் 454 டன் வெடிமருந்தை பல இடங்களில் வைத்து நிரப்பினார்கள். பூமிக்கு கீழே 88 அடி ஆழத்தில் இந்த சுரங்கங்கள் இருந்தன. எல்லாம் தயார், இனி வெடிக்கவேண்டியதுதான் பாக்கி.

1917ம் ஆண்டு ஜூன் 7, இரவு 3:17 மணிக்கு இரு தரப்பு வீரர்களும் அசந்து தூங்குகிறார்கள். திடீரென ஒரு நைட்டிங்கேல் பறவை இரவில் பாடுகிறது. அதுதான் சிக்னல். 26 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன. அதுநாள்வரை உலகிலேயே மனிதனால் உண்டாக்கபட்ட மிகப்பெரிய வெடிச்சத்தம் அதுதான் என கூறப்படுகிறது. பெல்ஜியத்தில் வைத்த வெடி லண்டனில் கேட்டது. லண்டன் பல்கலைகழக சுவர்களில் எல்லாம் அதிச்சி உண்டானது. ஏதோ நிலநடுக்கம் ஏற்பட்டதாக லண்டன் மக்கள் கருதினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளலாம்.

ஒரே வினாடியில் பத்தாயிரம் ஜெர்மானியர்கள் சாம்பலானார்கள். ஹிரோஷிமா அணு குண்டு வெடிப்புவரை உலகிலேயே மிக அதிகமான மக்கள் ஒரே நொடியில் இறந்த சம்பவம் அதுவாக தான் இருந்தது.

எல்லையெங்கும் பல மைல் தூரத்துக்கு ஜெர்மானிய படை தெறித்து ஓடியது. அனைத்து இடங்களையும் ப்ரிட்டிஷ் படை பிடித்து முன்னேறியது. அதன்பின் நடந்த கடும்போரில் ப்ரிட்டன் வென்று ஆதிக்கநிலையை அடைந்தது.

போர் முடிந்தபின் ஜெர்மனி தோற்றதற்கு கூறப்பட்ட முக்கிய காரணங்களில் இரண்டாவதாக இந்த சுரங்க குண்டுவெடிப்பு (Battle of Messenes) இருந்தது.

நன்றி:நியாண்டர் செல்வன்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved