உலகிலுள்ள 800 கோடி மக்களின் மூதாதையர்கள் வெறும் 1280 பேர் தானா?
ஆகஸ்ட் 2023ம் மாதம் உலகபுகழ் பெற்ற சயன்ஸ் ஜர்னலில் அந்த ஆய்வு வெளியானது. விஞ்ஞானி ஹூ மற்றும் அவரது சகாக்கள் ஜெனோம் ஆராய்ச்சி எனப்படும் மரபணு ஆய்வை மேற்கொண்டார்கள். "பிட்கோல்" எனும் வகையான மரபணு ஆய்வு பயன்படுத்தப்பட்டது. இப்போது இருப்பவர்களின் மரபணுக்களை எடுத்து, வேர் பிடித்துக்கொண்டே போனால், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நம் முன்னோர் பற்றி தெரியும்.
காலத்தில் முன்னே செல்ல, செல்ல நம் மூதாதையர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. உதாரணமாக, 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலக மக்கள் தொகை சுமார் 15 கோடி பேர் தான். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரிய, சிந்து சமவெளி நாகரிகங்கள் செழித்த காலத்தில் உலக மக்கள் தொகை 3 கோடிதான். அதிலும் வாரிசு இல்லாமல் இறந்தவரக்ள், பிறந்ததும் இறந்தவர்கள், போரில் இறந்தவர்களை எல்லாம் கழித்தால் ஒரு கோடி பேர் தான் பூமியில் தன் மரபணுவை விட்டு சென்று இருப்பார்கள். அது பல்கி பெருகி இன்று 800 கோடி ஆகியுள்ளது.
ஆனால் மரபணு ஆய்வு இன்னும் பின்னே சென்றது. 8,13,000 ஆண்டுகளுக்கு முன்புவரை உலகில் தன் மரபணுவை விட்டுசென்றவர்கள் தொகை 1 லட்சம் என கண்டுபிடித்தார்கள். அதன்பின்னே செல்ல, செல்ல பேரதிர்ச்சி.
8,13,000 ஆண்டுகளூக்கு முன்பு திடீர் என வெறும் 1280 பேராக மக்கள் தொகை (பெற்றோர் எண்ணிக்கை) சுருங்கியதை ஆய்வுகள் காட்டின. ஆய்வு மேலும் காலத்தில் பின் செல்ல, செல்ல இந்த 1280 எனும் எண்ணிக்கை ஆயிரத்துக்கு பக்கமாகவே சமநிலையில் இருந்தது. இதேநிலை சுமார் 9,30,000 ஆண்டு வரை தொடர்ந்தது. அதன்பின்னர் மீண்டும் மக்கள் தொகை 1 லட்சம் ஆனது.

ஆக, கிமு 9,32,024வது ஆண்டில் உலக மக்கள் தொகையில் 99% துடைத்தெறியப்பட்டுள்ளது. 1 லட்சமாக இருந்த பெற்றோர் எண்ணிக்கை (Breeding Individuals) திடீர் என ஆயிரத்துக்கு பக்கமாக வீழ்ந்துள்ளது. அடுத்த 1 லட்சம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சராசரியாக 1280 எனும் அளவிலேயே தொடர்ந்துள்ளது. இந்த அளவு கிமு 815,024ம் ஆண்டில் தான் மீண்டும் அதிகரிக்க துவங்குகிறது.
இந்த 1 லட்சம் ஆண்டுகளில் நடந்தது என்ன? ஏன் திடீர் மக்கள் தொகை வீழ்ச்சி? இன்றைய மனித இனம் முழுக்க அந்த 1280 பேரின் வாரிசுகள் தான்.1 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் 1200 பெற்றோர்கள் என்ற எண்ணிக்கையில் மனிதன் கென்யா, எத்தியோப்பியா, டான்சானியா பகுதிகளில் தப்பி பிழைத்து வாழ்ந்ததாக ஆய்வுகள் காட்டின. இது மக்கள் தொகை அல்ல, இன்றைய 800 கோடி மக்களின் மூதாதையர் அந்த 1280 பேர்.
அந்த 1 லட்சம் ஆண்டு காலகட்டத்தில் மனித எலும்புகூட்டின் படிமங்கள் மிக, அரிதாகவே கிடைத்ததை படிம ஆய்வுகள் காட்டின. அப்போது உலகில் பனிக்காலம் உருவாகி ஆப்பிரிக்காவில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. சகாரா அதுவரை பூத்துகுலுங்கிய பூஞ்சோலையாக, நதிகள், ஏரிகள், காடுகளுடன் இருந்தது. அந்த காலகட்டத்தில் கொடூரமான குளிர் உருவாகி ஆபிரிக்காவின் வடபகுதி காடுகள் மறைந்தன. சவானா எனும் புல்வெளியால் ஆப்பிரிக்கா நிரம்பியது.
ஆப்பிரிக்க சவானா புல்வெளியில் சிங்கம், சிறுத்தை மாதிரியான வேட்டைமிருகங்களுடன் புல்வெளியில் வேட்டையாட முடியாமல் மனிதன் சிறு, சிறு குடிகளாக மாறி குகைகளில் தங்கி வாழ்ந்திருக்கவேண்டும் என கணிக்கிறார்கள்.
1 லட்சம் ஆண்டுகளை 1000 பேராக சமாளித்து மீண்டு எழுந்தது நினைத்துகூட பார்க்கமுடியாத மிகப்பெரும் சாதனை. அந்த சாதனை இல்லாவிடில் இன்று நாம் யாரும் இல்லை. இந்த நிகழ்வை அறிவியலில் பாட்டில்நெக் நிகழ்ச்சி (Bottleneck Event) என அழைக்கிறார்கள்.
நன்றி: நியாண்டர் செல்வன்

