மாவீரனுக்கு சிலை எடுத்த தளபதியாரே சிறப்பு செய்திட வாரீர் - தமிழக முதல்வருக்கு அழைப்பு
மாவீரனுக்கு சிலை ஏடுத்த தளபதியாரே சிறப்பு செய்திட வாரீர் - தமிழக முதல்வருக்கு அழைப்பு!
இந்திய சுதந்திரத்திற்காக முதல் முழக்கமிட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தலைநகர் சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்பதே, தமிழகத்தில் வாழும் 40 லட்சம் இராஜகம்பளத்தாரின் அரைநூற்றாண்டுகால ஒற்றைக்கோரிக்கையாக இருந்துவந்தது. இதற்காக, சமுதாயத்திலுள்ள அனைத்து அமைப்புகளோடு, தெலுங்கு மொழிபேசும் பிற அமைப்புகளும், தனிப்பட்ட தலைவர்களும் பல சமயங்களில் முயற்சி எடுத்துவந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக தன் தேர்தல் அறிக்கையில், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தலைநகர் சென்னையில் சிலையமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தது கம்பளத்தாரின் எண்ண ஓட்டத்தை எதிரொலிப்பதாக இருந்தது. அதனைத்தொடர்ந்து, 2021 சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக, தனது தேர்தல் அறிக்கையில் 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தாலும், உடனடியாக நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளில் ஒன்றாக கட்டபொம்மன் சிலை விசயத்தை எடுத்துக்கொண்டது. அதனடிப்படையில், தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றுக்கொண்ட ஓராண்டுக்குள்ளாகவே மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சிலை வைப்பதாக சட்டமன்றத்தில் அறிவித்தார்.
இன்றைய தமிழக முதல்வரைப் பொறுத்தவரை வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மிகக்கவனமாகவும், தீவிரமாகவும் இருப்பவர். முதல்வரின் இந்தக்குணம், அவர் சென்னை மாநகர மேயராக இருந்த காலத்திலியே இருந்ததாக, அரசியல்வாதிகள் அல்ல பல உயரதிகாரிகளே தங்கள் ஓய்வுக்குப்பின் அறிவித்துள்ளனர். அதுபோலவே கட்டபொம்மன் சிலை விவகாரமும் "வெற்று" அறிவிப்பாக இல்லாமல் "வெற்றி" அறிவிப்பாக இருந்தது என்பதை எதார்த்த வாழ்வில் உணரும் வகையில், அறிவிப்பு வெளியிட்ட கையோடு சிலை அமைப்பதிலும் அதேதீவிரத்தோடு செயல்பட்டு, ஓராண்டுக்குள் பணியை நிறைவு செய்து, காந்திமண்டப வளாகத்திற்கு தானே வந்திருந்து, தன் பொற்கரங்களாலேயே சுதந்திரப்போராட்ட மாவீரனின் சிலையை திறந்து வைத்து சிறப்பு சேர்த்தார் தமிழக முதல்வர்.
இந்நிலையில், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாருக்கு தலைநகரில் சிலை எடுத்த தளபதியே! தமிழக முதல்வரே!, மாமன்னரின் 225-வது நினைவுநாளையொட்டி அக்டோபர் 16-இல் சிலைக்கு சிறப்பு செய்ய வாரீர்!, மாமன்னருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு மரியாதை செய்திட நிலையாணை ஓன்றைத் தாரீர்! என்று வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தது.
இதுசம்மந்தமாக அக்டோபர் 3-ஆம் தேதி சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களைச் சந்தித்து, அவர் வாயிலாக இக்கோரிக்கையை தமிழக முதல்வருக்கு வைத்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று (13.10.2024) இரவு சங்கத் தலைவரிடம் தொலைபேசி வாயிலாக நேரடியாகப் பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கோரிக்கை மனு மாண்புமிகு முதலவ்ரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் நிறைவேற்றித் தருவதற்கான முயற்சியில் தான் தொடர்ந்து கவனம் செலுத்திவருவதாக தெரிவித்தார். மேலும், முதற்கட்டமாக வரும் அக்டோபர் 16-ஆம் தேதி மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாவீரனுக்கு மாலை அணிவித்து சிறப்புச்செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும், புயல் அச்சுறுத்தலைத்தாண்டி தடையேதுமில்லை என்று கூறியுள்ளார்.
எனவே, மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 225-வது நினைவுநாள் தலைநகர் சென்னையில் அனைவரின் கனத்தையும் ஈர்க்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.