🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவீரனின் 225-வது நினைவுநாளை அரசுவிழாவாக நடத்த உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி!

பாஞ்சை பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 225-வது நினைவுநாளையொட்டி அவரின் தியாகத்தைப் போற்றும் வகையில் தலைநகர் சென்னையில் அரசுவிழாவாக நடத்திட ஆணை பிறப்பித்த தமிழக  முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 40 லட்சம் கம்பளத்தார்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரம் வருமாறு,

இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிர் துறந்து, ஆங்கிலேய ஆதிக்கத்திற்கெதிராக மக்களை கிளர்த்தெழச் செய்து, சுதந்திர நெருப்பைப்பற்ற வைத்த பெருமகனார் பாஞ்சை பெருவேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது 225-வது நினைவுநாளையொட்டி, அம்மாவீரனின் தியாகத்தைப்போற்றும் வகையில், அக்டோபர்'16 இல் தலைநகர் சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனாரின் ஆளுயரச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மாலையிட்டு மரியாதை செலுத்திட நிரந்தர நிலையாணை ஒன்றை பிறப்பிக்க வேண்டுமாய் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு அக்டோபர் 3-ஆம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டது.


கடந்த 3-ஆம் தேதி மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள்  வாயிலாக இக்கோரிக்கை மனுவை சங்க நிர்வாகிகள் வழங்கினர். உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித்தருவதாக மாண்புமிகு அமைச்சர் வாக்குறுதியளித்திருந்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் இல்லத்தில் ஏற்பட்ட துயர சம்பவம், நவராத்திரி விடுமுறை மற்றும் கனமழை போன்ற காரணங்களால் இக்கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்கான போதுமான கால அவகாசமும், சூழலும் அமையாமல் போனது. எனினும் கோரிக்கையின் நியாயத்தையும், கம்பளத்தார்களின் உணர்வுகளையும் உணர்ந்த தமிழக முதல்வர், நல்லெண்ண அடிப்படையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாவீரனுக்கு சிறப்பு செய்வார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.


தமிழக முதல்வரும், துணை முதல்வரும் விடிய விடிய மழை பாதிப்புகளையும், நிவாரணப் பணிகளையும் ஆய்வு செய்து வரும் நிலையில், இன்று (16.10.2024) மிக கனமழைக்கான "ரெட் அலர்ட்"டும் விடப்பட்டிருந்தது. இதனால் அமைச்சர் பெருமக்கள் வருவார்களா? என்ற ஐயம் இருந்துவந்தது. ஆனால் இருதினங்களுக்கு முன்பே மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாளை அரசு சார்பில் கொண்டாட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், நிகழ்வில் கலந்துகொள்ள தமிழக முதல்வரிடமிருந்து மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.


வெள்ளநிவாரணப்பணிகளில் முழுமூச்சாக பணியாற்றிவரும் மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வணக்கத்திற்குரிய சென்னை மாநகர மேயர் ப்ரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் அரசு உயரதிகாரிகள் அடங்கிய பெரும்படையோடு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் கிண்டி காந்திமண்டப வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மாவீரன் கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


முன்னதாக, மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு, பீடம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், சிலை எதிரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் உயர்தர சாமியான அமைக்கப்பட்டு, இருக்கைகள் போடப்பட்டிருந்தது. மேலும் ,அரசு அதிகாரிகளோடு, ஐம்பதிற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆக மொத்தத்தில் அரசின் ஏற்பாடுகள் முழுமனநிறைவைத்தருவதாக இருந்தது.



பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கோரிக்கையாகப் பார்க்காமல் 40 லட்சம் கம்பளத்தாரின் வேண்டுகோளாகக் கருதி, நினைவுநாளை அரசு நிகழ்வாக நடத்திட உத்தரவிட்டதோடு, தனது X தளத்திலும் கட்டபொம்மனாரின் தியாகத்தை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ள மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், நினைவுநாளை சிறப்பிக்க வருகைதந்த அமைச்சர் பெருமக்களுக்கும், வணக்கத்திற்குரிய மாநகர மேயர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு கம்பளத்தாரின் சார்பில் கோடானுகோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved