🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராஜகம்பளத்தார் வாழ்வில் ஒளியேற்றிய பெருந்தலைவர் காமராஜரும், கலைஞரும்....

இராஜகம்பள மஹாஜனசங்கத்தின் மேனாள் தலைவர் ஐயா வையப்பநாயக்கர் அவர்களின் 47-வது நினைவுநாளான நேற்று (21.10.2024) மேலமுடி மன்னார்கோட்டையிலுள்ள அவரது நினைவிடத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியம், மேலமுடிமன்னார்கோட்டையில் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர் ஐயா வையப்ப நாயக்கர். 1950 முதல் 1977 வரை 27 ஆண்டுகள் இராஜகம்பள மஹாஜன சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியவர்.

சுதந்திரத்திற்குப்பிந்தைய புதிய இந்தியாவுக்கு இந்த காலகட்டம் எப்படி சவால்கள் நிறைந்ததாக இருந்ததோ, அதுபோலவே இராஜகம்பளத்தார் சமுதாயத்திற்கும் மிகமுக்கிய காலகட்டமாக வையப்ப நாயக்கர் மஹாஜன சங்கத் தலைவராக இருந்த இந்த கால்நூற்றாண்டுகாலம் இருந்ததை வரலாறு உணர்த்துகிறது.



அப்படி என்ன இராஜகம்பள மகாஜன சங்கம் சாதித்துவிட்டது என்ற கேள்வி இன்றைய தலைமுறைக்கு எழும் இயல்பான கேள்வி. இந்தக்கேள்விக்கான பதிலை இன்றைய நிலையிலிருந்து புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருக்கலாம். சமூகத்தின் இயக்கவியல் வரலாற்றைப் பின்னோக்கிச்சென்று, அன்றைய காலத்திற்கு தங்கள் மனதைக் கொண்டுநிறுத்தி, அன்றிருந்த சமூகநிலையையும், கல்வி, அறிவியல், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து வசதிகளையும் கருத்தில் கொண்டு யாராலெல்லாம் பார்க்க முடியுமோ, அவர்களால் மட்டுமே இந்த நுண்ணரசியலைப் புரிந்துகொள்ள முடியும்.

ஐயா வையப்ப நாயக்கர் தனிப்பட்ட குடும்பத்திற்கோ, உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ எவ்வளவோ நல்ல விசயங்களை செய்திருக்கலாம் அல்லது எதுவும் செய்யாமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் இராஜகம்பள மகாஜன சங்கத்தலைவராக அவராற்றிய சேவை அச்சமூகத்திற்கு எந்தவிதத்தில் பயன்பட்டது என்பதை மட்டுமே அச்சமூகத்தில் ஒருவராக இருந்து பார்க்க விழைகிறோம்.

அந்தவகையில், 1950-கள் வரையும், அதற்குப்பின்னரான ஒரு தலைமுறைவரையும் கம்பளத்தார் சமுதாயம் இருந்த நிலையிலிருந்து, இன்று இச்சமூகம் அடைந்துள்ள வளர்ச்சியோடு தொடர்புபடுத்திப் பார்க்கையில் "மிகவும் பிற்படுத்தப்பட்டோர்" பட்டியலில் கம்பளத்தார் சமூகத்தை இணைக்கச் செய்ததே ஐயா வையப்ப நாயக்கர் சமூகத்திற்கு அவராற்றிய ஆகச்சிறந்த பணி.

காடுகளிலும், மலைகளிலும், கட்டாந்தரைகளிலும், வயல்வெளியிலும் நெற்றிவேர்வை நிலத்தில் சிந்த, முதுகுத்தண்டு உடைபட உழைத்து, உழைத்து கூனாகிப்போய், கருத்த நிறத்தில் சுருங்கியதோலோடு மெல்லிய புன்னகை பூக்கும் தாத்தா பாட்டிகளின் புகைப்படங்களில் உள்ளது பெரும்பான்மை குடும்பங்களைச் சார்ந்த முன்னோர்களின் துயர வரலாறு.



காலனியாதிக்கத்தால் இருநூற்றாண்டுகாலமாக விவசாயிகளாகவும், விவசாயக்கூலிகளாகவும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தேய்ந்து, துவண்டு போயிருந்த கம்பளத்தார் சமூகம், மீண்டும் துளிர்த்து வேர்விட்டு வளர்வதற்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கம்பளத்தார் சமூகம் சேர்க்கப்பட்டது எவ்வளவு உதவிகரமாக இருந்துள்ளது என்பதை, பிள்ளைகள் கற்ற கல்வியால் மட்டுமே தங்களும், குடும்பமும் ஒரு கௌரவமான நிலையை எட்டியுள்ளதாக நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரின் மனசாட்சியும் அறியும்.

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை மிகப்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும், அதனால் சமூகம் அடைந்த வளர்ச்சி குறித்துப்பேசும் போது ஐயா வையப்ப நாயக்கரோடு, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரைத் தவிர்த்துவிட்டுப் பேச இயலாது.

அதற்கு முன்பாக, மிகப்பிற்படுத்தப்பட்டோர் பிரிவு உண்டான வரலாறும், அது சந்தித்த சிக்கல்களையும், கடந்துவந்த பாதையும் அறிந்துகொள்வது மிக அவசியமான ஒன்று.

அதுசமயம், வையப்ப நாயக்கர் குறித்துப்பேசும்போதே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு உருவானதின் வரலாற்றையும் அறிந்துகொள்வது சாலச்சிறந்ததாக இருக்கும்.

பிரிட்டீஷ் இந்தியா ஆட்சியில் சென்னை மாகாணத்தில் தீண்டாமைக்கு உள்ளாகும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் 1855-இல் கொண்டு வரப்பட்டது. அதற்காக கல்வி மான்யம் வழங்கும் விதிமுறைகள் (Grant in Aid Code) ஒன்று உருவாக்கப்பட்டது.

கல்விக்காக அரசு நிதி உதவி தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் சிலவற்றுக்கும் கிடைக்கும் வகையில் 1906-லும், 1913-லும் மேற்குறிப்பிட்ட விதிமுறைகளில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

சுதந்திரத்திற்குப்பிந்தைய இந்தியாவில், செண்பகம் துரைராஜன் என்பவரின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தந்தை பெரியார் போராடியதின் காரணமாக, இந்திய அரசியல் சாசனம் முதல் முதலாக திருத்தப்பட்டது. இத்திருத்தம் வழியாக "சமூக, கல்வி அடிப்படையில்" பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் 15 (4) பிரிவு சேர்க்கப்பட்டது.

இந்தப் பிரிவின் கீழ் பயனடைவோர் பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பு மாநில அரசுகளிடமே விடப்பட்டது. இந்த நிலையில், 1931ஆம் ஆண்டு இறுதி வடிவம் தரப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலையே கல்விக்கான சிறப்பு உரிமைகள் வழங்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு முடிவுசெய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.



இதற்கிடையே, 1947ஆம் ஆண்டிலிருந்து பட்டியல் இனப் பிரிவுக்கு வழங்கப்படும் முழு கல்விக் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று பல ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

1954-இல் தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் சம்மேளனம், தங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் கோரிக்கை வைத்தது. இதுவே "மிகவும் பிற்படுத்தப்பட்டோர்" என்ற பிரிவு உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது.

தாழ்த்தப்பட்ட சமூகம் போல் சலவைத் தொழிலாளர் சமூகம் "தீண்டப்படாதவர்களாக" இல்லை என்பதால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைப்பது சரியாக இருக்காது என்று கருதினார் காமராஜர். அதேநேரத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் சிறப்பு உரிமைகளை மட்டும் சலவைத் தொழிலாளர்களுக்கும் வழங்கலாம் என்று முடிவு செய்தார்.

இதனையடுத்து, சலவைத் தொழிலாளர்கள் போலவே அதேநிலையில் உள்ள சமூகத்தினரையும் அடையாளம் கண்டு குறிப்புகளை அனுப்பி வைக்க பல்வேறு துறைகளுக்கும் முதலமைச்சர் காமராஜர் உத்தரவிட்டார். அப்போதுதான் பிற்படுத்தப்பட்டோரிலேயே மிகவும் பின் தங்கியிருக்கும் பல்வேறு வகுப்புகள் அடையாளம் காணப்பட்டு ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது

அதேசமயம், 1956ஆம் ஆண்டு, நேரு பிரதமராக இருந்த ஒன்றிய காங்கிரஸ் ஆட்சியால் நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான "காகா கலேல்கர் குழு" தமிழக அரசின் இந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தனது அறிக்கையில் ஆதரித்ததோடு, இந்தப் பிரிவினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

இந்தப் பரிந்துரையின் அடிப்படை யில் காமராசர் ஆட்சி விரிவாக ஆய்வு செய்து 31.1.1957இல், அரசாணை ஒன்றின் வழியாக (எண்.353) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை அங்கீகரித்தது. 1957 - 58 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 58 வகுப்புகளுக்கு தாழ்த்தப்பட்டோருக்கு வழங்குவதைப் போல கல்விச் சலுகைகளை மட்டும் வழங்க அரசு ஆணை பிறப்பித்தது.

அதுசமயம், முதல்வர் காமராஜரின் மிகநெருங்கிய நண்பராக இருந்த ஐயா வையப்ப நாயக்கர், தனது தனிப்பட்ட நட்பைப்பயன்படுத்தி, தொட்டிய நாயக்கர் சமூகத்தையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க காமராஜரிடன் வலியுறுத்தினார். பொதுவாக எந்த பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ளாதவரான பெருந்தலைவர் காமராஜர், இப்போதுபோல் அதிகாரிகளைக் கேட்கவேண்டும், விசாரணைக்கமிஷன் அமைத்து பரிந்துரை வாங்கவேண்டும் என்று எந்தவித நொண்டிச்சாக்கும் சொல்லாமல், நண்பர் வையப்ப நாயக்கரின் கோரிக்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு, தொட்டிய நாயக்கர் சமூகத்தையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். இதில் முக்கிய அம்சமாக, 1957-வரை தொட்டிய நாயக்கர் என்பது சாதிப்பட்டியலிலேயே இடம்பெறவில்லை என்பதும், வடுகன் என்றே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எப்படியோ தொட்டிய நாயக்கர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தாகிவிட்டது என்று இராஜகம்பள மஹாஜன சங்க தலைவர்கள் மகிழ்ச்சியோடு, மாநிலம் முழுவதும் கிராமம், கிராமமாக சுற்றுப்பயணம் செய்கின்றனர். ஆனால் உண்மையான பிரச்சினையை அப்போதுதான் எதிர்கொள்கின்றனர். அதாவது அன்றைய காலத்தில் சாதிச்சான்றிதழ் பெறுவதற்கான சான்று ஆவணமாக கொடுக்கப்படும் நிலப்பத்திரங்களிலெல்லாம் வடுகன், கம்பளம், கொல்லவர், எர்ரகொல்லா என ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறுவிதமாக சிதறு தேங்காய் போல் சுக்குநூறாக சிதறுண்டுகிடந்ததால், தொட்டிய நாயக்கர் சாதிச் சான்றிதழ் பெறுவதில் பெரும் சிக்கலும், கிடைத்த சலுகையைப் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது.

இதில் வடுகன் என்பதில் கம்மவார் பிரிவினரும் அடங்கியிருந்தனர். இது முன்னேறிய வகுப்பினர் (FC) என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, மீண்டும் தனது நண்பர் காமராஜரிடம் உதவிகேட்டுப்போனார் ஐயா வையப்ப நாயக்கர். அரசாணையைத் திருத்த வேண்டும், அதுவும் ஒரே ஒரு சாதிக்காக. எப்படி முடியும்?

1979-வரை கோடிக்கணக்கான மக்கள்தொகை கொண்ட 68 சாதிகளுக்கு DNT என்று சாதிச்சான்றிதழ் வழங்கியதை, எவ்வித முகாந்திரமும், பரிந்துரையும் இல்லாமல் DNC என்று மாற்றமுடிந்த அரசால், 2014 முதல் மீண்டும் DNT சாதிச்சான்றிதழ் கேட்டு நூற்றுக்கணக்கான முறை போராட்டம் நடத்தியும், பல அமைச்சர்கள், அதிகாரிகளைச் சந்தித்தும், இன்றைய முதல்வர் தேர்தல் வாக்குறுதியாகவே அறிவித்தும், இன்றுவரை அவர்களின் வாக்குறுதியையே நிறைவேற்ற முடியாமல் இருக்கும்போது, தனி நபர் ஒருவர் கேட்கிறார் என்பதற்காக அவ்வளவு சீக்கிரமாக அரசாணையைத் திருத்தி வெளியிடமுடியுமா? என்பதை அரசை அன்றாடம் அணுகுகின்றவர்களுக்கும், அன்றாட அரசியலை அறிந்தவர்களுக்கும் தெரியும்.

ஆனால், தன் நண்பருக்காக ஒரேநொடியில் அரசாணையை திருத்தம் செய்தார் அன்றைய முதலமைச்சர் காமராஜர் என்பது எவ்வளவு பெரிய விஷயம். அதன்படி,1960-இல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் திருத்தம் செய்து அரசாணை (GO:3517 / 18.07.1960 HW) வெளியானது. இந்த திருத்தத்தின் மூலம் தான் தொட்டிய நாயக்கர் சாதியின் உட்பிரிவுகளாக கொல்லவார், சில்லவார், தோக்கலவார், இராஜகம்பளம் மற்றும் தொழுவ நாயக்கர் பிரிவுகளையும் இணைத்து முழுவடிவம் கொடுக்கப்பட்டது. அன்று (1960-இல்) கொடுக்கப்பட்ட வடிவம் தான் இன்று வரை உள்ளது. (இதில் எர்ர கொல்லா விடுபட்டதும், சேர்க்கப்பட்டதும் தனி வரலாறு).



இவ்வாறாக பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்ட தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 58 சாதிகளுக்கு கல்விச் சலுகைகள் வழங்கப்பட்டாலும், தனி இடஒதுக்கீடு என்பது 1989-இல் கலைஞர் மு.கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 58 சாதிகளில், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட தெலுங்கு மொழி பேசும் 19 சாதிகளை நீக்குவதற்கான பரிந்துரையை ஏ.என்.சட்டநாதன் தலைமையிலான முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் செய்ததும், அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அப்பரிந்துரையை தூக்கி கிடப்பில் போட்டதும் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய செய்தியாகும்.

அதாவது, 1969, நவம்பர் 13-ஆம் நாள் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ஏ.என்.சட்டநாதன் தலைமையிலான முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உருவாக்கப்பட்டது. இக்குழு 1970-இல் 300 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வரிடம் வழங்கியது. அந்த அறிக்கையில் கிரிமிலேயர் குறித்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு என பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு செய்திருந்தாலும், ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றிருந்த தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 58 வகுப்புகளின் எண்ணிக்கையை 39 ஆக குறைக்க ஆவண செய்திருந்தது.

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரான ஏ.என்.சட்டநாதன் எதன் அடிப்படையில் இதைச்செய்தார்?

1. சின்னமேளம்
2. ஏகலா
3. ஒட்டர்
4. குலாலா
5. கொல்லவார்
6. சாட்டாடி
7. சாத்தாத ஸ்ரீ வைணவர்
8. சாத்தானி
9. சில்லவார்
10. டொம்மரர்
11. தாசரி
12. தெலுங்குப் பட்டிச்செட்டி
13. தோக்களவார்
14. தொட்டியநாயக்கர்
15. தொழுவநாயக்கர்
16. பட்டுராசு
17.  பெஸ்தா
18. போயர்
19. மகேந்திரா
20. மங்கலவாடு
21. மேதரா
22. மொண்டகொல்லா
23. ராஜகம்பளம்
24. ஜோகி

ஆகிய தெலுங்கு மொழிபேசுவோரை ஆந்திராவைப்பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும்

1. கும்பரர்
2. குருகினிச்செட்டி
3. குறும்பர்
4. கொரச்சாசிவியர்
5. மௌன்டாடன் செட்டி
6. யோகீசுவரர்
7. ராஜகா
8. ஜங்கம்

ஆகிய கன்னட மொழிபேசும் மக்களை கர்நாடகாவைப்பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும்

1. அகசா
2. துளுவர்
3. புரணோபகாரி
4. மடிவாளா
5. ராஜகுல வௌக்குத்தலவர்
6. வெளுத்தேடர்
7. வௌக்குத்தலவநாயர்

ஆகிய மலையாள மொழிபேசும் மக்களை கேரளத்தைப்பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும்

1. நரிக்குறவர் - வடஇந்தியர்

என மேற்படி சாதியினர் அனைவரையும் அந்நிய மாநிலத்தவர்களாக முத்திரைகுத்தி, இடஒதுக்கீட்டுப் பலன்களில் இருந்து விலக்குமாறு பரிந்துரைத்தது செய்திருந்தார். இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருந்த தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 19 சாதிகளும் அடக்கம்.

நல்வாய்ப்பாக, சமூகத்தின் கீழ்தட்டிலிருந்து மக்களோடு மக்களாகப்பழகி, அனைத்து சமூகத்தவர் குறித்தும் தெளிவான பார்வை கொண்டிருந்த அரசியல் முதிர்ச்சியின் காரணமாக, சட்டநாதன் குழு அறிக்கையில் இடம்பெற்றிருந்த நல்ல அம்சங்களை மட்டுமே கலைஞர் எடுத்துக்கொண்டு, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு அளவை 26% லிருந்து 31% ஆகவும், எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டு அளவை 16% லிருந்து 18% ஆகவும் உயர்த்தவும் பயன்படுத்திக்கொண்டார்.



ஏ.என்.சட்டநாதன் குழு பரிந்துரைப்படி கிரிமிலேயர் முறையை கலைஞர் ஏற்கமறுத்ததை 1979-களில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு பின்பற்ற முயற்சி செய்தது. ஆனால் 1980-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு ஏற்பட்ட பெரும் தோல்விக்குப்பின் எம்ஜிஆர் அம்முயற்சியைக் கைவிட்டு பின்வாங்கியதோடு, நெருக்கடியை சமாளிக்க பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 31% லிருந்து 50% ஆக உயர்த்தினார்.

ஆனால் இப்பிரச்சினை இத்தோடு நிற்காமல் உச்சநீதிமன்றத்திற்குப்போனது. அதன் காரணமாக 1982-இல் அம்பாசங்கர் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க வழிவகை செய்தது.

தொடர்ச்சியான எம்ஜிஆர் ஆட்சியில் வன்னியர் சமூகத்தினர் தனிஇடஒதுக்கீடு கேட்டு மிகப்பெரிய போரட்டத்தில் ஈடுபட்டதோடு, பல உயிர்த் தியாகங்களையும் செய்தனர். அப்போது எம்ஜிஆர் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சமயம் என்பதால் இப்போராட்டத்தை கட்டுப்படுத்துவதில் அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப்பிறகு 1989-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அவர்கள், தனி இடஒதுக்கீடு கேட்டுப்போராடிய வன்னிய சமூகத்தினரின் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவர, சட்டநாதன் குழுவின் பரிந்துரை பயன்படுத்திக்கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி இடஒதுக்கீடுக்கு உயிர்கொடுத்தார். அதேவேளையில் அந்த ஆணையின் பரிந்துரைப்படி தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 19 சாதிகளை நீக்கும் பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 



வன்னியருக்கு மட்டுமே தனி இடஒதுக்கீடு கேட்டு தலைவர்கள் முரண்டுபிடித்த நிலையில், சட்டபடியான வாய்ப்புகள் இல்லை என்பதை தெளிவாக விளக்கி, ஏற்கனவே காமராஜர் காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 58 சாதியினரையும் சேர்த்து, வன்னியர் சமூகத்தையும் உள்ளடக்கிய 108 சமூகங்கள் கொண்ட தொகுப்பிற்கு 20% இடஒதுக்கீடு வழங்கி பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்படியாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தொடர்ந்து பல்வேறு சோதனகளைத் தாண்டி, 20% தனி இடஒதுக்கீடு பெற்று ஏறக்குறைய ஒருதலைமுறை (30 ஆண்டுகள்) தாண்டி நீடித்துவந்த நிலையில், 2021-இல் எடப்பாடியார் தலைமையிலான அரசு அதை மூன்றுகூறுகளாக வெட்டி சிதைத்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. நல்வாய்ப்பாக அதையும் இச்சமூகங்கள் ஒற்றுமையாக செயல்பட்டு அரசை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிகரமாக தங்கள் இடஒதுக்கீடைத் தக்கவைத்துக்கொண்டுள்ளதற்கு, இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சமூகமும் இம்மண்ணுக்கு செய்துள்ள தியாகங்களே காரணமாக இருக்கமுடியும்.

இப்படி மிகநெடிய வரலாறுடைய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், முதல்வரிடம் தனக்கிருந்த தனிப்பட்ட நட்பை, தொட்டிய நாயக்கர் சமூகத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொண்டதோடு, பல்வேறு பிரிவுகளாக சிதறிக்கிடந்த சமூகத்தை தொட்டிய நாயக்கர் என்று ஒரேகுடையின் கீழ் கொண்டுவந்து, இன்று லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த மூலகாரணமாக இருந்தவர் ஐயா வையப்ப நாயக்கர். பெருந்தலைவர் காமராஜரும், கலைஞர் கருணாநிதி அவர்களும் அதிகாரம் என்ற நெருப்புக்குச்சியால் கம்பளத்தார்கள் வாழ்வில் ஒளியேற்றிய பெருமக்களாக இருந்துள்ள அதேவேளையில் ஐயா வையப்ப நாயக்கர் "திரி" யாக இருந்து வெளிச்சம் கொடுத்தவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

ஐயா வையப்ப நாயக்கரின் சமுதாயப்பணிக்குத் தலைவணங்கி ஆண்டுதோறும் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று (21.10.2024) நடைபெற்ற அன்னாரின் 47-வது நினைவுநாளில் மேலமுடி மன்னார்கோட்டையிலுள்ள அவரது நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் முன்னாள் கவுன்சிலர் வை.பெருமாள், வை.மலைராஜன், வை.பா.மூர்த்தி, வழக்கறிஞர் தனபால் ஆகியோருடன் இராஜகம்பளம் (தொட்டிய நாயக்கர்) மகாஜனசங்கத் தலைவர் மா.மாரைய்யா, திருச்சுழி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூக்கையா, ஊராட்சிமன்ற மு.தலைவர் விஜயராமு, போலீஸ் சந்திரன், பி.வி.பாண்டியன், கூட்டுறவு உதவி இயக்குநர் அழகர்சாமி, வழக்கறிஞர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், ஆண்களும், பெண்களுமாக நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களும் கலந்துகொண்டு ஐயா வையப்ப நாயக்கர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved