அழியும் பூச்சிகள் - சுருங்கும் பூக்கள் - குறையும் தேன் உற்பத்தி : பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் மாறுதல்
பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் பூக்கள் மகரந்த சேர்க்கைக்கு அவற்றை நம்பியில்லாமல் தன்மகரந்த சேர்க்கை முறைக்கு மாறுகின்றன என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இப்போது பிரான்சில் பூக்கும் காட்டுப்பூக்கள் சிறிய அளவில், குறைவான தேனை உற்பத்தி செய்யும் பூக்களாக பரிணாம மாற்றம் அடைந்துள்ளன என்று இந்த ஆய்வு கூறுகிறது.
சுருங்கும் பூக்கள், குறையும் தேன் உற்பத்தி!
மகரந்த சேர்க்கை நடைபெற உதவும் பூச்சிகள் பெரும் எண்ணிக்கையில் அழிந்து விட்டதால் இவை தங்கள் அளவைக் குறைத்து சிறிதாக பூக்கத் தொடங்கி விட்டன. பாரிஸ் நகருக்கு அருகில் இருக்கும் பூந்தோட்டங்களில் வளரும் பான்சீஸ் (Field Pansies) எனப்படும், வயோலா ஆர்வென்சிஸ் (Viola Arvensis)) என்ற அறிவியல் பெயருடைய பூக்கள் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் பூத்ததை விட இப்போது 10% சிறிதாக பூக்கின்றன. 20% தேனை குறைவாக சுரக்கின்றன.
இந்தப் பூக்களில் இருக்கும் தேனை அருந்த பூச்சிகள் முன்பை விட குறைவாகவே வருகின்றன. அதிக தேனைச் சுரந்து பெரிய வடிவத்தில் பூத்து தங்கள் அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளைக் கவர்ந்திழுக்க இப்போது அவசியமில்லை. இதனால் பூக்கள் இந்த பரிணாம மாற்றம் அடைகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“பான்சீஸ் பூக்கள் பூச்சிகளை விட்டு விலகுகின்றன. அவற்றின் மகரந்த சேர்க்கை செய்யும் முறை மாறுகிறது. பூச்சிகளின் உதவியில்லாமல் தன் மகரந்த சேர்க்கை செயல்முறையைப் பின்பற்றுகின்றன. ஒவ்வொரு பூவும் தமக்குள்ளேயே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்த செயல்முறை குறைந்த காலத்திற்கு சரியாக இருக்கும். ஆனால் வருங்கால சூழல் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் திறன் இதனால் அவற்றிடம் குறையும்” என்று பிரான்ஸின் அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையத்தின் ஆய்வாளரும் ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவருமான பியர் ஆலிவியா செப்டு (Pierre-Olivier Cheptou) கூறுகிறார்.
பூச்சிகளுக்காக பூக்கள் தேன் சுரக்கின்றன. இதற்குப் பதில் பூச்சிகள் மகரந்தத்தூளை அதே இனத்தைச் சேர்ந்த மற்ற பூக்களுக்கு எடுத்துச் சென்று கொடுக்கின்றன. ஒருவருக்கொருவர் பயனுள்ள விதத்தில் உதவி செய்து வாழும் இந்த சக உதவி வாழ்க்கை பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பரிணாம மாற்றத்தால் நிகழ்ந்து வருகிறது. ஆனால் பூக்களும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களும் இப்போது ஒரு தீய சுழற்சியில் (Vicious Cycle) சிக்கிக் கொண்டுள்ளன.
தாவரங்கள் குறைவாக தேன் சுரப்பதால் பூச்சிகளுக்கு கிடைக்கும் உணவு குறையும். இதனால் உணவு உற்பத்தி குறையும். இந்தப் பூக்கள் துரிதமாக இத்தகைய பரிணாம மாற்றத்தை அடைவது வியப்பை ஏற்படுத்துகிறது. ஐரோப்பா முழுவதும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. 1999 முதல் 2016 வரையுள்ள காலத்தில் பொறிகளில் சிக்கிய பூச்சிகளின் ஒட்டுமொத்த எடை 75% குறைந்துள்ளது என்று ஜெர்மனியில் உள்ள இயற்கை வள மையங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.
"தாவரங்கள் ஏற்கனவே தங்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கி விட்டதால் மகரந்த சேர்க்கை செயல்முறையில் நிகழும் இந்த மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் எளிதில் மீட்க முடியாதவை. அயல் மகரந்த சேர்க்கை குறைவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியர் மற்றும் மாண்ட்பிலியர் (Montpellier) பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வுமாணவர் சாம்சன் அக்கோக்காபிடல் (Samson Acoca-Pidolle) கூறுகிறார்.
1990 மற்றும் 2000ம் ஆண்டுகளில் தேசிய தாவரவியல் சேகரிப்புக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பான்சீஸ் செடிகளின் விதைகளை நட்டு வளர்த்து முளைக்கச் செய்யப்பட்டன. இந்த முறை உயிர்த்தெழுதல் சூழலியல் (“Resurrection Ecology” என்று அழைக்கப்படுகிறது. வயோலா ஆர்வென்சிஸ் பூக்களின் நான்கு இனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வுக்குழுவினர் ஆராய்ந்தனர்.
பூக்களில் நிகழ்ந்த மாற்றம் தவிர அவற்றின் இலை அளவு, தாவரத்தின் ஒட்டுமொத்த அளவு போன்ற பண்புகள் மாறவில்லை என்று புதிய தாவரவியலாளர்கள் (Journal New Phytologist) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளத இது குறித்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. பூக்கள் பூச்சிகளைக் கவர்வதை நிறுத்திவிட்டால் பிறகு ஒரு தாவரம் பெரிய அளவில் பூக்களை பூக்க வைப்பதிலும், அவற்றில் அதிக தேனை சுரப்பதிலும் ஆற்றலை வீணாக்குவதில் பொருளில்லை. இதை உணர்ந்தே தாவரங்கள் இவ்வாறு செய்கின்றன.
கடந்த இருபது ஆண்டுகளில் இந்த வகை பூக்களில் தன்மகரந்த சேர்க்கை 25% அதிகரித்துள்ளது என்று முந்தைய ஆய்வு கூறுகிறது. “பரிணாம மாற்றம் நம் கண் முன்பே நிகழ்கிறது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. முன்பு மகரந்த சேர்க்கை நிகழ உதவிய உயிரினங்கள் ஏராளமாக இருந்தன. இன்று குறைந்து விட்டன. இதனால் பூக்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்கு அவசியமான மகரந்த சேர்க்கை வழிமுறையை மாற்றிக் கொண்டுள்ளன. இது திடுக்கிட வைக்கும் ஒன்று. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம மாற்றத்தின் மூலம் நிகழ்ந்து கொண்டிருந்த ஒன்றை, கடந்த ஐம்பதாண்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் தாவரங்கள் அதை நிறுத்திக் கொண்டு விட்டன” என்று லங்கஸ்ட்டர் (Lancaster)) பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் பிலிப் டாங்கர்ஸ்லி (Dr Philip Donkersley) கூறுகிறார்.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் இது பற்றி பல ஆய்வுகள் நடந்துள்ளன. என்றாலும், உலகம் முழுவதும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் குறைந்து வருகின்றன. பனிப்பாறையின் உருகும் மேற்பகுதியைப் போன்றதே இது. தாவர உயிர்ப் பன்மயச் செழுமை நிறைந்த இடங்களில் காட்டுத் தாவரங்கள் பலவும் இது போல தங்கள் மகரந்த சேர்க்கை வழிமுறைகளை மாற்றிக் கொண்டிருக்கலாம்.
அபிடேயே தேனீ பெருங்குடும்பத்தில் பாம்பஸ் இனத்தைச் சேர்ந்த பம்பிள் தேனீக்கள் (Bumble Bees) அல்லது வண்டுத்தேனீக்களால் ஐரோப்பாவில் மகரந்த சேர்க்கை நடைபெறும் ஃபாக்ஸ் க்ளவுஸ் (Foxgloves) என்ற பூக்கும் தாவரம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கோஸ்டரிக்கா மற்றும் கொலம்பியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இத்தாவரம் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்களை நம்பியில்லை. மாறாக இவற்றில் மகரந்த சேர்க்கை இப்போது ஹம்மிங் பறவைகளால் நடைபெறுகிறது.
இத்தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடக்க ஹம்மிங் பறவைகளுக்கு உதவும் வகையில் பூக்களின் வடிவம் மாறியுள்ளது. இது போன்ற நடைமுறையே ஆக்கிரமிப்பு உயிரினங்களாக புதிய சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குக் குடியேறிய பல தாவரங்கள் செய்கின்றன. தன்மகரந்த சேர்க்கை செய்ய இயலாத தாவரங்கள் கூடுதலான மகரந்தத்தூளை உற்பத்தி செய்வது போன்ற வேறு வழிகளைப் பின்பற்றுகின்றன. மகரந்த சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் குறைந்துவிட்ட சூழ்நிலையில் இவை மற்ற தாவரங்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது.
இதனால் இனப்பெருக்கத்திற்கு வழிகாட்டியாக இருந்த மகரந்த சேர்க்கை செயல்முறையை தாவரங்கள் மாற்றிக் கொண்டுள்ளன. “தன்மகரந்த சேர்க்கை செய்யக்கூடிய தாவரங்களில் இந்த பண்பு மாற்றம் ஏற்பட்டுள்ளது. வாழும் இடத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதை விட இனத்தை நிலைநிறுத்த இனப்பெருக்கம் இன்றியமையாதது. இதனால் இவ்வாறு நிகழ்கிறது” என்று க்யூ (Kew) தாவரவியல் பூங்காவின் (Royal Botanic Gardens, Kew) ஆய்வாளர் பேராசிரியர் ஃபில் ஸ்டீவென்சென் (Prof Phil Stevenson) கூறுகிறார்.
பூக்களில் நடைபெறும் திடுக்கிட வைக்கும் இந்த மாற்றம் நாளை மனித வாழ்வை பல வகைகளில் பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.