கழுகுகளை அழிவிலிருந்து காப்போம் - சுற்றுச்சூழலை பாதுகாப்போம்
கழுகுகளின் கணக்கெடுப்பு முடிவு
ஊட்டச்சத்து மறுசுழற்சி, மண் மற்றும் நீர் அசுத்தங்களை அகற்றுதல் மற்றும் நோய்கள் பரவுவதை ஒழுங்குபடுத்துதல் போன்ற சேவைகள் மூலம் சுற்றுச்சூழல் பராமரிப்பதில் கழுகுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, கிரிஃபோன் கழுகுகள், விலங்குகளின் சடலங்களிலிருந்து பெறப்பட்ட கேரியன்களை அதிக அளவில் உட்கொள்கின்றன, உணவு வலைகள் மூலம் ஆற்றல் பரிமாற்றத்தை ஆதரிக்கின்றன. காட்டு நாய்கள் போன்ற நோய்தொற்றுடைய விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் நோய்கள் பரவமால் தடுக்கிறது.
சுற்றுச்சூழலை பேணிக்காப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் கழுகள் இனம் வேகமாக அழிந்துவருகிறது. எனவே இதனைத் தடுக்கும் வண்ணம் கழுகுகள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசுகள் ஆர்வம் காட்டிவருகின்றன. முதற்கட்டமாக கழுகுகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
அதன்படி, தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழ்நாடு அரசு வனத்துறை நடத்திய ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இக்கணக்கெடுப்பானது, பில்லிகிரி ரங்கநாத சுவாமி கோவில் புலிகள் காப்பகம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதுமான பகுதிகளில் நடத்தப்பட்டது. வாண்டேஜ் பாயின்ட் எண்ணிக்கை முறையைப் பின்பற்றி நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பில் 139 வான்டேஜ் பாயின்ட்களில் நான்கு அமர்வுகளாக இரண்டு நாட்களில் 8 மணிநேரம், அனைத்து 139 வான்டேஜ் புள்ளிகளிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனடிப்படையில் 320 கழுகுகள் கண்டறியப்பட்டதாக தமிழ்நாடு வனத்துறை தெரிவித்துள்ளது.
தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரித்து பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு, தலைமை வனஉயிரினக் காப்பாளர் தலைமையில் மாநில அளவிலான கழுகுகள் பாதுகாப்புக் குழுவை 2022ஆம் ஆண்டே அமைத்திருந்தது. மேலும், கழுகுகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் கால்நடை சிகிச்சைக்காக விற்கப்படும் டிக்ளோஃபெனாக் மருந்து விற்பனைக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் மூலம் தடை ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலமுறை மருந்து கட்டுப்பாட்டு துறையினரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட மருந்தை விற்பனை செய்ததற்கு 104 உற்பத்தியாளர்கள், மல்டி டோஸ் டிக்ளோஃபெனாக் விற்பனையாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது.
கழுகுகளுக்கான உணவு ஆதாரத்தை அதிகரிக்கும் நோக்குடன் இதுவரை இருந்து வந்த காட்டுயிர் சடலங்களை புதைக்கும் நடைமுறையை மாற்றி, பிரேத பரிசோதனைக்குப் பின் அந்த சடலங்கள் வெட்ட வெளியில் இடப்படுவதாவும். தமிழ்நாடு அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்து சூழல் சமநிலையை எய்த இயலும் எனவும் வனத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.