"நக்கீரன்" கண்ட நாயகன் க.சுப்பு அவர்களின் 13-வது நினைவுநாள்!
வழக்கறிஞர், தொழிற்சங்கவாதி, ஆகச்சிறந்த பேச்சாளர், சட்டமன்ற உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், நக்கீரன் பத்திரிக்கை நிறுவனர் என பல்வேறு துறைகளில் கால்தடம் பதித்து அனைத்திலும் முத்திரை பதித்த வெற்றித்திருமகன் க.சுப்பு.
அரசியல் வானில் மழையாய்ப்பொழிந்தவர். கலைஞரின் சுட்டுவிரலாய் சட்டமன்றத்தில் சண்டமாருதம் செய்தவர். உலக வரலாற்றில் இருமுறை அழித்தொழிக்கப்பட்ட கோட்டையாம் மாவீரன் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை கலைஞர் கருணாநிதி எனும் சிற்பியைக்கொண்டு மீட்டெடுத்த அழியாப்புகழுக்குச் சொந்தக்காரராய் என்றும் நிலைத்து நிற்பவர் க.சுப்பு. நானிலம் போற்றும் நாவண்மையால் பகைவரையும் வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவராய் நம்மோடு வாழ்ந்து மறைந்தவர் க.சுப்பு.
பிறப்பழிக்கும் இப்புவியால், தின்று செரிக்க இயலாப் புகழ் பரப்பிச்சென்ற கம்பளத்தார் குல காவிய நாயகன் க.சுப்பு அவர்களின் 13-வது நினைவுநாளில் (அக்டோபர் - 29) அன்னாரின் புகழைப் போற்றிடுவோம்.
வாராது வந்த மாமணியே
வேராக நின்றெம்மை
வீழாமல் காத்து வந்த - கம்பளத்தாரின்
போர்க்குண நாயகனே- எங்கள் உயிரே!
எழுத்தென்றும் - சொல்லென்றும்
பொங்கும் கடல் அலையாய்
புதுக் கருத்தால் சிந்தைக்குள்
புகுந்து நிலைத் திட்டாய்!
திமுகழகக் கூட்டத்தில் க.சுப்பு
பேசுகின்ற செய்தி கேட்டால்
காளான்கள் முளைத்து போல்
மக்கள் ஒற்றைக்காலில் நின்று
குடைபிடித்து உன் பேச்சுமழையில்
நனைந்தது தானே தமிழக
அரசியல் களம் கண்ட வரலாறு!
மும்முறை களம் வென்றாய்
இருமுறை சட்டமன்ற உறுப்பினராய்
ஒருமுறை மேலவை உறுப்பினராய்
மன்றம் கூடினால் அதில்
மன்னவன் நீயன்றோ!
தினசரிகள் செய்தியிட
மாலையில் மயங்குவதும்
காலையில் கருத்தரிப்பதும்
க.சுப்புவின் பேச்சில் தானே!
முத்தமிழறிஞரிடம் நீ
முரண்பட்டு நின்றாலும்
ஆரத் தழுவிக்கொள்ள
அன்பொழுகச் சென்றாலும்
உன் பேச்சு மகுடிக்கு
இதயத்தையே தந்தாரே!
எல்லா மனிதனின் வாழ்விலும் ஒரு வரலாறு இருக்கிறது என்ற சேக்ஸ்பியரின் கூற்றை மெய்ப்பிக்க கம்பளத்தார் குலத்தில் பிறந்த அரிய பொக்கிஷம் நீ. நமது நெஞ்சமெல்லாம் நீக்கமற நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் க.சுப்பு, நமக்காக ஓய்வின்றி உழைத்த, ஓய்வறியா உழைப்பாளி ஓய்வெடுக்க சென்ற நாள் இந்நாள்.
அறிவுக் களஞ்சியமே, கருவூலமே, ஆற்றலின் உறைவிடமே, உன் அன்பும், அறிவும் எம்மை வழிநடத்தும். நீ நடந்த தடத்தில் நடந்து பணியாற்ற உன்னையே நம்பியிருக்கின்றோம்.
காலத்தால் அழியாத ஓவியமாக நின்றிட்ட க.சுப்பு நின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்.
வை.மலைராஜன் பி.ஏ,
மாவட்ட அமைப்பாளர்
திமுக, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை
விருதுநகர் வடக்கு மாவட்டம்.